PUBLISHED ON : ஏப் 16, 2023

ஏப்ரல் 22, பூமி தினம்
அதிசயமாய்
விடிந்துவிட்ட நாளிதுவோ
இல்லை
அகிலம் வியக்க
அற்புதமாய் பிறந்துவிட்ட நாளிது!
அஷ்டமியில்அடித்தளமிட்ட நாளிதுவோ
இல்லை
இஷ்டமாய் இணைந்து
இன்ப மணம் பரப்ப வந்த நாளிது!
ஆச்சர்யத்தை
அர்ப்பணித்த நாளிதுவோ
இல்லை
அற்புதம் நிகழ்த்தி
ஆனந்தத்தை அளிக்க வந்த நாளிது!
வியப்பை
விருந்தாக்கிய நாளிதுவோ
இல்லை
விதியை மாற்றி
மதியால் வெல்ல வந்த நாளிது!
வேடிக்கையில்
வித்தை காட்டும் நாளிதுவோ
இல்லை
விஷமம் விழுங்கி
வெற்றி அளிக்க வந்த நாளிது!
புதுமையில்
புரட்சி செய்த நாளிதுவோ
இல்லை
புதையிருள் விலக்கி
பொலிவேற்ற வந்த நாளிது!
சரித்திரத்தில்
சாதனை செய்த நாளிதுவோ
இல்லை
தரித்திரத்தை துரத்தி
தரணி செழிக்க வந்த நாளிது!
உன்னதமாய் உதித்து வரும்
ஒவ்வொரு விடியலும்
இனி
புன்னகையில் பூத்து சிந்தி
பொன்னான நாட்களாய் புழங்க
பூஜித்து போற்றுவோம்
பூமித்தாயை என்றென்றும்!
க. அழகர்சாமி, கொச்சி, கேரளா.
