PUBLISHED ON : மார் 01, 2020

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது: 28. இள வயதிலிருந்தே, காதல் என்றாலே பயம். எந்த ஆணுடனும் பேச மாட்டேன். அதனால், பள்ளி படிப்பை பயத்துடன் முடித்தேன். மதுரையில், செவிலியர் பயிற்சிக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறையில், உறவினர் வீட்டிற்கு சென்று வருவேன்.
அப்போது, ஒரு ஆண் நண்பரின் பழக்கம் ஏற்பட்டது. பேச தயங்கினேன்.
'அவன், உனக்கு அண்ணன் தான்; தயங்காமல் பேசு...' என்றார், அம்மா.
தயக்கத்துடன் பேசினேன். பிறகு ஒருநாள், தொலைபேசியில், 'நான், உன்னை விரும்புகிறேன்...' என தெரிவித்தான்.
நான், அதை ஏற்கவில்லை.
அவன், கையை அறுத்து கொண்டு, அடிக்கடி தொல்லை செய்தான். நான், அதை கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள், கையை ஆழமாக அறுத்துக் கொண்ட அவனை, மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, என்னை தொலைபேசியில் அழைத்து, 'நீ இல்லை எனில் செத்துடுவேன்...' எனக் கூறினான்.
நானும் பரிதாபத்தில் பேச ஆரம்பித்து, கடைசியில் அவனை விரும்பினேன். இப்போது, இரண்டு ஆண்டுகள் ஆகிறது. என்னால் அவனை மறக்க முடியவில்லை.
அவனோ, 'இப்போது தான் எல்லாம் புரிகிறது. நீ, எனக்கு தங்கை; உன்னை, என்னால் திருமணம் செய்ய இயலாது...' என, கூறுகிறான்.
எனக்கோ தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. இது, வீட்டிற்கு தெரிய வர, அவர்களும் என்னை கடுமையான சொற்களால் காயப்படுத்துகின்றனர். இவர்களுக்கு மத்தியில் வாழ வழி கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
காதல் என்பது, உலகின் அனைத்து கவிஞர்களும் ஒன்று சேர்ந்து எழுதிய, ஹைக்கூ கவிதை. நுண்மையான காதல் உணர்வு, தற்காலத்தில் கொச்சைப்படுத்தப்படுகிறது. பணம், அதிகாரம் மற்றும் புகழை காட்டி, துரத்தி துரத்தி, கெஞ்சி, யாசித்து, வலுக்கட்டாயமாக பெறப்படுகின்றன, காதல்கள்.
எந்த நேரமும் கலைந்து விடும் அவசரக் கோலங்களான இவ்வகை காதல்கள், செயற்கையானவை. உன் காதல், இயந்திரம் அடைகாத்த கோழிக்குஞ்சு.
உன் காதலை பெற, காதலன், 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்திருக்கிறான். திருவோட்டை நீட்டி, காதல் பிச்சை கேட்டிருக்கிறான். நீயும் பரிதாபப்பட்டு, காதலை தந்திருக்கிறாய்.
உன் அம்மா, 'அவன் அண்ணனை போன்று, வயதில் மூத்தவன். அதனால், அவனுடன் இயல்பாக பேசு...' என்கிற அர்த்தத்தில் பேசினாரா அல்லது அவன் நிஜமாகவே, உனக்கு அண்ணன் உறவு முறையா... அதை நீ தெளிவாக கடிதத்தில் குறிப்பிடவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், அவனுக்கு ஞானோதயம் வந்து, தங்கை முறை பெண்ணான உன்னை காதலிக்க மாட்டேன் என்கிறான்.
யோசித்து பார், அவனுடைய அழகை, படிப்பை, திறமையை, பராக்கிரமத்தை பார்த்தா காதலித்தாய்... அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் செத்து விடுவான் என, பயந்துதானே ஏற்றுக்கொண்டாய்... அவன் செய்த அதே தவறை, நீ செய்யலாமா?
சந்திர கிரகணத்திலிருந்து சந்திரன் விடுபடுவது போல, சூரிய கிரகணத்திலிருந்து, சூரியன் விடுபடுவது போல, இக்காதலில் இருந்து விடுபடு. உன்னை, அவன் தொடர்ந்து தொந்தரவு செய்யாமல் விலகிப் போகிறானே என, நிம்மதி பெருமூச்சு விடு. அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* அவனை தலை முழுகு. அவனை பற்றிய நினைவுகளை மனதிலிருந்து துடைத்தெறி. அவன் கைபேசி எண்ணை மற, உன் கைப்பேசி எண்ணை மாற்று
* செவிலியர் பயிற்சி முடித்ததும், பணியில் சேர்ந்து விடு. அரசு பணி கிடைத்தால் நல்லது. இல்லையென்றால், ஏதாவது ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர் நங்கையாக பணியில் சேர்; நோயாளிகளுக்கு சேவை செய்யும்போது, சுயம் மறந்து போகும். சில விஷயங்களில், மருத்துவர்களுக்கு சமமான, கூடுதலான மருத்துவ அறிவு, செவிலியர் நங்கையருக்கு உண்டு. மிகச்சிறந்த செவிலியர் நங்கை என, பெயர் வாங்கு
* உன் அம்மாவிடம், வரன் பார்க்க சொல். தகுதியான வரனை பார்த்து நீ மணந்து கொண்டால், பாலைவனமான உன் வாழ்க்கை, சோலைவனமாகும்
* உனக்கும், காதலுக்கும் சரிபட்டு வராது. பணியிடத்தில், யாருடனும் காதல் வயப்பட்டு விடாதே
* அண்ணன் முறை காதலன், மீண்டும் உன் வாழ்க்கையில் குறுக்கிடும் வாய்ப்புகளை முழுமையாக கத்தரி
* தற்கொலை எண்ணத்தை கைவிடு. சாவதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால், வாழ்வதற்கு, 999 காரணங்கள் இருக்கின்றன. 'மீதி வாழ்நாளில், ஒரு லட்சம் நோயாளிகளின் உயிர் காக்கும் சேவை செய்வேன்...' என, சங்கல்பம் கொள்
* உன் தோழியர் யாரும், அர்த்தமற்ற காதல்களில் ஈடுபடாமல் இருக்க, தகுந்த ஆலோசனைகள் கூறு
* திருமணத்திற்கு பின், கணவரை காதலி; வாழ்க்கை அர்த்தப்பூர்வமாக நகரும்
* அம்மாவுடன் பேசும் நேரத்தை அதிகரி. அம்மாவின் அறியாமையையும், உன் அறியாமையையும் ஒரு சேர போக்கு
* செவிலியர் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைந்து விட்டால், பழைய விஷயங்களை, உன் வீட்டார் எளிதில் மறந்து விடுவர். இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாய் சவாரி செய்வாய் என, திடமாய் நம்புகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
