
வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பழனி, வேலை முடிந்து கை, கால் அலம்ப, ஆற்றின் ஓரத்தில் இறங்கியவர், ஏதேச்சையாக ஆற்றுப் பாலத்தை நோக்க, அங்கே, 60 வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பாலத்தின் கைபிடிச் சுவரின் மேல் நின்று, ஆற்றையே வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ அசம்பாவிதம் நிகழப் போகிறது என்பதை உணர்ந்து, ''ஏய்... யாரப்பா அது... பாலத்துல நின்னுகிட்டு என்ன செய்றே...'' என்று பழனி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த மனிதர், சட்டென்று ஆற்றில் குதித்து விட்டார்.
ஆற்றின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மூச்சுக்காக திணறிய அந்த முதியவரின் தலைமுடியை பிடித்து இழுத்து, கரையில் சேர்ப்பித்தார் பழனி.
சிறிது நேரத்திற்கு பின், கண் விழித்த அந்த முதியவரிடம்,''ஏனப்பா என்ன காரியம் செய்ய துணிஞ்ச... செத்த நேரத்துல பொணமாக தெரிஞ்சயே...''என்று கடிந்து கொண்டார்.
கண்ணீரை உகுத்த பெரியவர், ''சோத்துக்கு வழியில்லாத நான், பொழச்சு கிடந்து என்ன செய்யப் போறேன்... பட்டினி கிடந்து கொஞ்சம் கொஞ்சமா சாகுறதுக்கு பதிலா ஒரேடியா போயிரலாம்ன்னு தான் ஆத்துல குதிச்சேன். நீ ஏனப்பா என்ன காப்பாத்தின...'' என்றார்.
''ஏம்பா... இம்மாம் பெரிய பூமியில பொழைக்க வழியில்லன்னா சாகத் துணிஞ்சே... நல்ல ஆளப்பா நீ,'' என்றவர், ''சாப்பிட்டயாப்பா,'' என்று கேட்டார். 'இல்லை' என்பது போல் தலையை அசைக்கவும், அவரை அழைத்துச் சென்று, சிறிது தூரத்தில் இருந்த ரோட்டோர ஓட்டலில் இட்லியும், வடையும் வாங்கிக் கொடுத்தார். பின், அவர் குடும்பம் பற்றி விசாரித்த போது, ''ம்... எல்லாம் இருக்காங்க...'' என்று அலுத்துக் கொண்டவர், ''உடம்புல பலமும், கையில காசு இருக்கிற வரை தான் புள்ள குட்டிக எல்லாம். காசில்லன்னா, பெத்த புள்ளைகளுக்கு தகப்பனும் இல்ல, கட்டின பொண்டாட்டிக்கு புருஷனும் இல்ல. நல்லா ஓடியாடி உழைச்சுக் கொட்டயில எல்லாம் நல்லாத் தான் இருந்துச்சுக. இப்ப முன்ன மாதிரி உழைக்க உடம்புல தெம்பு இல்ல. அதனால ஒரு வாய் காபி தண்ணிக்கும், ஒரு வாய் சோத்துக்கும் தினமும், பெத்தது, வந்ததுக என எல்லார் கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. அதான், மனசு வெறுத்துப் போச்சு. போதும் வாழ்ந்தது, போய் சேருவோம்ன்னு முடிவெடுத்தேன்,'' என்றார்.
''பொண்டாட்டி, புள்ள வாய்க்கிறது எல்லாம் நாம வாங்கி வர்ற வரமப்பா. அது சரியில்லன்னா, நம்ம வாழ்க்கைய நாம பாத்துட்டு போகணுமே தவிர, அதுக்காக உசிரையா போக்கடுச்சுக்குவாங்க...'' என்றவர், சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து, பின், ''நீ பேசாம என் கூட வாப்பா; நான் உனக்குகொரு வழி செய்றேன்,'' என்று கூறி பெரியவரை தன் கமிஷன் கடைக்கு அழைத்துச் சென்றார் பழனி.
ஒரு ஆப்பிள் கூடையை தூக்கி கொடுத்து,''இந்தாப்பா... இந்தக் கூடையில, 20 கிலோ ஆப்பிள் இருக்கு: கிலோ, 80 ரூபான்னு வித்தாலே, 1,600 ரூபாய்க்கு விற்கலாம். உனக்கு எப்ப குடுக்க முடியுமோ அப்ப எனக்கு இதோட அசல மட்டும் கொடு. அதுவரைக்கும் இத முதலா வச்சு, பொழச்சுக்க,'' என்றார்.
''அய்யா... அந்த கடவுளே நேரில வந்து வாழ வழி காட்டுனது போல இருக்கு சாமி... நீ உன் புள்ள குட்டிகளோட நல்லா இருக்கணும்,'' என்று கூறி கை எடுத்து கும்பிட்டு தழுதழுத்தார்.
அன்றிலிருந்து ராசையா என்ற அந்த பெரியவர், தினமும் பழனியின் கமிஷன் கடைக்கு வந்து, பழங்கள், காய்கறிகள் என, அப்போது எது விலை மலிவாக இருக்கிறதோ அதை வாங்கி விற்று வந்தார். அவர் கையில் பணப் புழக்கத்தை பார்த்ததும், அவர் குடும்பத்தினர் ஒட்டிக் கொண்டனர்.
இந்த ஒரு ஆண்டிற்குள் ராசையாவுக்கும், பழனிக்கும் வயது வித்தியாசங்களை தாண்டிய அன்பு இழையோடத் துவங்கியிருந்தது.
பழக் கூடையை தூக்கியபடி பழனியின் கமிஷன் கடையை நோக்கி சென்றார் ராசையா. கடை பூட்டியிருந்தது. கடை வாசலில் அவரைப் போல் சிறு வியாபாரிகள் கூடைகளுடன் அமர்ந்திருந்தனர்.
படியின் ஓரத்தில் உட்கார்ந்த ராசையா, வேட்டி மடிப்பில் இருந்து பீடிக் கட்டை எடுத்து, அதில் ஒன்றை உருவி, பற்ற வைத்தவர், 'பழனி ஏன் இன்னும் வரல...' என தனக்குள் கேட்டபடி யோசனையில் ஆழ்ந்திருந்தார். 10:00 மணிக்கு மேல், பழனியோட வியாபாரக் கூட்டாளி கடைக்கு வந்து, அன்றைய சரக்குகளை சிறு வியாபாரிக்கு விற்பனை செய்தார். ''ஏய்யா... ஏன் பழனி வரல... உடம்புக்கு ஏதும் முடியலயா?''எனக் கேட்டார் ராசையா.
''பழனிக்கு ஒண்ணும் இல்ல; அவரோட சம்சாரத்துக்கு தான் உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காரு. ஆஸ்பத்திரியில இருந்து எனக்கு போன் செஞ்சு, 'வியாபாரிக காத்திருப்பாங்க; கொஞ்சம் கைவேலையை மாத்தி விடுங்க'ன்னு சொன்னார்; அதான் வந்தேன்,'' என்றார்.
''அப்படியா,'' என்றவர், கூடையை கடையில் வைத்து விட்டு, மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
ராசையாவை பார்த்ததும், ''வாப்பா...'' என்ற பழனியிடம், ''என்ன பழனி உன் சம்சாரத்துக்கு உடம்புக்கு முடியலயாமே... என்னாச்சு? இப்ப எப்படி இருக்கு,'' என்று கேட்டு, கையிலிருந்த ஹார்லிக்ஸ், பழங்களைக் கொடுத்தார்.
''ஒண்ணுமில்லப்பா; நேத்து நாட்டுக் கோழி குழம்பு வச்சுருந்தா... அதைச் சாப்பிட்டு, பக்கத்து தெருவுல இருக்குற அவங்க அம்மா வீட்டுக்கு போனவ, அங்க அகத்தி கீரை பொரியல் சாப்பிட்டுருக்கா... வாந்தி, பேதியாயிருச்சு; இப்ப நல்லா இருக்கா...'' என்று கூறியபடி மனைவி சிகிச்சை பெறும் அறைக்கு, ராசையாவை அழைத்துச் சென்றார்.
படுக்கையில் சோர்வாக படுத்திருந்த மரகதம், பேச்சுக் குரல் கேட்டு கண்விழித்தாள்.
''என்னம்மா இப்ப எப்படியிருக்கு?'' என்று கேட்டவருக்கு பதில் சொல்லாமல், அவரையே யோசனையாக பார்த்தாள் மரகதம்.
''என்ன மரகதம் அப்படிப் பாக்குறே... இவருதான் ராசையா... நான் அடிக்கடி சொல்வேனே... பெத்த தகப்பன போல அத்தனை பாசமா பழகுவாருன்னு...'' என்றார் பழனி.
''ஆமாம் தாயி... பழனி நான் பெறாத புள்ள; இந்தப் புள்ள தான், சாகப் போன இந்தக் கிழவன காப்பாத்தி, இன்னக்கி வாழவச்சுருக்கு,'' என்றார் நெகிழ்ச்சியுடன் ராசையா.
''அட என்னப்பா... இதப் போயி பெருசா பேசிக்கிட்டு... மனுஷப் பய நாம நினைச்சா உலகத்துல நல்லதும் கெட்டதும் நடக்குது... மேலே இருக்குறவன், எதெது எப்பப்ப நடக்கணும்ன்னு தீர்மானிக்கிறானோ, அதுபடிதான்ப்பா நடக்கும். அன்னக்கி உன்ன நான் காப்பாத்தலன்னா, வேற யாராவது காப்பாத்தி இருப்பாங்க; எல்லாம் அவன் செயல்ப்பா,'' என்றார் பழனி.
''எனக்கு சாமி நம்பிக்கை எல்லாம் இல்ல தாயி; என்னப் பொறுத்தவரை, பழனி தான் என் தெய்வம்; ஏன்னா, இன்னிக்கு எனக்கு கிடைச்சுருக்குற இந்த நிம்மதியான வாழ்க்கைக்கு உன் புருஷன் தான் காரணம்,'' என்றார் உணர்ச்சி பிழம்பாய்!
ராசையா பேசுவதையே, மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த மரகத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பசுமையாய் நினைவில் ஓடியது.
பழனிக்கு கடையில் வேலை இருந்ததால், தன் இரு பிள்ளைகளுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு மதுரைக்கு சென்று, பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தாள் மரகதம். எதிரே வேகமாக வந்த லாரி, தன் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சில் மோத, பஸ் நிலை குலைந்து ரோட்டின் அருகே இருந்த ஓடைக்குள் சாய்ந்தது.
எங்கும் மரண ஓலம். மரகத்தின் தொடையை முன் சீட்டு கம்பி குத்தி கிழித்து, எழும்பும், சதையும் தனித்தனியாக தொங்கியபடி இருந்தன. ஒரு கால் இருக்கைக்குள் மாட்டியிருந்தது. பிள்ளைகள் இருவரும் பஸ் இருக்கைக்குள் மாட்டி மயங்கி கிடப்பதைக் பார்த்து, கதறினாள். அவளைப் போன்றே பலரும், வலியாலும், மரண வேதனையிலும் அலறியபடி இருந்தனர்.
அந்நேரத்தில் எங்கிருந்தோ ஒரு நாலைந்து பேர், 'திமுதிமு'வென ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும்,'ஐயா... எம்புள்ளைங்கள காப்பாத்துங்க...' என்று உரத்த குரலில் கதறினாள் மரகதம். ஆனால், அவர்கள் யாரையும் காப்பாற்றுவதாக தெரியவில்லை. ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்போர், இறந்து கிடப்போர் வைத்திருந்த பொருட்களையும், அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்தனர்.
'அடப் பாவிகளா... இப்படி உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கையில, உயிரக் காப்பாத்தாம, கொள்ளை அடிக்கிறீங்களே... நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா, உங்க புள்ள குட்டிக தான் நல்லா இருக்குமா...' என, இயலாமையில் ஓலமிட்டாள் மரகதம்.
அவர்கள் இதையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை; கூட்டம் கூடும் முன், பொருட்களை திருடி, ஓடி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தனர்.
மரகத்திற்கு அருகில் வந்த அந்த முரட்டு மனிதன், அவள் கதறலை சிறிதும் சட்டை செய்யாமல், அவள் கழுத்திலிருந்த தாலிக் கொடியை கழற்றினான். அத்தனை வலியிலும், தாலியை இறுகப் பிடித்து போராடிய மரகதத்தை, ஓங்கி ஒரு அறை விட, ஏற்கனவே, அதிக ரத்தப் பெருக்கால் மயக்க நிலையில் இருந்த மரகதம், இந்த தாக்குதலை தாங்க முடியாமல் மூர்ச்சையடைந்தாள். ஆனாலும், முறுக்கி விடப்பட்ட மீசையும், நெற்றியில் புருவத்திற்கு மேல் பெரியதான வெட்டுத் தழும்பும், பீடி குடித்தே வெளுத்துப் போன வெள் உதடும் கொண்ட அந்த மனிதனின் உருவம் அவள் மனதில் பதிந்து விட்டது.
அந்தக் கூட்டம், பொருட்களை களவாடி சென்ற பின், சிறிது நேரம் கழித்தே, அக்கம், பக்கத்து ஊரைச் சேர்ந்த மக்களும், போலீசு மற்றும் ஆம்புலன்சும் வந்தது.
பிள்ளைகள் இருவரும் நல்லபடியாக காப்பாற்றப்பட்டாலும், மரகதம் பிழைத்தது மறு பிழைப்பாகி விட்டது. ஆறு மாத சிகிச்சைக்கு பின், குணமாகி வந்தாள். அந்த கோர விபத்தில், சரியான நேரத்தில் காப்பாற்றப்படாததால், 20 பேர் பலியாயினர்.
அதன் பின், அவள் எப்போது பஸ்சில் சென்றாலும், அந்த விபத்தும், பிணந்தின்னி கழுகுகளாய் கொள்ளையடித்த கூட்டமும், அவள் தாலி சரட்டை பிடுங்கிய அந்த வெள் உதட்டு மனிதனும் அவள் நினைவில் வந்து போவர்.
நினைவுகளிலிருந்து மீண்ட மரகதம், ராசையாவின் நெற்றியில் இருந்த தழும்பையும், அந்த வெள் உதட்டையும் வெறுப்புடன் வெறித்துப் பார்த்தாள்.
''என்ன தாயி அப்படிப் பாக்குறே... என்ன இந்த கிழவன் இப்படியெல்லாம் பேசுறானேன்னு பாக்குறயா... நான் வாழ்ந்த வாழ்க்க அப்படிப் பட்டது தாயி. வெவரம் தெரியாத வயசுலயே தாயை இழந்துட்டேன். சாராயக் கடையே கதியா கிடந்த எங்கப்பன் நினைச்சா எப்பவாவது வீட்டுக்கு வருவான். ஒரு வாய் சோத்துக்கு, சொந்தம் பந்தம் வீட்ல எல்லாம் மாடா வேலை செஞ்சு, இடி சோறு வாங்கிச் சாப்பிட்டு வளர்ந்தவன் தாயி நானு! எனக்கு எப்படி சாமி நம்பிக்கை இருக்கும் சொல்...
''வயித்துக்காக திருட ஆரம்பிச்சேன்; அப்பறம் அதுவே வாழ்க்கையாப் போச்சு. என்னை மாதிரி ஒருத்தனுக்கு நல்ல குடும்பத்துல இருந்தா பொண்ணு கிடைக்கும்... எனக்கு வாய்ச்சதும் என்ன மாதிரி தான்.
''ரெண்டு ஆம்பளப் புள்ள, ரெண்டு பொம்பளப் புள்ளன்னு வாழ்க்கை நல்லாத் தான் போயிகிட்டு இருந்துச்சு. ஆனா, மனுஷப் பய வாழ்க்கையில் எது, எப்ப நடக்கும்ன்னு யாருக்கு தெரியும்... நான் செய்யாத ஒரு பெரிய திருட்டுல ரெண்டு உயிர் போயிருச்சு. சந்தேக கேசுல போலீஸ் பிடிச்சுட்டு போயி, நொங்கு எடுத்துருச்சு. போலீஸ் அடியிலிருந்து உடம்பு தேறி வர முடியல.
''பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்ங்கிற மாதிரி, மூத்த மக தான் புருஷன் கொடுமப்படுத்துறான்னு வாழாவெட்டியா வீட்டுல வந்து கிடக்கிறான்னா, எத்தனையோ பேரோட தாலியை அறுத்து திருடிட்டு வந்த பாவம், என் ரெண்டாவது பொம்பளப் புள்ள தலையில விடிஞ்சு போச்சு. கல்யாணம் ஆகி மூணு மாசத்துல பைக்கில போன எம்மருமகன் மேல லாரி மோதி அந்த இடத்துலயே கூழா போயிட்டான்.
''அந்த துக்கம் மனச ரணமா அரிச்சுக்கிட்டு இருக்கயில, நெஞ்சு வலிக்குதுன்னு மார்ப்ப பிடிச்சவன் தான் என் மூத்த புள்ள, அடிச்சுப் புடிச்சு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போறதுகுள்ள, துள்ளத் துடிக்க செத்துப் போயிட்டான்.
''இப்ப, ரெண்டாவது பையன் வீட்டுல தான், நானும், என் பொண்டாட்டியும் இருக்கோம். திருடி அடிவாங்க, உடம்புல தெம்பு இல்ல; ஏதாவது வேலைக்கு போகலாம்ன்னா திருட்டு பயல நம்பி எவன் வேலை கொடுப்பான்... அதோட, ஊருல இல்லாத சீக்கெல்லாம் வந்து, உடம்புல குத்தகை எடுத்து உட்கார்ந்துக்கிருச்சு.
''வீட்டுல ஒரு வாய் காபி தண்ணி கேட்டாக் கூட, பொண்டாட்டியும், மருமகளும், 'வக்கத்தவனுக்கு காபி தண்ணி கேட்குதோ'ன்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை நாள் தான் மனுஷன் வயித்துக்காக ரோஷத்த அடகு வைக்க முடியும்... சரி செத்து தொலையலாம்ன்னு போனேன். உம் புருஷன் புண்ணியவான், என்ன காப்பாத்தினது மட்டுமில்லா, இந்த வயசுல நேர்மையா உழைச்சு சாப்பிடுறது எத்தனை சுகமான விஷயம்ன்னு புரிய வச்சுட்டார்.
''உண்மையச் சொல்லணும்ன்னா, நான் இந்த, 60 வருஷமா வாழ்ந்தது வாழ்க்கை இல்ல தாயி. இதோ இப்ப வாழ்றேனே... இது தான் வாழ்க்கை. இத்தனை வருஷமா என்னை திருட்டுப் பயன்னு பேசுன ஜனங்க, இப்ப என்னயும் மனுஷனா மதிக்கிறாங்கன்னா... அது, உம் புருஷன் போட்ட பிச்சை தாயி,'' என்றார் உணர்ச்சி பெருக்குடன்!
அவர் பேசுவதை சலனமில்லாமல் கேட்டபடி இருந்தாள் மரகதம்.
''அட என்னப்பா நீ... இந்தக் கதையை எத்தனை தடவ சொல்வே... மனுஷன் பிறக்குற போதே ஞானியாவா பொறக்குறான். எந்த சூழ்நிலை உன்ன இரக்கமில்லாத கொடுமைக்காரனா ஆக்குச்சோ, அதே மாதிரி ஒரு சூழ்நிலை தான், இப்ப உன்னை திருத்தியும் இருக்கு. எப்ப நீ செஞ்ச தவறுகள நினைஞ்சு வருந்த ஆரம்பிச்சயோ, அப்பயே அந்த சாமியும் உன்னை மன்னிச்சிருக்கும். அதனால நடந்தத எண்ணி வருத்தப்படாம இருக்கிற காலத்துக்கு நேர்மையா நடந்து, புண்ணியத்த சேர்க்கப் பாரு. என்ன மரகதம் நான் சொல்றது சரிதானே...'' என்றார் பழனி. அவர் கேள்விக்கு எந்தவித முக மாறுதலும் காட்டாமல், மவுனமாக இருந்தாள் மரகதம்.
அவ்வளவு சீக்கிரம், ராசையாவை மன்னித்து விட அவளுக்கு மனம் வரவில்லை. சிறிது நேரத்தில் ராசையா விடைபெற்று சென்ற பின், கணவரை நோக்கி, ''போயும் போயும் இந்த திருட்டுப் பயலுக்கா இரக்கப்பட்டீங்க...'' என்றவள், ''இந்த ஆள் தான், 10 வருஷத்துக்கு முந்தி, பஸ் விபத்துல என்னை அடிச்சு தாலிய களவாண்டவன்,'' என்றாள் கோபத்துடன்!
''எனக்கு எல்லாம் தெரியும் மரகதம். ஒரு முறை, ராசையா, அந்த பஸ் விபத்து பத்தி சொல்லி வருத்தப்பட்ட போதே, உன்னை அடிச்சு தாலிய பறிச்சது அவர்தான்னு எனக்கு தெரிஞ்சுருச்சு. நீயே அவர் சொன்னத கேட்டியில்லே... மனுஷங்க தவறுகள, மனிஷன் மன்னிச்சாலும், கடவுள், அவரவர் செய்ற நல்லது, கெட்டதுகளை பகுத்து, அதோட பலா பலனை அவர்களையே அனுபவிக்க வைச்சு தீர்ப்பு கொடுத்துடுறார்.
''அப்படி கடவுளால் தண்டிக்கப்பட்டு திருந்திய ஒருத்தரை, குற்றம், குறைகளை உடைய சாதாரண மனுஷங்களான நாம தண்டிக்க நினைக்கிறது எந்த வகையில ஞாயம்... அதோட, ஒருவரோட குற்றங்களை பெரிசுபடுத்தி தண்டிக்கிறத விட, மன்னிச்சு ஏத்துக்கிறதுதான் மனுஷத்தனம்,'' என்றார் பழனி.
கணவரின் விளக்கத்தால் மனந்தெளிந்தவளாய், அவரைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள் மரகதம்.
எம்.வேல்ஹரிஹர தாஸ்