PUBLISHED ON : ஏப் 16, 2023

கையில் கழி வெச்சுக்கிட்டு, தினமும் வீட்டு வாசல்ல வந்து கம்பீரமா உட்கார்ந்திருப்பார், செல்வந்தர் ஒருவர். ஒருநாள், வசதி எதுவும் இல்லாத ஏழையான, சாதாரண ஆள் அந்த வழியாக வந்தார்.
'இப்படி வாப்பா...'ன்னு, செல்வந்தர் கூப்பிட, அவர் முன் வந்து நின்றார், ஏழை.
'இதோ பாருப்பா... உன்னை விட மூடனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்ல. அதனால, இதோ இந்த கழியை உன்கிட்ட இப்ப குடுத்துடறேன்...'னு சொல்லி, கழியை அவனிடம் கொடுத்தார்.
'சரிங்க... இதை வச்சுக்கிட்டு நான் என்ன செய்வது?'ன்னு அந்த ஏழை கேட்க, 'உன்னை விட மூடனை நீ எப்ப சந்திக்கிறியோ, அப்போ இந்த கழியை அவன்கிட்ட குடுத்துடு...' என்றார்.
'சரி...'ன்னு சொல்லி, அந்த கழியை வாங்கிக்கிட்டு போயிட்டார். அதுக்கப்புறம் பல ஆண்டுகள் கடந்தன. தன்னை விட மூடன் யாரையும் அந்த ஏழை பார்க்கவே இல்லை. அதனால, அந்த கழி அவரிடமே இருந்தது.
ஒருசமயம், அந்த கழியை குடுத்த செல்வந்தருக்கு, வியாதியால், உடம்பு ரொம்ப மோசமானது. இதை கேள்விப்பட்டு, 'சரி, போய் என்னன்னு பார்த்துட்டு வரலாம்...' என, புறப்பட்டு வந்தார், ஏழை.
அரண்மனை மாதிரி வீடு இருந்தும், ரொம்ப மோசமான நிலையில், ஒரு சின்ன கட்டிலில் படுத்துக் கிடந்தார், செல்வந்தர். தான் இனிமே பொழைக்க மாட்டோம் என்பது அவருக்கு புரிந்து போனது.
'என்ன இப்படி ஆயிட்டீங்களே?'ன்னு கேட்டார், ஏழை.
'நான் இந்த ஊரை விட்டு போகப் போறேன்னு நினைக்கிறேன்...' என்றார், செல்வந்தர்.
'அப்படின்னா, மறுபடியும் எப்ப திரும்புவீங்க?'
'அந்த ஊருக்குப் போனா, திரும்ப வர முடியாது...'
'அப்படின்னா, அங்கே உங்க செலவுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கிட்டு போறீங்களா?'
'அதுதானே முடியாது. இந்த பணம், அந்த ஊர்ல செல்லாது. கொஞ்ச காலமே வாழப் போற இந்த ஊர்ல செலவு பண்றதுக்கு, நான் ஏராளமான பணம் சம்பாதிச்சேன். ஆனா, அந்த ஊர்ல எந்த பணம் செல்லுபடியாகுமோ அந்த பணத்தை சம்பாதிக்காம விட்டுட்டேன்...' என்றார், செல்வந்தர்.
'அது என்ன பணம்?'
'அதுதான் புண்ணியம்ங்கிற பணம். கபீர்தாசர் என்ன சொல்றார்ன்னா, 'ராம நாமம் தான் அந்த பணம்ங்கிறார். போறப்போ அதை கூட எடுத்துக்கிட்டு போகணும்'ன்னு சொல்றார்...' என்றார், செல்வந்தர்.
அந்த ஏழை, தன் கையில இருக்கிற அந்தக் கழியையும், அந்த செல்வந்தரையும் மாறி மாறி பார்த்தார்.
படுக்கையில் இருந்தபடியே இதை கவனித்த பணக்காரர், 'என்ன யோசனை பண்றே... அந்தக் கழியை என்கிட்ட குடுத்துடு. என்னை விட மூடன் வேற யாரும் இருக்க முடியாது...' என்றார், செல்வந்தர்.
இறைவன் நாமத்தை சொல்றதுன்னா, வெறுமனே உச்சரிக்கிறது மட்டுமில்ல. அது நம் மனசை பக்குவப்படுத்தணும்; புண்ணிய காரியங்களை செய்யிறதுக்கு அது காரணமா அமையும். அதுதான் மேல் உலகில் செல்லுபடியாகும் பணம்.
பி.என்.பி.,
