
''காத்தவராயா, பாவாடராயா, எங்காவல் தெய்வமே... இன்னைக்கு தொழிலு, அமோகமா நடக்கணும்பா...'' என்றபடி, சாமி படங்களுக்கு கற்பூரத்தை காட்டி, இரு கண்களிலும் ஒற்றி எடுத்தாள், பூவாத்தா.
பெயருக்கேற்றார் போல் பூ விற்கும் தொழில் தான். ஆனால், அவள் தொழிலுக்கும், பேச்சுக்கும் துளி கூட சம்பந்தம் இருக்காது. சகட்டுமேனிக்கு வார்த்தைகள் விழும்போது, அழுகின பூவின் நாற்றம் தான். என்ன செய்வது, குடிகார கணவனை வைத்து, இரண்டு குழந்தைகளை பசியாற்ற வேண்டும். இந்த பொல்லாத உலகில் செதுக்கிய சிலை போல், அழகாய் இருக்கும் தன்னையும் காப்பாற்றி, வாழ்க்கை நடத்த வேண்டும்.
அந்த ஏரியாவில் உள்ள யாருக்குமே அவளை பிடிக்காது. முக்கியமாக, கண்மணி குடும்பத்தினர், அவளை கண்டாலே ஏதோ கரப்பான் பூச்சியை கண்டது போல், அசூசையோடு முகத்தை திருப்பி செல்வர். அதிலும், கல்லுாரியில் படிக்கும் கண்மணியை, கேட்கவே வேண்டாம்.
காலை, கல்லுாரி செல்வதற்காக, வீட்டிலிருந்து பேருந்து நிலையம் கிளம்பினாள், கண்மணி. அப்போது, பூவாத்தா கணவன், மயில்சாமியின் நண்பன், ''ஏம்புள்ள... மயில்சாமி தான் மேலுக்கு முடியாம அப்பப்ப ஆஸ்பத்திரி போகுதுல்ல... செலவுக்கு என்ன பண்ற புள்ள,'' என்றான்.
''...த்துத்தேறி... புள்ள கிள்ளன்ன, 'டாப்' எகிறிடும்... குடும்பத்தை பாத்துக்க எனக்கு தெரியும், நீ கம்முன்னு போ... ரொம்ப தான் அக்கறை... சோமாரி... ஓங்கத எனக்கு தெரியும்... எடத்தை காலி பண்ணு...
உன், 'டார்ச்சர்' தங்க முடியாமதானே, எவங்கூடவோ ஓடிப்போனாள் பெண்டாட்டி,'' என்றாள், பூவாத்தா.
காதை பொத்தி, வேக வேகமாக நடையை கட்டினாள், கண்மணி.
மாலை -
வீட்டில், அப்பா - அம்மாவுடன், இதை பற்றி தான் விவாதித்தாள், கண்மணி.
''அம்மா... இந்த வீடே வேண்டாம்மா... வேற எங்காவது போயிடலாம்... இந்த பொம்பளை பண்ற அழும்பு தாங்கல... தினமும், கண்டவர்களும் வருகின்றனர்... எல்லாருடனும் சண்டை போடுகிறாள்... மிக மோசமான வார்த்தைகளால் திட்டுகிறாள்... அசிங்கமாக இருக்கிறது,'' என்றாள்.
''போதுண்டீ... சும்மா புலம்பாத... நமக்கு இருக்கற வருமானத்துக்கு, இவ்வளவு குறைந்த வாடகைக்கு, இதை விட பெரிய வீடு கிடைக்காது... ஊர் வாயை, நாம் மூட முடியாது. எனவே, இதையெல்லாம் காதில் போட்டுக்காமல் காலேஜுக்கு போய், ஒழுங்கா படிக்கிற வழியை பாரு... புரிஞ்சுதா,'' என்றாள், அம்மா.
'சே... ஏதாவது பிரச்னை, இடைஞ்சல் என்று சொன்னால், நமக்கு தான் உபதேசம்... தினமும் இந்த நாராசங்களை எல்லாம் சகித்து வாழ வேண்டும் போலிருக்கிறது... நாவடக்கம் துளியும் இல்லாத ஒரு பொம்பளை, அதுக்கு எல்லாரும் சப்போர்ட்...' என, நினைத்துக் கொண்டாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களுக்கு, எல்லாம் அமைதியாகவே சென்றது. காரணம், குடித்து குடித்து, குடல் வெந்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான், பூக்காரியின் கணவன்.
அப்பாடா என்றிருந்தது, கண்மணிக்கு.
அன்று மாலை, கல்லுாரியிலிருந்து வரும்போது, பூவாத்தா வீட்டில் ஒரே ஒப்பாரி. உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினரின் கூட்டம்.
பூக்காரியின் கணவன், இறந்து விட்டான்.
சற்றே ஆவல் மேலிட, அவள் வீட்டை, தன் வீட்டிலிருந்தே கண்காணித்தாள், கண்மணி.
பூக்காரியின் உறவுக்காரி ஒருத்தி, ''என் மகாராசாவே, கொடல் வெந்து போயிட்டியே... எங்கண்மணி ராசாத்தியை தவிக்க விட்டு போயிட்டியே... ஐயோ,'' என்று மூக்கை சிந்தி, சுவற்றில் தேய்த்தாள்.
இம்மாதிரி பலவகையான ஒப்பாரிகள்... ஆனால், உணர்ச்சிகளற்ற மரம் போல இருந்தாள், பூவாத்தா. தம்பி ராக்கப்பனிடம், ''டேய் ராக்கு... இது இரண்டுக்கும், ஓட்டல்ல டிபன் வாங்கிக் கொடுத்து கூட்டியா... ஏன்னா, பெரியவன் ராஜேஷ் தான், கொள்ளி போடணும்... புள்ள வயறு காலியா இருக்க வேணாம்... என்ன புரியுதா... காதும் காதும் வெச்ச மாதிரி பண்ணு,'' என, 10 வயது கூட நிரம்பாத, இரண்டு குழந்தைகளையும், அவனுடன் அனுப்பி வைத்தாள்.
கண்மணிக்கு ஒரே ஆச்சரியம்...
'என்ன தான் குடிகாரனாக இருந்தாலும், அடித்து, உதைத்தாலும் இவனோடு வாழ்ந்த வாழ்க்கை பொய்யாகி விடுமா என்ன... ராட்சசியாக இருக்கிறாளே... அப்பா முகத்தை பார்த்து, குழந்தைகளை சற்று நேரம் கூட அழ விடாமல் பசியாற சொல்கிறாளே... என்ன பொம்பள இவள்... என்ன இருந்தாலும், கைநாட்டு கைநாட்டு தான்...' என்ற எண்ண அலைகளில் சிதறுண்டு கிடந்தாள், கண்மணி.
பூக்காரியின் கணவனது காரியங்கள் முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பியது, பேட்டை.
காலையில் கல்லுாரிக்கு செல்ல, பேருந்துக்காக காத்திருக்கையில், தலை நிறைய கதம்பத்தோடும், நெற்றி நிறைய குங்குமத்தோடும், சுங்கிடி சேலையில், வியாபாரத்தில் மும்முரமாக இருந்தாள், பூவாத்தா.
ஒரு அசூசையுடன் ஏதோ மிதிக்க கூடாததை மிதித்து விட்டதை போல், அவளை பார்த்தாள், கண்மணி.
ஆனாள், அவளோ, 'மல்லி, ரெண்டு முழம், 10, ரெண்டு முழம், 10' என்று, கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தாள்.
'பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில், இவளால் எப்படி இப்படி... சரி... இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றாலும், படிக்காத இவர்களை போன்றோர், ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் இதையெல்லாம் கண்மூடித்தனமாக பின்பற்றுவரே...' என, நினைத்து கொண்டாள்.
பூவாத்தா மேலுள்ள வெறுப்பு, அவளை கழுத்தை நெரித்து கொன்று விட்டால் என்ன என்று தோன்றியது.
நீண்ட நேரமாகியும் பேருந்து வரவில்லை.
அப்போது பூவாத்தாவிடம், ஒரு, 'டிப்-டாப்' ஆசாமி, ''இந்தம்மா... ஐயா வந்து, உன்ன, வீட்டுல நாளைக்கு பார்க்க சொன்னாங்க... ஐயாவுக்கு கட்சியில எவ்ளோ, 'பவர்' இருக்குன்னு தெரியுமில்ல... அதோட, மயிலு கட்சிக்காக நெறைய உழைச்சிருக்கு...
''அதனால, ஐயாவை வந்து வெரசா கண்டுகினீன்னா, ஒனக்கும், ஓம் புள்ளங்களுக்கும் நல்லது... அனுசரிச்சு நடந்துக்கோ... என்ன புரியுதா,'' கடைசி வார்த்தையை சொல்லும்போது, வலது கண்ணை அடித்தான்.
எரிமலையாக மாறினாள், பூவாத்தா.
''எச்சிக்கல நாயே... ஒன்னைய பத்தி எனக்கு தெரியும்... கம்முன்னு மருவாதையா எடத்தை காலி பண்ணு... இல்லன்னா, வாரு கிழிஞ்சிடும்... அனுசரிச்சு நடந்துக்க... எனக்கு, நீ, சொல்லி தர்றீயா,'' காலில் கிடப்பதை கழற்றினாள்.
அவன், 'எஸ்கேப்' ஆனான்.
அதற்குள் கண்மணிக்கு, பேருந்து வரவே, ஏறி அமர்ந்தாள். பூவாத்தா பற்றியே சிந்தனை சென்றது. 'இவள் ஏன் இப்படி இருக்கிறாள்... உண்மையிலேயே இவள் நல்லவளா... கெட்டவளா... ஒருவேளை படிப்பறிவு சற்றேனும் இருந்திருந்தால், இவ்வளவு அசிங்கமாக பேசியிருக்க மாட்டாளோ...
'எப்படி இருந்தாலும், இவள் வீட்டிற்கு அருகில் நாம் இருப்பது, சாக்கடைக்கு பக்கத்தில் இருப்பது போல தான்... இந்த நாற்றத்தை சகித்து, குடியிருப்பது நம் தலைவிதி போலும்...' என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, கல்லுாரி வந்து விடவே, சட்டென்று இறங்கினாள்.
மாலை-
கல்லுாரி முடிந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கே, கடை போட்டிருந்தாள், பூவாத்தா.
'சே... சனியன் எங்கே போனாலும் விடாது போலிருக்கே...' என்று மனதுக்குள் புலம்பினாள்.
அதே நேரத்தில், கட்சி கொடி போட்ட, 'டாடா சுமோ'விலிருந்து, நான்கு கல்லுாரி மாணவர்கள் வெளிப்பட்டனர். இவளை தவிர, இரண்டு நடுத்தர வயதுக்காரர்களும், இன்னும் சில கல்லுாரி மாணவியரும், முதியவர்களும் காத்திருந்தனர்.
வந்த பையன்களில் ஒருவன், ''மச்சி... இதுதாண்டா சூப்பர் பிகர்... இதுக்கு நுால் விடலாண்டா,'' என்றான், கண்மணியைப் பார்த்து.
''ஓ.கே., மாப்பிள்ளை... 'ட்ரை' பண்ணுடா!''
சொன்னது தான் தாமதம்... நால்வரில், 'பிராண்டட் ஷர்ட்'டும், 'ஜீன்சும்' அணிந்து, 'டிப்-டாப்'பாக காணப்பட்ட ஒருவன், ''ஹாய் ப்யூட்டி... என் நம்பர் தரேன்... 'மிஸ்டு கால்' தர்றீயா... அப்புறம் உன், 'லைப்பே' எங்கேயோ போயிடும்... என்ன, ஓ.கே.,வா,'' என்று கண்ணடித்தான்.
உடனே, மற்ற மூவரும், 'ஊதா... ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்...' என்று வட்டம் போட்டு சுற்றி பாட ஆரம்பிக்க, வெலவெலத்து போனாள், கண்மணி.
உச்சி முதல் பாதம் வரை, வெளியே வியர்வை ஆறும், உள்ளே ரத்த ஓட்டமும் தாறுமாறாக ஓடுவது போலவும், இதயம் அடிப்பது, வெளியே கேட்டு விடுமோ எனுமளவுக்கு, தடக் தடக்கென்றது. அங்கே இருந்த அத்தனை பேரும், எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை திருப்பிக் கொண்டிருந்தனர். நின்று கொண்டிருந்த கல்லுாரி மாணவியர், ஓட்டம் பிடித்தனர்.
'ஜீன்ஸ் பேன்ட்'காரன், இவளுக்கு மிக அருகில் வந்து, முகத்தின் பக்கவாட்டில் பெருமூச்சு விட்டு, 'வாவ்... நைஸ் ஸ்மெல்...' என்று, அவளை இன்னும் நெருங்க முயற்சித்தபோது...
''டே... டேய்... சோமாரீ,'' என்று, பாய்ந்து வந்து, அவன் கையை பிடித்து தரதரவென்று இழுத்து, கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள், பூவாத்தா.
இதை எதிர்பார்க்காத அவன், சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெலவெலத்து போனான்.
இரண்டு நிமிடங்களுக்கு பின், ''ஏய்... பொம்பள, நீ யாருடி என்னை அடிக்க... நான் யார் தெரியுமில்ல... என், 'பவர்' தெரியாம, மேல கை வச்சிட்டல்ல... பாரு... இனிமே நீ அவ்வளவு தான்,'' என்று கறுவினான்.
அவன் முடிப்பதற்குள், போலீஸ் ஜீப் வேகமாக வந்து நின்றது.
இறங்கிய அதிகாரியிடம், ''சார்... நாந்தான் போன் பண்ணது... கரெக்ட்டா வந்துட்டீங்க... டேங்ஸ்பா,'' என்று கும்பிட்டாள், பூவாத்தா.
வந்த அதிகாரியும், ''இவன் மேல ஏகப்பட்ட, 'கேஸ்' இருக்கு... அரசியல்வாதியின் பையன்னா என்ன வேணா பண்ணலாம்ன்னு தெனாவெட்டா திரிஞ்சுகிட்டு, பல மோசடி பண்ணியிருக்கான்...
''ஆனா, யாரும் இவனை பத்தி இதுவரைக்கும் தைரியமா, 'கம்ப்ளெயின்ட்' கொடுக்காததுனாலே, எங்களால ஒண்ணும் பண்ண முடியல... இனிமே, இவனை என்ன பண்றேன்னு பாரு,'' எதையோ சாதித்து விட்டது போல், அவனை இழுத்து போய், வண்டியில் ஏற்றினார்.
படபடப்பு அடங்கி, பூவாத்தாவை பார்த்தாள், கண்மணி.
''என்ன கண்ணு... அப்படி பாக்குற... நா ரொம்ப நாளாவே இவனுகள நோட்டம் வுட்டுகினே தான் இருக்கேன்... நான் போய் கடை போடுற இடத்திலெல்லாம் கலாட்டா தான். இன்னிக்கு ரொம்ப, 'ஓவர்!' ஏதாவது ஏடாகூடமாயிடுமேன்னு நினைச்சது, சரியா போச்சு...
''அதான் போலீசுக்கு போன் போட்டேன்... என், 'லைப்'ல இதுகண்டி எத்தனயோ பாத்து புட்டேன்... கண்ணு... உஷாரா இல்லன்னா, நம்மள மாரி பொம்னாட்டிங்க உசுரயும், மானத்தையும் சாறா புளிஞ்சுடுவானுங்க...
''குடிகாரனுக்கு வாக்கப்பட்டா, பொம்பள பொளப்பு தென தெனம் செத்து பொளைக்கிறது தான்... பூ வாங்க வர்றவங்க, நம்ம பாக்கச் சொல்ல, பாழ் நெத்தியோடயும் பரட்டை தலையோடயும் இருந்தா, எப்படி வாங்குவாங்க தாயீ...
''அதோட, இந்த காலி பயலுக தொந்தரவு பேஜாரு... ஆனா, இருந்தபோதும், இம்சை பண்ண எம் புருஷன், இப்ப தான் எனக்கு நிஜமாலுமே நல்ல புருஷனா இருக்காரு,'' என, சொல்லும்போது, அவள் கண்களில், இந்திய பெண்களுக்கே உரிய வெட்கம் வெளிப்பட்டது.
இதை கேட்ட கண்மணி, ''என்னை மன்னிச்சுடுங்கக்கா... நீங்க இன்னைக்கு, என் மானத்தை மட்டும் காப்பாத்தல... என்னை போல உள்ள பெண்கள், இனிமே பாதுகாப்பாக இருப்பதற்கும் வழி செய்து விட்டீங்க,'' என்றாள்.
நெகிழ்வில், அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டாள். அவள் அருகாமையில், மல்லியின் வாசத்தை, உணர்ந்தாள், கண்மணி.
டி. சாய்சுப்புலட்சுமி

