PUBLISHED ON : ஏப் 16, 2023

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, மூர்சா தெரு வழியாக போகிறவர்கள், இந்த காட்சியை பார்த்திருப்பர். நடுத்தர வயது பெண்மணி ஒருவர், தன் மகள்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ சைக்கிளில் அமர வைத்து, மிதித்தபடி போய்க் கொண்டு இருப்பார். இது, இன்று நேற்றல்ல, 16 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் காட்சி.
அந்தப் பெண்ணின் பெயர் மகாலட்சுமி; மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகளாக பிறந்தவர், பள்ளிக்கூடம் பக்கம் போனதில்லை.
சிறு வயது முதலே சைக்கிள் மீது பிரியம் அதிகம். தன் வீட்டிற்கு யார் சைக்கிள் கொண்டு வந்தாலும் அதை ஓட்டிப் பார்க்க முற்படுவார். இதனால், பலமுறை காயம் ஏற்பட்டாலும், அது பற்றி கவலையின்றி சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டார்.
மகளின் சைக்கிள் ஆர்வத்தைப் பார்த்த அம்மா ராஜேஸ்வரி, மகாலட்சுமியின், 18 வயதில், 750 ரூபாய்க்கு பழைய, 'ராலே' சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அந்த சைக்கிளைத்தான் இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார். 'சைக்கிள் லட்சுமி' என்று, ஏரியாவாசிகள் அவரை குறிப்பிடுகின்றனர்.
திருமணமாகி சிந்துஜா, மேகலா என, இரண்டு மகள்கள் பிறந்தனர். தான் படிக்க முடியாத கல்வியை மகள்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, தொலைவில் உள்ள பள்ளிக்கு இரு மகள்களையும் சைக்கிளிலேயே கொண்டு போய் விட்டு, கூட்டி வருவார்.
அதிலும், சின்ன மகள் துாங்கிப் போனால் அவளை, ஒரு கையால் தோளில் சாய்த்துக் கொண்டே, இன்னொரு கையால் சைக்கிளை, 'பேலன்ஸ்' செய்து ஓட்டுவார்.
இன்று, இரு மகள்களும் வளர்ந்து, கல்லுாரியில் மூன்றாமாண்டு மற்றும் முதலாமாண்டு படிக்கின்றனர். கணவரது வருமானம் இல்லாத நிலையில், நாலைந்து வீடுகளில் வேலை பார்த்து குடும்பம் நகர்த்தி, மகள்களையும் படிக்க வைக்கிறார். அந்த வகையில், இவர் ஒரு வைராக்கிய லட்சுமியும் கூட.
நாலைந்து வீடு என்பது, இப்போது ஐந்தாறு வீடுகளாகி விட்டது. அனைத்து வீட்டிற்கும் சைக்கிளில் தான் செல்வார். மகள்கள் வளர்ந்து விட்டாலும், இப்போதும் அவசரத்திற்கு அம்மாவோடு சைக்கிளில் தான் செல்கின்றனர்.
'பிள்ளைகள் தான் வளர்ந்து விட்டனரே, அவர்களை ஓட்டச் சொல்லி நீங்கள் உட்கார்ந்து போகலாமே...' என்று கேட்டால், 'அது மட்டும் முடியாது. நான் தான் சைக்கிளை ஓட்டுவேன். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்த சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒரு காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது.
'என் உடம்புக்கும், மனதுக்கும் தெம்பு தருவதும், மன காயங்களுக்கு மருந்திடுவதும் என் அம்மா வாங்கிக் கொடுத்த இந்த சைக்கிள் தான். எனக்கு மூத்த பிள்ளை போன்ற, இந்த சைக்கிளை விட்டு ஒருநாளும் பிரிந்தது கிடையாது; பிரியவும் மாட்டேன்...' என்கிறார்.
சைக்கிள் மகாலட்சுமியிடம் பேசுவதற்கான எண்: 99401 52351.
எல். முருகராஜ்
