
சொல் வியாபாரம்!
சொன்ன சொல்லை
சத்தியமாக பாவிக்கின்றனர்
சத்தியவான்கள்!
சொல்லும் சொற்களில்
அசிங்க அர்த்தங்களைச் சேர்த்து
துச்சமாய் பார்க்க வைக்கின்றனர்
அயோக்கியர்கள்!
யோசித்து யோசித்து
சொற்களை அலங்காரமாய்
அடுக்குகின்றனர்
அரசியல்வாதிகள்!
சொன்ன சொல்லை
காப்பாற்றவில்லை என்றால்
உயிரையும் விடுகின்றனர்
கவரிமான் இனத்தினர்!
சொற்களுக்கு இடைப்பட்ட
இடைவெளிகளில்
புதிய அர்த்தங்களை
கற்பித்து கொள்கின்றனர்
முட்டாள்கள்!
அர்த்தமற்ற சொற்களையே
எப்போதும் பேசுகின்றனர்
அஞ்ஞானிகள்!
வழிகாட்டும் சொற்களையே
எப்போதும் பேசுகின்றனர்
ஞானிகள்!
தங்கள் சொற்களை
ஒரு பொருட்டாக
மதிப்பதில்லை
சுயநலமிகள்!
சொற்களை
கவிதைகளாக
அழகுப்படுத்துகின்றனர்
கவிஞர்கள்!
எப்போதும்
சொல் ஒன்றும்
செயல் ஒன்றுமாய்
இருந்து விடுகின்றனர்
சராசரி மனிதர்கள்!
சொற்களை
பணம் காய்க்கும் மரமாக
பாவித்து
வியாபாரம் செய்கின்றனர்
சொல் வியாபாரிகள்!
— ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை.