
மொட்டை மாடியில் இடம் கிடைத்தால், மாடி தோட்டம் போடலாம். இல்லாதவர்கள் வீட்டுக்குள்ளேயே, அதாவது, 'பிளாட்'டுக்குள்ளேயே போட்டுக் கொள்ள வேண்டியது தான்.
பெங்களூரில் சிலர், வீட்டினுள் சுவர்கள், தனி தாங்கிகள் மற்றும் தொட்டிகளில், கண்களை கவரும் செடிகளை வைக்க ஆரம்பித்து விட்டனர். ஜன்னல், சமையலறை பக்கத்தில், வழியில், கதவை ஒட்டி என, பல இடங்களில் வைத்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் இதற்கு வாகாக அமைந்து, அழகை கூட்டுகின்றன.
வீட்டிற்குள் செடி வைத்திருந்தாலும், அதற்கும் சூரிய வெளிச்சம் தேவை. குறைந்தபட்சம் சனி, ஞாயிற்று கிழமைகளில் அவற்றை குறிப்பிட்ட நேரம் வெயிலில் வைத்திருந்து, மீண்டும் வீட்டுக்குள் வைப்பது நல்லது.
வீட்டினுள் வளரும் தாவரங்களுக்கு, குறைந்த தண்ணீரே போதும், கூடுதலாக தண்ணீர் ஊற்றினால், அழுகி விடும்.
பால்கனிகளில் வைக்கும் தாவரங்களுக்கு, ரசாயன உரம் அவசியமில்லை. சமையலறை கழிவுகளை போட்டாலே போதும். ஆனால், அவ்வப்போது சுத்தம் செய்வது நல்லது.
தாவரங்களை பூச்சிகள் மொய்த்து தொல்லை தராமல் இருக்க, வேப்ப எண்ணையை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்; பூச்சிகள் அண்டாது. 15 நாட்களுக்கு ஒருமுறை, இப்படி செய்வது நல்லது.
வீட்டிற்குள் தாவரங்களை வளர்க்க, அழகாக அமைத்து தர, இன்று பல நிறுவனங்கள் உள்ளன. இதற்கு, 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
ஜோல்னாபையன்.

