
அன்புமிக்க அம்மா,
நான் அரசு அதிகாரி; வயது, 53. மனைவி வயது, 47. கல்லூரி செல்லும் இரு பெண்கள் உள்ளனர்; பாசமான குழந்தைகள். எங்கள் நால்வருக்கும் உறவினர்களிடமும், அண்டை அயலாரிடமும், என் அலுவலகத்திலும் நல்ல பெயர்.
எனக்கு, என் பெண்கள் மற்றும் மனைவி என்றால் உயிர். பிள்ளைகளின் படிப்பு கெடக் கூடாது என்பதற்காக, ஒன்பது ஆண்டுகள் வெளியிடங்களில் தனியாக வாழ்ந்தேன். எவ்வித கெட்ட பழக்கமும் கிடையாது. அசைவம் கூட இப்போது விட்டுவிட்டேன்.
முதல் ஆறு ஆண்டுகள், என் வாழ்க்கை நன்றாக சென்றது. என் மனைவியின் அலட்சியப்போக்கு, உதாசீனங்களை கல்யாணமான புதிதில் கண்டு கொள்ளவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல, நான் கேள்வி கேட்க ஆரம்பித்தாலே, வாக்குவாதங்கள் தோன்றின. என் குரல் கொஞ்சம் அதிகார தொனியில் இருக்கும். இது மட்டுமே என் குறை என்று, என் குடும்பத்தினர் கூறுவர். வாக்குவாதம் முடிந்த பின், கொஞ்ச நாட்கள் என் மனைவி என்னிடம் பேச மாட்டாள்; நான் தான் பேச வைப்பேன்.
கல்யாணமான ஆறாவது ஆண்டில், புற்றுநோயால் இறந்து விட்டார் என் மாமனார். அப்போது, என் மனைவி ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. இத்தனைக்கும், அவள், தன் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை மற்றும் தம்பியிடம் உயிராக இருப்பாள். மாமனார் இறந்த இரு நாட்களுக்கு பின், 'எப்ப ஊருக்கு போகணும்...' என்று மனைவியிடம் கேட்டேன். என்னவென்றே தெரியவில்லை... திடீரென தோட்டத்து கிணற்றில் குதிக்கச் சென்று விட்டாள். அவள் தங்கை தான் தடுத்து நிறுத்தினாள்.
அவள் ஏன் கிணற்றில் குதிக்கச் சென்றாள் என்றே புரியவில்லை. அதன்பின், சில மாதங்கள் என்னை கண்டபடி பேசினாள். அப்பா இறந்ததால், மனம் குழம்பியுள்ளாள் என நினைத்து, அமைதியாக இருந்தேன். அதன்பின், இன்று வரை குழந்தைகளோடு தான் தூங்குகிறாள்; என் அறைக்கு வருவதில்லை. இல்லற வாழ்வு அத்தி பூத்த மாதிரி ஆகிவிட்டது. கேட்டால், 'இரண்டு குழந்தை பெற்ற பின் என்ன ஆசை...' என்று என்னை மட்டமாக பேசி, சீறி விழுகிறாள்.
நான் வெ ளியூரில் இருந்த ஒன்பது ஆண்டுகளில், ஒருமுறை கூட போனில் நலம் விசாரிக்கவில்லை. கேட்டால், 'நீங்க தான் பேசுறீங்களே...' என்று அலட்சியமான பதில் வரும்.
கல்லூரியில் படித்த காலத்தில் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று நினைத்தாளாம். 'உன் அப்பாவிடம், கல்யாணமே வேண்டாம் என சொல்லியிருக்கலாம் தானே...' என்றால், அவளிடம் பதில் இல்லை. அதற்கும் என்னையே குற்றம் சொல்வாள்.
என் அம்மாவும் அவளை குறை சொல்வதில்லை. ஏனெனில், அவர்களுக்கு அவள் நல்ல மருமகள்.
இப்படி யாரோ இருவர் மாதிரி வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை. என் பெண்களுக்காக தான் இந்த, 19 ஆண்டுகளாக பொறுமையாக இருக்கிறேன். எனக்கு, இன்னும் அவள் மேல் அன்பு இருக்கிறது. இருவரும் சந்தோஷமாக வாழ வழி சொல்லுங்கள். அவளும், 'தினமலர் - வாரமலர் இதழ்' படிப்பதால், உங்கள் ஆலோசனை எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்புள்ள சகோதரருக்கு,
கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாது, சாமியார் போல் இருக்கும் கணவன்மார்களை, பெரும்பாலான மனைவியருக்கு பிடிப்பதில்லை. மகள்கள் படிப்பு கெடக் கூடாது என்று, ஒன்பது ஆண்டுகள் நீங்கள் தனியாக இருந்தது மாபெரும் தவறு. தகப்பன் இல்லாமல் மகள்களும், கணவன் இல்லாமல் மனைவியும் வாழ பழகி விட்டனர்.
கணவன் - மனைவிக்கு இடையே சண்டை வந்தால் சமாதானத்துக்கு முதலில் வருவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. வில்பவர் உள்ள ஆண் அல்லது பெண் சமாதானக் கொடி காட்டாது சண்டையை நீட்டிப்பர். குற்ற உணர்ச்சி மிகுந்தோர், திருமண உறவு பாதிக்கக் கூடாது என்போர், 'ஈகோ'வை கழற்றி வைத்தோர், எதிராளியிடம் மன்னிப்பு கேட்டு, சண்டையை முடித்து கொள்வர்.
அதேசமயம், எதற்கெடுத்தாலும் முந்திரிக் கொட்டை மாதிரி சமாதானம் பேசுவோரை, எதிராளி இளப்பமாக கருதுவார். அப்படித்தான் உங்கள் மனைவியும் உங்களை ரோஷமே இல்லாதவர் என, கேலி செய்கிறாள்.
தன் தந்தை புற்று நோயால் இறந்தபோது, உங்கள் மனைவி துக்கப்படவில்லை என்கிறீர்கள். அழுது புரண்டு ஒப்பாரி வைத்தால் தான் துக்கமா? சிலர் துக்கங்களை உள்காயமாக கொண்டிருப்பர். உள்காயத்தை யாராவது ஏதாவது கீறிவிட்டால் குருதி பீறிடும். அப்பாவின் மரணத்துக்கு அதிக துக்கப்படவில்லை என, நீங்கள், உங்கள் மனைவியை பழித்தது, உங்கள் மனைவிக்கு தெரிந்திருக்கிறது. அந்த ஆங்காரத்தில் தான், உங்கள் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்.
உங்கள் மனைவி, உங்களைத் தவிர அனைவரிடமும் இன்முகம் காட்டுகிறாள் என்றும், உங்கள் தாயாருக்கு நல்ல மருமகளாகவும், உங்களுக்கு உடல் நலம் இல்லாத சமயங்களில் விழுந்து விழுந்து கவனிக்கிறாள் என்றும், சமையல் பிரமாதமாய் செய்வாள் என்றும், மகள்களுக்கு மிகச் சிறந்த தாயாய் விளங்குகிறாள் என்று நீங்கள் கூறியிருப்பதிலிருந்து, உங்கள் மனைவி உங்களை என்ன தான் திட்டினாலும், உதாசீனப் படுத்தினாலும், அவருக்கு உங்கள் மீது ஆழமான அன்பு இருக்கிறது என்று தெரிகிறது.
திருமணமான முதல் ஆறு ஆண்டுகள் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால், அதன்பின் உங்களின் குணங்கள், உங்கள் மனைவியை உள்ளும், புறமும் காயப்படுத்தியிருக்கின்றன. வாக்குவாதங்களில் சூடேறி கிளம்பிய ஆத்திர வார்த்தைகள், அமில வீச்சாய் உங்கள் மனைவியை நிலைகுலைய செய்துள்ளது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள், 'ஈகோ'வை விட்டு, அவளுக்கு, உங்கள் மீதிருக்கும் கோபதாபங்களை பட்டியலிடச் சொல்லுங்கள். அனைத்திற்கும் நெஞ்சார மன்னிப்பு கேளுங்கள். உங்களுக்கு அவள் மீது இருக்கும் அளவிட முடியாத காதலை கொட்டித் தீருங்கள்; உங்களிடம் என்னென்ன மாற்றங்களை உங்கள் மனைவி எதிர்பார்க்கிறாள் என்பதை தெரிந்து, அதன்படி மாறுங்கள். மனைவி, மகள்களுடன் ஒரு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். மனக்கசப்புகள் நீங்கி, இல்லறம் சுகப்படும்.
வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

