
'அண்ணாவின் வாழ்விலே' என்ற நூலிலிருந்து: காரைக்காலில் பொதுக்கூட்டம் முடிந்து, அண்ணாதுரை காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், கவிஞர் கருணானந்தம் மற்றும் கொத்தங்குடி ராமச்சந்திரன் போன்றோரும் இருந்தனர். திருநள்ளாறில் அண்ணாதுரையின் கார் பழுதாகியது. வேறு சக்கரம் மாட்டி பயணத்தை தொடர்ந்து, பேரளம் என்ற ஊருக்கு வந்த போது, அங்குள்ள திரையரங்கு அருகே காரை நிறுத்தச் சொன்ன அண்ணாதுரை, 'நம்ம எம்.ஜி.ஆர்., நடிச்ச படம் போட்டுருக்காங்க; பாத்துட்டுப் போகலாம்...' என்றார்.
'திரையரங்கு மேலாளர் எனக்குத் தெரிஞ்சவர்; இடம் இருக்குதான்னு பாத்துட்டு வர்றேன்...' என்று சொல்லிப் போனார் கருணானந்தம்.
அவர் திரும்பி வந்த போது, அவருடன் திரையரங்கு உரிமையாளரும், மேலாளரும் பரவசத்துடன் ஓடி வந்து, அண்ணாதுரைக்கு வணக்கம் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.
'படம் ஆரம்பித்த பின் வந்தது நல்லதாப் போச்சு. இல்லன்னா, கூட்டம் கூடியிருக்கும்...' என்றபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார் அண்ணாதுரை.
அப்போது, படம் நிறுத்தப்பட்டு திரையில், எங்கள் திரையரங்கிற்கு வருகை தந்திருக்கும் அறிஞர் அண்ணாதுரை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் வணக்கம், நன்றி — என்று, 'ஸ்லைடு' போட்டனர். 'அறிஞர் அண்ணா வாழ்க' என்று ஒரே கைதட்டல்! ஆரவாரத்தில் திரையரங்கம் அதிர்ந்தது.
படமும் துவங்கப்பட்டது. படத்தை முன்பே பார்த்திருந்த கருணானந்தம், படம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கும் போதே, அண்ணாதுரையை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
நடுத்தெரு நாராயணன்