PUBLISHED ON : ஆக 08, 2010

அன்புள்ள சகோதரிக்கு —
எனக்கு வயது 68. ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பிள்ளைகள். பெண்ணுக்கு திருமணமாகி, மூன்று ஆண் குழந்தைகளோடு வசிக்கிறாள். மகன் தான் மூத்தவன்; அவனுக்கு, உள்ளூரிலே பெண் பார்த்து, திருமணம் செய்து வைத்தோம். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது; குழந்தை பாக்கியம் இல்லை.
இது சம்பந்தமாக மருத்துவர்களை அணுகியபோது, என் மகனுக்கு, உயிரணுக்களின் உற்பத்தி குறைவாக உள்ளதாகவும், தொடர்ந்து இரண்டு மாதம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என்றும் கூறினர்.
இந்நிலையில், என் மகன், தன் மனைவியை அழைத்துக் கொண்டு, மருத்துவமனை சென்றிருக்கிறான். பரிசோதித்த டாக்டர், அவள் மூன்று மாத கர்ப்பம் என்று கூறியிருக்கிறார். என் மகனுக்கு ஒரே குழப்பம். அவன் பிறவியிலே மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவன். எங்களிடம் வந்து விவரத்தைச் சொன்னான். எனக்கும், என் மனைவிக்கும், சந்தேகத்தோடு கூடிய, சந்தோஷம். இந்த நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்...
என் மகன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்கப் போகிறேன் என்று மனைவியிடம் சொல்லி விட்டு புறப்பட்டவன், என்ன காரணத்தாலோ, நாளை போகலாமென நினைத்து, வீடு திரும்பியிருக்கிறான்.
வீட்டுக்கு வந்தவனுக்கு, பெரும் அதிர்ச்சி! அவன் மனைவி, அவளது உறவுக்காரப் பையனோடு தவறாக நடந்து கொண்டிருந்ததை நேரில் பார்த்து விட்டான். எதிர்பாராதவிதமாக இவன் வந்து விட்டதைக் கண்டு, அந்த திருட்டு நாய் ஓடிவிட்டது.
மனைவியிடம், 'நான் என்ன குறை வைத்தேன்... ஏன் இவ்வாறு நடந்து கொண்டாய்?' என்று கேட்ட போது, 'அப்படித் தான் நடந்து கொள்வேன்!' என்று, திமிரோடு கூறியிருக்கிறாள். உடனே, அவளது பெற்றோரைச் சந்தித்து, நடந்ததை கூறியிருக் கிறான்.
அவர்களும், 'சரி... சரி! இதை பெரிது படுத்தாதீர்கள். கர்ப்பத்தை வேண்டுமானால் கலைத்து விடுவோம். உங்கள் பெற்றோரிடம் கூற வேண்டாம். இனி, இதுபோல் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!' என்று, சர்வ சாதாரணமாக கூறியிருக்கின்றனர். உடனே, நேராக எங்களிடம் வந்துவிட்டான்.
அப்போது, எங்கள் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் வந்திருந்தனர். மிகவும் சந்தோஷமாக இருந்த வேளையில், என் மகன் கண்ணீரோடு இந்த விவரங்களை சொன்ன போது, அதிர்ந்து விட்டோம். அவளுடைய குடும்பத்தார் சேர்ந்தே இந்த கீழ்த்தரமான சதியை அரங்கேற்றியிருக்கின்றனர் என்று திட்டவட்டமாக புரிந்தது.
நாங்கள் அனைவரும், ஒரே முடிவாக கூறிவிட்டோம்... 'இன்றோடு, உனக்கும், அவளுக்கும் உள்ள திருமண பந்தம் அறுந்து விட்டது; சந்தோஷமாக தலைமுழுகு...' என்று.
அவர்கள் தரப்பிலிருந்து யாருமே வரவில்லை. என் மகளும், மருமகனும், 'எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் யாரும் அவர்களை சந்திக்க வேண்டாம்; அவர்கள் வந்தால், கையெழுத்து வாங்குங்கள். பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்...' என்று கூறுகின்றனர்; நாங்களும் அதே முடிவில் தான் இருக்கிறோம்.
தற்போது, எங்கள் மகன், எங்களோடு இருந்து, பணிக்கு சென்று வருகிறான். எக்கார ணம் கொண்டும், என் மகனோ, நாங்களோ அவளை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
இதுபற்றி தங்களின் தீர்க்கமான ஆலோச னையை எதிர்பார்க்கிறோம்.
— அன்புடன் சகோதரன்.
அன்புள்ள அண்ணா —
உன் கடிதம் கிடைத்தது. கடித முகப்பில், வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என எழுதியிருந்தீர்கள். ஓம் என்ற வார்த்தையுடன் கடிதத்தை ஆரம்பித்திருந்தீர்கள். 68 வயதான நீங்கள், பெரியார் தமிழ் உபயோகித் திருக்கிறீர்கள். ஆகவே, காலமாற்றத்தோடு இயைந்து வாழும் ஆன்மிகர் நீங்கள் என புரிந்து கொண்டேன்.
மகனுக்கு துரோகம் செய்யும் மருமகளை, குடும்ப வட்டத்திலிருந்து நிரந்தரமாக தூக்கியெறிய துடிக்கிறீர்கள். இதுதானே உங்கள் கடிதத்தின் சாராம்சம்?
உங்களின் ஒரே மகனுக்கும், மருமகளுக்கும் இடையே, 'செவன்த் இயர் இட்ச்' எனும் மன குறைபாடு வந்திருக்கிறது. அதாவது, திருமணமான ஏழாம் வருடத்தில், கணவன், மனைவிக்கிடையே ஒரு உச்சகட்ட வெறுப்பு ஏற்படும். எதிரும், புதிருமான அரசியல்வாதிகள் கூட ஒத்துப் போவர்; இவர்கள் ஒத்துப் போக மாட்டார்கள்.
இந்த மனக்குறைபாடு, திருமணமாகி 14, 21, 28வது வருடங்களில் தொடரும். குழந்தைகள் பிறப்பு, சமூக பொருளாதார வெற்றிகள், 'செவன்த் இயர் இட்ச்'சை தம்பதியினரிடமிருந்து போக்கும் காரணிகள்.
உங்களது மகனுக்கு உயிரணுக்கள் உற்பத்திக் குறைவாய் இருப்பதற்கு, குடிப்பழக்கம், நீண்டகால முஷ்டிமைத்துனம் கூட காரணமாய் இருக்க வாய்ப்புண்டு. விபத்துகளில் பிறவி உறுப்பு பாதிக்கப்பட்டு கூட இருக்கலாம். உங்களது மகன் குடிப்பழக்கம் உள்ளவரா, இல்லையா என்று உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. கதிரியக்க வீச்சு உள்ள இடங்களில் நீண்டகாலம் பணிபுரிந்தாலும், உயிரணு உற்பத்தி குறையும். மிதமிஞ்சிய உடல்பருமனும் ஆண்மைக்கு கேடு. தவிர, உங்களின் கடிதத்தின்படி, உங்களது மகனுக்கு தெய்வபக்தி அதிகம் என தெரிய வருகிறது. அதீத தெய்வ பக்தி உடையவர்கள், பெரும்பாலும் தாம்பத்யத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை. உங்களது மகனும், சதா பக்தியில் திளைத்து, மனைவியை தவிக்க விட்டாரோ, என்னவோ? ஏழு வருட தொடர் புழுங்கலுக்குப் பின், திருமண பந்தம் மீறிய உறவில் கால் வைத்திருப்பாரோ உங்கள் மருமகள் என நினைக்கிறேன்.
உங்களது சம்பந்திகள், மருமகளின் துர்நடத்தைக்கு கூட்டுக்கையாக இருந்திருக்கின்றனர் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மருமகன் மூலம் புதிதாய் விஷயம் தெரிந்த அவர்கள், பிரச்னையை அவர்களுக்கு தெரிந்த விதத்தில் சுமூகமாக தீர்க்க முயற்சித்திருக்கின்றனர்.
இனி, பிரச்னைக்கான தீர்வை பார்ப்போம்...
மருமகளின் தவறுக்கு, உங்கள் மகன், உடல், மனரீதியாய் ஏதோ ஒரு வகையில் தொடர் காரணமாக இருந்திருக்கிறாரா என்று பாருங்கள். தவறு செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும், ஒரு குற்ற ஆண் காரணமாய் நிற்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை. மனைவி மீதான அதிருப்தியில், மனைவியின் நடத்தையின் மீது களங்கம் கற்பித்திருப்பாரோ உங்க மகன்?
உங்களது மருமகளுக்கு குழந்தை பிறந்தால், சில பல விடுகதைகளுக்கு விடை கிடைத்துவிடும்.
உங்களது மகன், உங்களோடு இருந்து பணிக்கு, செல்கிறார்; மருமகள், அவரது பெற்றோர் வீட்டில். உங்கள் மகன், உங்களுக்குத் தெரியாமல் அவர் மனைவியை பார்த்து வருகிறாரா என கவனியுங்கள். நிறைய ஆண்கள், இரண்டும் கெட்டான்களாக இருக்கின்றனர். மனைவியின் நடத்தை சரியில்லை எனச் சொல்வர்; அதே நேரத்தில், யாருக்கும் தெரியாமல் மனைவியை போய் பார்த்து வருவர்.
உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் விவாகரத்து நிரந்தர அமைதியை பெற்றுத்தரும் என்ற நிலை இருந்தால், பரஸ்பர விருப்பத்துடன் கூடிய விவாகரத்தை பெறுங்கள். உங்கள் மகன் குடும்ப வாழ்க்கைக்கு தொடர்ந்து பொருத்தமில்லாதவராய் இருந்தால், அவருக்கு தப்பித்தவறி மறுமணம் செய்து வைக்காதீர்கள். அந்த பெண்ணின் வாழ்க்கையையும் கெடுத்ததாய் ஆகிவிடும்.
விவாகரத்துக்கு பின், உங்களது முன்னாள் மருமகள், மறுமணம் செய்து கொள்ள விரும்பினால், குறுக்கே நிற்காதீர்கள். அவரது மறுமணம், அவருக்கு சந்தோஷங்களை வழங்கட்டும். பழுத்த ஆன்மிகவாதியான நீங்கள், அப்பெண்ணை இறைவனின் பொருட்டு மன்னித்து, மறங்கள்.
— என்றென்றும் அன்புடன்,
சகுந்தலா கோபிநாத்.
* * *
