தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மார் 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தா. பாண்டியன் எழுதிய, 'நெல்சன் மண்டேலா' நுாலிலிருந்து:

தென்னாப்ரிக்காவில், அந்த நாட்டின் தேசிய விடுதலை போராட்ட வீரர்கள், குற்றவாளிகள் சார்ந்து வழக்கு நடந்தது. இது, அவர்கள் கைதாகி, இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடந்தது.

நீதி விசாரணை, ஒரு திருச்சபையின் (பிரிட்டோரியா) பழைய கட்டடத்தில் நடத்தப்பட்டு வந்தது. நண்பகல் இடைவேளையில், உணவுக்கு, பாதிரியாரின் அறையை பயன்படுத்திக் கொண்டனர்.

வழக்கு பல மாதங்கள் நீடித்தது. நடுவில் சில மாதங்கள் தாமதமானது. அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும், திருமதி தையல்நாயகி பிள்ளை என்ற தமிழ் பெண்மணி, பல தொண்டர்களுடன் சேர்ந்து, இந்திய முறை உணவை தயாரித்து, பரிமாறி வந்தார்.

காலையில், வடையும், தேநீரும். நண்பகலில், சுவை மிக்க இந்திய உணவு. பிற்பகலில், மீண்டும் பலகாரத்துடன் தேநீர் தருவார்.

இந்த வழக்கில், வக்கீல்களில் ஒருவராக பங்கேற்றார், நெல்சன் மண்டேலா.

கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதியுள்ள, 'எனது நண்பர்கள்' நுாலிலிருந்து:

இந்திய பேரரசில் வர்த்தக அமைச்சராக இருந்தவர் மற்றும் பல உயர் பதவிகளை, கல்வியாலும், அறிவாலும் பெருமைக்குரியதாக மாற்றியவர், டாக்டர் சர்.ஏ.ராமசாமி முதலியார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் திறமையுள்ள இவர், ஆரம்பத்தில், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தார்.

ஒருமுறை, திருச்சி, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவரின் ஆங்கில பேச்சை மொழி பெயர்க்க ஒருவர் தேவைப்பட்டார்.

நான், பலரை கேட்டேன்; மறுத்து விட்டனர். இந்நிலையில், 'நான் மொழி பெயர்க்கிறேன்...' என, முன் வந்தார், ஒரு கல்லுாரி மாணவர்.

ஊரும், பேரும் கேட்டேன்.

'காஞ்சிபுரம், அண்ணாதுரை' என்று சொன்னார்.

'ஒரு பெரிய அரசியல்வாதியின் பேச்சை, பள்ளிக்கூடத்து பிள்ளைகளை விட்டு மொழி பெயர்ப்பது நல்லதல்ல...' என்று, எனக்கு தோன்றியது. நான் ஒப்பவில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் போகவே, அப்பையனை விட்டே மொழி பெயர்க்க சொன்னேன்.

டாக்டர் ஏ.ராமசாமி முதலியாரின் பேச்சு, கொட்டகையை அதிர வைத்தது; மொழி பெயர்ப்பும், அதற்கு இணையாக இருந்தது.

ஒரு பெரிய நல்ல காரியத்தை செய்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன், ஏ.ராமசாமி முதலியாரை அணுகி, 'பையனின் மொழி பெயர்ப்பு எப்படி...' என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'பையன், நன்றாக தான் மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சிறிது, 'சன்னப் பொடி (மூக்குப் பொடி)யும் கலந்திருந்தது...' என்று, மகிழ்ச்சியோடு கூறினார்.

காலம் வேகமாக ஓடியது. 1968ல், சென்னையில் நடந்த இரண்டாவது உலக தமிழ் மாநாட்டில், துணை தலைவராக பணிபுரிந்தேன். அப்போது, மவுண்ட்ரோடில்,

சி.என்.அண்ணாதுரையின் சிலையை வைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அதை திறந்து வைக்க, ஏ.ராமசாமி முதலியார், மவுண்ட்ரோடுக்கு வந்தபோது, துாரத்தில் இருந்த என்னை, கை தட்டி கூப்பிட்டார்.

'திருச்சி, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில், அண்ணாதுரை மொழி பெயர்த்தபோது, அப்பையன், பின்னாளில், நம் நாட்டிற்கு, தலைமை அமைச்சராக வருவார் என்றோ, அவருடைய சிலையை நாம் இருவரும் திறந்து வைக்கப் போகிறோம் என்றோ நினைத்தோமா...' என, கூறி மகிழ்ந்தார்.

திறமையிருந்தால், அது உச்சிக்கு அழைத்து போய் நிறுத்தும் என்பதற்கு, அண்ணாதுரை சிறந்த உதாரணம்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us