தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:

சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தார், சர்.பி.டி.தியாகராயர்.

ஒருமுறை, வேல்ஸ் இளவரசர், சென்னை வருவதாக இருந்தது.

அப்போது, சென்னை மாகாண கவர்னர் லார்டு வெல்லிங்டன், சர்.பி.டி.தியாகராயரிடம், 'சென்னை மாநகரின் முதல் பிரஜை என்ற முறையில், இளவரசரை நீங்கள் தான் வரவேற்க வேண்டும். அப்போது, குறிப்பிட்ட முறையில் தான் உடை உடுத்தி வரவேண்டும்...' என்று கூறினார்.

வேறு யாரிடமாவது இந்தக் கட்டளை இடப்பட்டிருந்தால், அரச கட்டளைக்கு பணிந்து, கவர்னர் கூறியபடியே உடை உடுத்தி, இளவரசரை வரவேற்றிருப்பர்.

ஆனால், சர்.பி.டி.தியாகராயர், கவர்னர் லார்டு வெல்லிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், 'என் வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு - இந்த ஆடைகளோடு, இளவரசர் என்னைப் பார்க்க விரும்பினால், அவரை நான் உளமார வரவேற்கிறேன்.

'இந்த ஆடையோடு நான், அவரைப் பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து, அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக, நான் என் வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை...' என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் உறுதியைப் பார்த்து வியந்த, ஆங்கிலேயே அரசு, வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது.

***

முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:

ஒருசமயம், திருநெல்வேலிக்கு போய்க் கொண்டிருந்தார், காமராஜர். அப்போது, எதிர்பாராத விதமாக, கார் பள்ளத்தில் இறங்கியதால், அவருக்கும், கார் ஓட்டுனர் நாயருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அப்போது, அந்தப் பக்கமாக வந்தவர்கள், பதறியடித்து ஓடி வந்து, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கே சென்றதும், தன் பக்கத்தில் இருந்தவர்களிடம், ஓட்டுனர் நாயருக்கும், தன் அறையிலேயே பக்கத்தில் ஒரு கட்டில் போடச் சொன்னார், காமராஜர்.

ஓட்டுனருக்கு வேறொரு வசதியான அறை தருவதாக அவர்கள் சொல்லியும், கேட்கவில்லை, காமராஜர்.

'எதற்காக உங்கள் பக்கத்திலேயே கட்டில் போடச் சொல்கிறீர்?' என கேட்டனர்.

'அவர் அருகில் இருந்தால் தான், எனக்கு தரப்படும் அதே நல்ல சிகிச்சை அவருக்கும் தரப்படுகிறதா என, நான் கவனிக்க முடியும். இல்லாவிட்டால், டிரைவர் தானே என, அவர் அலட்சியமாக விடப்படலாம்.

'மேலும், இந்த விபத்துக்குக் காரணம், அவருடைய அஜாக்கிரதை அல்ல. எதிரே வந்தவருடைய வேகமும், கவனக்குறைவும் தான். ஆனால், அது தெரியாமல், தொண்டர்கள் இவர் மேல் கோபம் கொண்டு அடித்து விடலாம். அதைத் தடுப்பதற்கு, அவர் என் அருகில் இருப்பது தான் நல்லது...' என்று, விளக்கம் கொடுத்தாராம், காமராஜர்.

***

ஒருசமயம், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும், கஷ்டங்களையும் அவர் கூறிக்கொண்டே வர, சபை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு விஷமி, 'சுய அறிவு இல்லாத மூடர்களுக்கு அனுபவம்தான் பாடம் கற்பிக்கும்...' என்றான்.

அவனை கூர்ந்து பார்த்த சர்ச்சில், 'அது உண்மை தான். நீ நிச்சயம் என் அனுபவத்திலிருந்து பயனடைவாய். அதனால் தான் இந்தக் கூட்டத்தில் அமர்ந்து, என் அனுபவங்களை கேட்டுக் கொண்டிருக்கிறாய்...' என்று, ஒரு போடு போட்டார்.

அவரை மடக்க எண்ணிய அந்த விஷமி, உடனே அந்த சபையிலிருந்து வெளியேறினான்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us