PUBLISHED ON : ஏப் 16, 2023

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 20 வயது இளம் பெண். கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு, பி.காம்., படித்து வருகிறேன்.
கிராமத்தில், சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான், பள்ளி இறுதி வரை, அரசு பள்ளியில் தான் படித்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால், என் வற்புறுத்தலுக்காக, கல்லுாரியில் சேர்த்தனர், பெற்றோர்.
பள்ளியில் படிக்கும் வரை, மொபைல் போனை அதிகம் பயன்படுத்தி பழக்கமில்லை. 'ஆன்லைன்' வகுப்பின் போது கூட, என் தோழி இரவலாக கொடுத்த போனில் தான் பாடம் கற்றேன்.
கல்லுாரியில் சேர்ந்த பின், சாதாரண பட்டன் போன் வாங்கி தந்தனர், பெற்றோர்.
கல்லுாரியில் சேர்ந்ததும், சக மாணவியர், சமூக வலைதளங்களில் கோலோச்சுவதை பார்த்த பின், அவர்களை விட நான் குறைவா என்ற எண்ணம் மேலோங்கியது.
சமூக வலைதளங்களில் அவர்கள் பீற்றிக் கொள்ளும் படாடோபம், தற்பெருமை, 'ரீல்ஸ்' மற்றும் ஆண் நண்பர்கள் போன்ற விஷயங்கள், என் நிலையை கேலி செய்வது போல் இருக்கின்றன. அவர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களுடன் சகஜமாக பழக விடாமல் தடுக்கிறது. படிப்பிலும் முன் போல் கவனம் செலுத்த முடியவில்லை.
முதல் ஆண்டு எப்படியோ கடந்து விட்டேன். இரண்டாம் ஆண்டில் என்னால், அவர்களோடு இயல்பாக பழக முடியாமல் தத்தளித்து, ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல், ஒதுங்கிக் கொள்கிறேன்.
சக மாணவியரும், என்னுடன் பழகுவதை தவிர்ப்பது போல் தோன்றுகிறது. ஆசிரியர்களுக்கும் என் மீது பெரிதாக எந்த அபிப்ராயமும் இல்லை என்பதால், பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க தயக்கமாக இருக்கிறது.
என்னால் தொடர்ந்து படிக்க முடியுமா என்று சந்தேகமாக உள்ளது. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோரை நினைத்தால், பாவமாக இருக்கிறது.
தாழ்வு மனப்பான்மையும், சுய பச்சாதாபமும் என்னை பாடாய் படுத்துகிறது. இதிலிருந்து மீண்டு, படிப்பில் கவனம் பெற, நல்ல ஆலோசனை வழங்குங்கள், அம்மா.
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
அரசு பள்ளியில் படிப்பது கண்ணியக் குறைவான விஷயம் அல்ல. அரசு பள்ளியில் படித்த, மாணவ - மாணவியரில் பலர், மருத்துவராக, பொறியாளராக, காவல் துறை உயரதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்களாக உயர்ந்திருக்கின்றனர். இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி கூட, அரசு பள்ளி மாணவர் தான்.
இனி நீ செய்யவேண்டியது என்ன?
* தினமும் உணவு இடைவேளையில், கல்லுாரி நுாலகம் சென்று ஆங்கில தினசரி ஒன்றையும், தமிழ் தினசரி ஒன்றையும் வாசி. ஆங்கிலம் -- தமிழ் -- ஆங்கிலம் அகராதி ஒன்றை விலைக்கு வாங்கு. அதில் புரியாத ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்.
தினம், 100 புதிய ஆங்கில வார்த்தைகளை அர்த்தப்பூர்வமாய் கற்றுக் கொள். சிறு சிறு வாக்கியங்களில் ஆங்கிலம் பேச முயற்சி செய். இலக்கணப் பிழைகளை பற்றி கவலைப்படாமல், உன் தோழிகளிடம் ஆங்கிலத்தில் உரையாடு.
வீட்டில் இருக்கும்போது, 'டிவி'யில் ஆங்கில சேனல்களில், செய்திகளை கேள். ஆங்கிலத்தில் அடிப்படை, 10 ஆயிரம் வார்த்தைகளை தெரிந்து வைத்திருந்தால் போதும்- ஆங்கிலம் உனக்கு அடிமையாகும்
* இளங்கலை வணிகவியல் படிப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதை திட்டமிடு. சி.ஏ., அல்லது எம்.பி.ஏ., அல்லது எம்.காம்., அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது எம்.பில்., அல்லது பி.ஹெச்டி., படிக்கலாம்.
பெரிதாய் கண்களை திறந்து வைத்துக் கொண்டே, கல்விசாலையில் ஓடிக்கொண்டே கனவு காண். உலகின், 400 கோடி பெண்களுக்கும் தலா, 1,200 கிராம் மூளை வைத்தான் இறைவன். அறிவுத்தாகம் கொண்டு கற்றலை மேம்படுத்து. மூளையின் நியூரான் செல்களில் அறிவு புரட்சி செய்
* பட்டன் போன் வைத்திருப்பதால், நீ யாருக்கும் இளைத்தவள் அல்ல. பல கோடீஸ்வரர்கள் பல்துறை பிரபலங்கள் முகநுால், 'இன்ஸ்டாகிராம், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களிலிருந்து விலகி நிற்கின்றனர்.
கணினியை பயன்படுத்த கற்றுக் கொள். இளங்கலை வணிகவியல் படிப்பு முடித்ததும் பகுதி நேர வேலை பார்த்து, திறன் பேசி வாங்கு. சமூக வலைதளங்களை அளவாக பயன்படுத்து
* தாழ்வு மனப்பான்மை, ஒரு அட்டைப்பூச்சி போல. சிறு கவனக்குறைவாய் இருந்தால் அந்த அட்டைப்பூச்சி உன் ஆளுமையையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் உறிஞ்சி, உன்னை சக்கையாய் துப்பி விடும்.
சக மாணவ - மாணவியரும், ஆசிரியர்களும், உன்னை சரியான, 'அமுக்னி' என கணித்திருப்பர். அவர்களுடன் கல்வி சம்பந்தமாக கலகலப்பாக பேசி அந்த பொய்புனைவை உடை
* கிராமத்து விவசாய பெண்ணான உனக்குள் தாக்கு பிடிக்கும் போர் குணமும், இளைப்பாறாமல் தொடர்ந்து செயல்படும் விவேகமும் தோல்விகளை கண்டு துவண்டு விடாத வைர நெஞ்சமும் முதல் தலைமுறை பட்டதாரி என்ற வானவில் மிடுக்கும் சேர்ந்தே பிரகாசிக்கும்.
வயல் சேற்றில் இறங்கி வேலை செய்த நீ, சாப்பாட்டு வேளையில் வாய்க்கால் நீரில் கால் கழுவுவாய் இல்லையா? தாழ்வுமனப்பான்மையை சுயபச்சாதாபத்தை அலசி கழுவி அகற்று.
வருங்கால பட்டய கணக்காளரே! உனக்கு என் வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
