தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வட்டி!

வட்டி!

வட்டி!


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சைக்கிளில் வந்து, வீட்டு வாசலில் இறங்கினான், முரளிதரன். வீட்டுக்குள்ளிருந்து கணீர்கணீரென்று குரலோசை வீதிவரை எட்டியது. மாமா சூரிய நாராயணனின் குரல் தான் அது. சாதாரணமாக பேசினாலே சண்டை போடுவது போலிருக்கும்... எட்டு கட்டை ஸ்ருதி.

அவர் தெருவின் ஒரு கோடியில் நின்று ரகசியமாக பேசினால் கூட, மறு கோடியில் நின்று கேட்பவனுக்கு காது செவிடாகிவிடும்; கொஞ்சம் மிகை போலத் தெரிந்தாலும் உண்மை அதுதான்.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய கையோடு, பாக்கெட்டில் இருந்த காசை தொட்டுப் பார்த்துக் கொண்டான். பத்திரமாக இருந்தது, 400 ரூபாய். அவரிடம் வாங்கிய, 20 ஆயிரம் ரூபாய் கடனுக்கு, 100க்கு ஒரு ரூபாய் கணக்கில் மாதம், 200 ரூபாய் வட்டி.

முதல் மூன்று மாதம் சரியாக கட்டியாகி விட்டது. போன மாதம் விடுபட்டு விட்டதை சேர்த்து, 400 ரூபாய். உள்ளே நுழைந்தான், முரளிதரன்.

ஹாலில், சோபாவில் மலை போல் சரிந்து உட்கார்ந்த நிலையில், முரளிதரன் மனைவி லலிதாவுடன் பேசிக் கொண்டிருந்தார், சூரிய நாராயணன்.

இவரிடம், மலிவு வட்டிக்கு கடன் வாங்கிய உறவுக்காரர் ஒருவர், அசல் மற்றும் வட்டியை தராமல் இழுத்தடிப்பது குறித்து, லலிதாவிடம் ஆவேசப்பட்டுக் கொண்டிருந்தார்...

''வாங்க மாமா. எப்ப வந்தீங்க...?'' என்றான், முரளிதரன்.

''அரை மணி நேரமாச்சி. உனக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்...'' என்றவர், லலிதாவிடம் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தார்...

''எவனாவது கொடுப்பானாம்மா இந்த காலத்துல... ஒரு ரூபாய் வட்டிக்கு. நான் கொடுக்கறேன். ஏன் குடுக்கறேன். நான் பணக்காரன்றத நாலு பேருக்கு காட்டிக்கறதுக்கா? சொல்லும்மா... கடவுள் புண்ணியத்துல நிறைய சம்பாதிச்சேன்.

''கார்ப்பரேஷன்ல வேலை பார்க்கறவங்களுக்கு சம்பளம் கால் பங்குன்னா, கிம்பளம் முக்கால் பங்கு. மத்தவன் என்ன பண்றான்? இரைச்சுடறான்... தண்ணியடிக்கறது, ஹோட்டலுக்கு போறது... இன்னும் நிறைய வழியில அழிக்கறான். இன்னும் சில பேரு... யாருக்கும் தெரியாத படிக்கு பினாமி பேர்ல சேர்த்து வைக்கறாங்க.

''ஆனால், நான், உன்ன மாதிரி, உம் புருஷன் மாதிரி உறவுக்காரங்க, அவசர ஆபத்துக்கு வந்து நிற்கறப்ப... வங்கி மாதிரி உடனே பணம் கொடுத்து உதவறேன். ஆனா... 'அய்யா ஆபத்து நிலைமை, சகாயம் பண்ணுங்கோ'ன்னு வாசல்ல வந்து விழுந்தப்ப, 25 ஆயிரம் ரூபாய சுளையா கொடுத்தனே... அது ஒண்ணுத்துக்கே எவ்வளவு நன்றியா நடக்கணும்.

''என்னை நாலுதரம் நடக்க விட்டதுமில்லாம, 'இந்தாளு வேர்வை சிந்தி ஒழைச்ச பணமா... லஞ்சப் பணம்! கையில இருந்தால் மாட்டிக்குவோம்ன்னு ஆள்மேல கொடுத்து வைக்கறாரு பினாமி மாதிரி. இதுக்கு வட்டி அவருல்ல கொடுக்கணும்'ன்னு சொல்றான்னா, அவனுகளை சும்மா விடலாமா...'' என்று பேச்சு நீண்டு கொண்டிருப்பதற்குள் உடை மாற்றி, முகம் அலம்பி, டவல் எடுத்து துடைத்துக் கொண்டான், முரளிதரன்.

சமையல் அறையிலிருந்து வாசனை மூக்கை துளைத்தது. மாமா விஜயம் செய்யும் நாளில், வீட்டில் ஸ்பெஷலாக ஏதாவது செய்தாக வேண்டும். வெறுமனே சாம்பார், ஒரு பொரியல் போட்டால், அவரது சுபாவப்படி ஊரெல்லாம் டமாரம் அடித்து விடுவார்...

'நான் அசைவப் பிரியன், சாப்பாட்டுல ஒரு துண்டு முள்ளோ, எலும்போ இருந்தாதான் தொண்டைல எறங்கும். ஒரு மாமாங்கற முறைக்கு, வீடு தேடி வந்ததுக்கு, பருப்பு சோறு மூஞ்சிலடிச்சாப்ல போட்டு அனுப்பிட்டான்யா...' என்பார்.

மாமாவை பாம்பென்று தாண்டவும் முடியாது; பழுதென்று மிதிக்கவும் முடியாது. அவர் கார்பரேஷனில், 'வளம் கொழிக்கும்' பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றவர்.

அந்த வளம், சிட்டியில் நாலைந்து வீடுகளாகவும், எந்த காலத்திலும் சரிவடையாத நிலையான கம்பெனிகளின், 'ஷேர்'களாகவும், மனைவி கழுத்தில் நகைகளாகவும் இருக்கிறது. இதுபோக, கையில், 'லிக் விட்' ஆக, ஏழரை லட்சங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்.

மாமாவிடம் இதுதான் விசேஷம்...

தான் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்த பராக்கிரமத்தையும், கைவசமுள்ள ஆஸ்தி, பாஸ்தி விவரங்களையும் பார்க்கிற எல்லாரிடமும் சொல்லி விடுவார். அதற்கு இரண்டு காரணம்...

சொந்த பந்தங்களுக்கு நடுவில், தான் விபரமானவன், பணக்காரன் என்று காட்டிக் கொள்வது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், வெளியில் சொன்னால் தன் தலைக்கு ஒரு ஆபத்தும் வராது என்ற தைரியம்.

வருமானவரிக்காரர்களிடம் இருந்து தப்பிக்கும் சகலவிதமான நுணுக்கங்களும் அறிந்தவர்; அதேசமயம் கொள்ளை போகாதபடிக்கு நகையும், பணமும் பத்திரபடுத்துவதில் கில்லாடி.

வங்கியில் ஒரு போதும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், 'பிக்சட்' போட மாட்டார். 'வருஷத்துக்கு, 5,000துக்கு மேல வட்டி வந்தா, கணக்கு காட்டணும்...' என்பார். 20 ஆயிரம் பெருமான நகையை வட்டிக் கடையில், 100 ரூபாய்க்கு அடமானம் வைப்பார். 'வீட்ல வச்சுட்டுப் போனால் ரிஸ்க்; அடகு கடைகாரன்கிட்ட பத்தரமா இருக்குமே...'

இப்படி ஏராளமான யுக்திகளும், குயுக்திகளும் கொண்ட மாமாவை, அவரது, 'டாமினேஷனை' பொதுவாக யாரும் விரும்புவதில்லை தான்; ஆனால், அவர் தானே பணம் வைத்திருக்கிறார். அவரது அதிர்ஷ்டம், சொந்த பந்தங்கள் எல்லாம் வறுமைக் கோட்டிற்கு சற்றேறக்குறைய வாழ்பவர்கள் தாம்.

நல்லது, கெட்டதற்கு, பணத்திற்கு அவரைத்தானே அண்டியிருக்க வேண்டியுள்ளது. அவரிடம் கடன் வாங்கினால், மறுநாள் பேப்பரில் எல்லா தினசரிகளிலும் செய்தியாக வந்தது போலத்தான்...

அனைவருக்கும் தெரிந்து போகும். அதை ஒரு பாதுகாப்பு கருதி தான் அவர் செய்கிறார். பணம் வாங்கியவன் நாளைக்கு மறுக்க முடியாது. கடன் கொடுப்பதில் சூரிய நாராயணன் உலக வங்கி மாதிரி தான். ஏகப்பட்ட, 'டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!'

முதலாவது: கடன் வாங்குபவன், தன் அந்தரங்கம், குடும்ப அந்தரங்கம், வரவு, செலவு... விருப்பு, வெறுப்பு உள்ளிட்ட சகலத்தையும் அவரிடம் வாக்குமூலம் தரவேண்டும்.

கடன் வாங்கிய பிறகு, அதை என்ன செய்ய வேண்டும், செலவு எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவரது மேற்பார்வையின் படியும், உத்தரவின் படியும் தான் செய்ய வேண்டும்.

யாராவது மகளின் கல்யாணத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டால், அவர்களது பூர்வோத்ரம் மட்டுமல்ல, மாப்பிள்ளை வீட்டார் யார், என்ன... பையன் நிஜமாகவே வேலை பார்க்கிறானா, அப்படி எனில், அவன், 'அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்' எங்கே என்றெல்லாம் குடைந்து விடுவார்...

'நாளைக்கு மாப்பிள்ளை ஏமாத்திட்டு, உன் பொண்ணு கண்ணை கசக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டால், நீ மனசு வந்து கடனை திருப்புவியா? கொடுக்கறவனுக்கு திருப்பி வாங்கவும் தெரியணும்; இல்லேன்னா, தலை போண்டியாயிரும்...' என்பார்.

அதெல்லாம் ஒரு வகையில் சரி தான் என்றாலும் அவரது, 'தண்டல்காரத்தனம்' எல்லாரிடமும் சலிப்பேற்றி விடுவதென்னமோ உண்மை தான்.

மாமாவின் குணம் தெரிந்துதான், கூடுமானவரை அவரை நெருங்காமல் இருந்தான், முரளிதரன். சந்தர்ப்ப சூழ்நிலை கைநீட்டும் படியாயிற்று.

சாப்பிட உட்கார்ந்தும், அவரது சரமாரி பேச்சு நிற்கவில்லை...

''என்னை டபாய்ச்சுடலாம்ன்னு பாக்கறாம்பா, அவன். விட்ருவனா... ஏம்பா, என் சர்வீஸ்ல எத்தன பேர பார்த்திருப்பேன்... சொடக்கு போட்ட நேரத்துல, நடுத்தெருவுக்கு இழுத்து நாறடிச்சிர மாட்டேன்...'' என்றவர், அந்த கோபத்துக்கு நடுவிலும் சாப்பாட்டு ருசியை மறக்கவில்லை.

நாக்கு சப்பு கொட்டினார்...

''பர்ஸ்ட் க்ளாசா இருக்கப்பா, சாப்பாடு. கொழம்பு அற்புதமா இருக்கு. அடடா... ரொம்ப நாளாச்சுப்பா இப்படி சாப்பிட்டு. உங்க அத்தைகிட்ட கூட இந்த கை பக்குவம் இல்லை,'' என்று பாராட்டினார்.

லலிதாவும் சந்தோஷமாகி, ''இன்னும் கொஞ்சம் போட்டுக்கங்க,'' என்று, மொத்த கறிக்குழம்பும் அவர் இலையில் கொட்டினாள்.

''முரளிக்கும் போடும்மா...''

''இருக்கட்டும் மாமா; நான் இன்னைக்கு விரதம்!''

மாமாவுக்கு தெரியாமல், ''கறி வாங்க ஏது காசு?'' என்று கேட்டான், முரளிதரன்.

''பத்மாக்காகிட்ட நாளைக்கு தர்றேன்னு கைமாத்து வாங்கினேன். என்னதான் கடன்காரர்னாலும், அவ்ளோ பெரியவர், வீடு தேடி வந்தவரை உபசரிக்க முடியாமல் விட முடியுமா?'' என்றாள், லலிதா.

நியாயம் தான்; ஆனால், நாளைக்கு இன்னொரு 100 ரூபாயை 'ரெடி' பண்ண வேண்டுமே. எந்த மரத்தில் காய்க்கிறது.

சாப்பிட்டு, கை கழுவியதும், டைரியை புரட்டினார். கணக்கு பக்கத்தை திருப்புவதற்குள், 400 ரூபாயை கொண்டு வந்து கொடுத்தான், முரளிதரன்...

''இனி தாமதமாகாது. மாசா மாசம் நானே வீட்டில் வந்து கொடுத்து விடுகிறேன்...'' என்றவன், 'நீங்க வந்தால் எனக்கு கூடுதல் செலவு...' என, மனதுக்குள் நினைத்தபடி, ''இந்த ஒரு முறை பொறுத்துக்கங்க,'' என்று கேட்டுக் கொண்டான்.

''இருக்கட்டுமே, நானே வந்து வாங்கிக்கறேன். பணி ஓய்வுப்பெற்று வீட்ல சும்மா உட்கார்ந்திருந்தால் ஒடம்பு பெருத்து போகும். உன் சம்சாரத்தோட சமையல் ருசிக்காகவாவது நான் வருவேன்,'' என்றார்.

முரளிதரனுக்கு, 'ஹிஹி' என்று அசட்டு சிரிப்பு சிரிப்பதை தவிர, வேறு வழியில்லை.

''இன்னொரு ரெண்டு ரூபாய் கொடுப்பா. போன மாச வட்டி, 200 ரூபாய்க்கு, 1 சதவீத வட்டி,'' என்றார், சூரிய நாராயணன்.

முரளிதரன் மட்டுமல்ல, லலிதாவுக்கும் என்னவோ போலிருந்தது.

வட்டிக்கு வட்டியா? இவரென்ன உறவுக்காரரா, கந்துவட்டிக்காரரா? சுத்த அல்பமாய் ரெண்டு ரூபாய் எடுத்து வைக்கச் சொல்கிறாரே...

அங்கே, இங்கே தேடி, குழந்தையின் உண்டியலில் இருந்து ரெண்டு ரூபாய் சில்லரை எடுத்து கொடுத்ததும், ''கணக்குல நான் ரொம்ப கறார்,'' என்றபடி எழுந்தவர், பர்சிலிருந்து, 100 ரூபாயை எடுத்து லலிதாவிடம் கொடுத்தார்...

''கஷ்டத்துக்கு நடுவிலும், வாய்க்கு ருசியா சமைச்சிப் போட்டே, வச்சிக்க...'' என்றவர், ''நான் போய் அவனை ஒரு பிடி பிடிக்கணும். மனசுல என்ன நினைச்சிருக்கான் அவன்...'' என, நடையைக் கட்டினார், மாமா.

க. ஆடலரசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us