தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இந்தோனேஷியாவில், 'அந்துமணிபதில்கள்'!

இந்தோனேஷியாவில், 'அந்துமணிபதில்கள்'!

இந்தோனேஷியாவில், 'அந்துமணிபதில்கள்'!


PUBLISHED ON : மார் 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தகங்கள் அச்சிடும் பதிப்பகத் துறையில், 42 ஆண்டுகள் அனுபவமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருபவரும், சென்னை, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர், ரவி தமிழ்வாணன். சமீபத்தில், 'அந்துமணியின் பதில்கள்' புத்தகத்தை, இந்தோனேஷியாவில் வெளியிட்டபோது ஏற்பட்ட அனுபவங்களை, பகிர்ந்து கொள்கிறார், அவர்:

பதிப்பு துறையில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன்... 312 பக்கங்கள், 'டபுள் டெமி' அளவு, தரமிக்க தாள், நேர்த்தியான அச்சடிப்பு;

எந்த பிரசுரம் வெளியிட்டிருந்தாலும், 420 ரூபாய் விலை நிர்ணயித்திருக்கும்.

அருமையான உள்ளடக்கம், ஏராளமான படங்கள், சரித்திர பதிவுகள், காலப்பெட்டகம் மற்றும் சுவையான தகவல்கள் என, பல சிறப்புகள் கொண்ட, 'அந்துமணியின் பதில்கள்' புத்தகம், லாப நோக்கமின்றி, 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புத்தகத்தை பதிப்பித்த, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், வாசகர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

'கல்கண்டு' இதழ் நிறுவன ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான என் தந்தை, தமிழ்வாணன் எழுத்தின் மீது, அந்துமணிக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. தான், கேள்வி - பதில் எழுத, தமிழ்வாணன் தான் காரணம் என்று, அந்துமணியே ஒரு சமயம் கூறியிருக்கிறார்.

'நீங்கள், சிறந்த நிர்வாகியாக மட்டும் இருந்தால் போதாது; சிறந்த எழுத்தாளராக, பத்திரிகையாளராக வரவேண்டும்...' என்று, அந்துமணியை ஊக்குவித்தவர், என் மூத்த சகோதரர், லேனா தமிழ்வாணன்.

தென்கிழக்காசிய நாடான, இந்தோனேஷியாவில், சுரபையா நகரில் உள்ள, தமிழ் சங்கத்தில், ஜன., 16ல், மணிமேகலை பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. அங்கு வாழும் தமிழர்கள் பலர், அதில் கலந்து கொண்டனர்.

சுரபையா தமிழ் சங்கத்தை சேர்ந்த, கருண் என்றழைக்கப்படும் கருணாநிதி, 'அந்துமணி பதில்கள்' புத்தகத்தின், முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அங்கிருந்த தமிழர்களில் பலர், அந்த புத்தகத்தை ஆர்வத்தோடு வாங்கினர்.

இந்த பயணத்தின்போது, என்னுடன், 'கடாரம் கொண்டான் காவியம்' என்ற புத்தகத்தை எழுதிய, முகவை மேத்தாவும், 'பாரதி வழியில் இயற்கை மருத்துவம்' என்ற நுாலை எழுதிய, மருத்துவர் சுப்பிரமணியனும் வந்து, புத்தக கண்காட்சி பணியில் உதவி செய்தனர்.

சுரபையா, பாலித்தீவு மற்றும் ஜகார்த்தா மூன்று நகரங்களில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளுக்கும் வந்திருந்த தமிழர்கள் அனைவரும், அந்துமணியை அறிந்தவர்கள். 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'வாரமலர்' இதழ் இரண்டையும், 'ஆன்லைனில்' பல ஆண்டுகளாக படித்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு, அந்துமணியை அறிமுகம் செய்ய வேண்டிய தேவையே இல்லை.

தலைநகர் ஜகார்த்தாவில், ஜன., 18ம் தேதி மாலை, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நாட்டில் நடந்த, திரைப்பட பாடல்கள் இடம்பெற்ற, முதல் இன்னிசை கச்சேரி அது தான்.

முரளியின், 'மவுன ராகம்' இசைக் குழுவினருடன், பிரபல திரைப்பட பின்னணி பாடகர்கள், ஸ்ரீநிவாஸ்,

எஸ்.பி.பி. சரண், கல்பனா ராகவேந்திரா மற்றும் அல்காசிங் ஆகியோர் பங்கேற்றனர். பழைய மற்றும் புதிய பாடல்களை பாடி, தமிழ் மற்றும் பிறமொழி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இந்தோனேஷிய தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு, டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளை இங்கு நடத்தி வரும், பிரபல தொழிலதிபர், மணிவண்ணன் தான் முக்கிய காரணகர்த்தா.

இந்நிகழ்ச்சியில், மணிமேகலை பிரசுர நுால்களையும், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடான, 'அந்துமணியின் பதில்கள்' நுாலையும் விற்பனை செய்ய, இந்தோனேஷிய தமிழ் சங்கத்தின் தலைவர் ரமேஷ் மற்றும் காரியதரிசி சந்துருவும் பிரத்யேக அனுமதி அளித்திருந்தனர்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு, இந்தோனேஷியாவுக்கான, இந்திய துாதர், சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இன்னிசை நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. உணவிற்கான செலவும், டிக்கெட் விலையில் அடக்கம்.

இந்தோனேஷியாவின் ஒரு பகுதியான, பாலித் தீவில், வீடுகள், தெருக்கள் மற்றும் சாலை சந்திப்பு என, எங்கு பார்த்தாலும் ஹிந்து கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமா, லட்சுமண், முருகா, லட்சுமி மற்றும் சரஸ்வதி போன்ற பெயர்கள் கொண்டவர்களை எங்கும் பார்க்கலாம்.

பாலித் தீவில், குருஜீ என்றழைக்கப்படும் சுரேஷ் சாஸ்திரி, கடற்கரையை ஒட்டி, ஒரே வளாகத்தில், சிவன், காளி, சரஸ்வதி என்று, பல கோவில்களை கட்டியிருக்கிறார். ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி புத்தகங்கள் கொண்ட நுாலகத்தையும் அவர் நடத்தி வருகிறார். அவரது வளர்ப்பு மகளான ராதாவுடன், நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார்.

குருஜீ அனுமதியோடு, 'அந்துமணியின் பதில்கள்' புத்தகத்தை, அங்கு விற்பனை செய்ததில், நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜூலை 4ம் தேதி, அமெரிக்க சுதந்திர தினம். அதை முன்னிட்டு வரும் விடுமுறை நாட்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு சென்று, மணிமேகலை பிரசுரத்தின் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையை, 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு, ஜூலை, 4ம் தேதி, அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு, 'அந்துமணியின் பதில்கள்' புத்தகமும் கிடைக்கப் போவது உறுதி எனக் கூறி முடித்தார், ரவி தமிழ்வாணன்.

கடந்த, 40 ஆண்டுகளாக, மணிமேகலை பிரசுரம் வெளியிடும் புத்தகங்களை, வெளிநாடுகளுக்கு சென்று, விற்பனை செய்து வரும்,

ரவி தமிழ்வாணனுக்கு, சமீபத்தில் சென்று வந்த, இந்தோனேஷிய பயணம், 700வது வெளிநாட்டு பயணம்.

பொதுவாக, வெளிநாடு செல்லும் விமான பயணிக்கு, 37 கிலோ எடையிலான சுமைகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ரவி தமிழ்வாணன், தன் பயணங்களின் போது, 37 கிலோ என்பதை, தன் உடைகள், 'பர்சனல்' பொருட்கள், 10 கிலோ என்றும், புத்தகங்கள், 27 கிலோ என்றும் பிரித்துக் கொள்கிறார். இந்த பயணத்தில் அதிகம் இடம்பெற்றது, 'அந்துமணி பதில்கள்' புத்தகங்கள் தான்.

ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us