PUBLISHED ON : ஏப் 16, 2023

'நம்மில் பலர், குழந்தைகளை வெயில் படாமலேயே வளர்க்க விரும்புகிறோம். நாமும் அலுவலகம் மற்றும் வீடு என, எப்போதும், 'ஏசி' அறைகளுக்குள்ளேயே நேரத்தை கழிக்கிறோம்.
'இதனால், இயற்கை எனும் மாபெரும் மருத்துவர் அளிக்கிற நற்பலன்கள் பலவற்றை இழந்து விடுகிறோம். இந்நிலையிலிருந்து மீண்டு, சூரிய ஒளியின் அற்புத பலன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...' என, சரும சிகிச்சை மற்றும் அதற்கான எளிய வழிமுறைகளை கூறியுள்ளனர், மருத்துவர்கள்.
* சூரிய ஒளியில் உள்ள, 'அல்ட்ரா வயலெட் பி' கதிர்கள் வாயிலாக, நம் உடலுக்கு, வைட்டமின் 'டி' கிடைக்கிறது. இது, காலை, 7:00 - 10:00 மணி மற்றும் மாலை, 4:00 - 6:00 மணி வரையும் இருக்கும்
* பிறந்த ஆறாவது மாதத்திலிருந்து கைக் குழந்தைகளை, தினமும் காலை, 7:00 மணி வெயிலில், 10 நிமிடங்கள் வெற்று உடம்பில் சூரியக் குளியல் எடுக்க வைக்கலாம்
* காலை, 7:00 - 10:00 மணி வரை, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், தினமும், 10 நிமிடங்கள் வெற்றுடலில் சூரியக் குளியல் எடுப்பதால், அவர்களுக்கு போதிய வைட்டமின் 'டி' கிடைக்கும்
* குளிர் காலங்களில் குழந்தைகள் உடலில், வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுகிறது. ஆகவே, மழை மற்றும் குளிர் காலங்களில் வெயில் வரும்போது, குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். வெயிலில் விளையாடும் போது, உடல் தானாகவே போதுமான அளவு வெப்பத்தை கிரகித்துக் கொள்ளும்
* வளரும் பருவத்தில், அதீத வெப்பத்தை தாங்கும் சக்தி இயல்பாகவே சிறுவர்களின் உடலுக்கு உண்டு. 18 வயதுக்கு பிறகு, இது படிப்படியாக குறையத் துவங்கும். இதனால் தான், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் வெயிலில் பல மணி நேரம் கிரிக்கெட் விளையாட முடிகிறது
* எவ்வளவு வேலை இருந்தாலும், காலை, 7:00 - 8:00 மணிக்குள் குடும்பத்தில் பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் வீட்டு மொட்டை மாடியில், 15 நிமிடங்கள் வெயிலில் உலவலாம்
* 'சென்சிட்டிவ்' சருமம் உடைய குழந்தைகளுக்கு, 'சன் அலர்ஜி' ஏற்படலாம். இவர்கள், 'சன் பாத்' எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
* வார இறுதி விடுமுறை நாட்களில், பூங்கா, கடற்கரை, மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு, மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். காலை அல்லது மாலை வெயிலில், குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்
* படர் தாமரை, சொரியாசிஸ் போன்ற பூஞ்சை நோய்களுக்கு ஆளானோர், மருத்துவரின் பரிந்துரையுடன், 'சன் பாத்' எடுக்கலாம்.
என். இளமதி
