
'ஜெய் கங்கா மாதாஜீ... நமஸ்கார்... மை ஹரிசந்தர் பேசறேன்...' என்ற கனிவான குரல், பணிவாக ஒலித்ததும், மொபைல்போனை காதில் வைத்துக்கொண்டிருந்த, காவிரியின் மனதும் கரைய ஆரம்பித்தது.
ஹரிசந்தர் என்பவருடன் பேச, முதலில் போனில் அழைத்தவளே அவள் தான்; ஆனாலும், சட்டென வார்த்தை வரவில்லை. 15 வயது வரை பேசி, படித்த ஹிந்தி மொழியே மறந்து போயிருந்த நிலையில், தாய்மொழி தான் தயங்கித் தயங்கி வந்தது, ''நான் சென்னையிலிருந்து பேசறேன்,'' என்றாள்.
''அச்சா... தமிழ்க்காரங்களா... நானும், தமிழ் சுமாராய் பேசுவேன்... ஹரித்துவாரில் எங்க பக்கத்து வீட்டு குடும்பத்துக்கு பூர்வீகம், தஞ்சாவூர் தான். 25 வருஷமா அவங்களோட பழகறதால, எனக்கும் தமிழ் நல்லா வரும்மா... சொல்லுங்கம்மா,'' என்று, ஹரிசந்தர் பேசிய தமிழும் இனித்தது.
''இன்னிக்கு, தமிழ் வாரப் பத்திரிகையில், உங்கள் படத்துடன் பேட்டியைப் படித்தேன்; கோதையின் படத்தையும் பார்த்தேன். கட்டுரை, மனசை ரொம்ப தொட்டது. உங்க போன் நம்பரை, பத்திரிகை அலுவலகத்தில் கேட்டு வாங்கிட்டேன்,'' என்றாள்.
''நன்றிம்மா... எல்லா பெருமையும், மகள் கோதைக்கு தான்... நல்ல புத்திசாலி பொண்ணு,'' என்றார்.
''ஹரிசந்தர் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி, உங்கள் வாழ்க்கையின் உண்மையெல்லாம் சொல்லி விட்டீர்கள் ஐயா... இந்த பெருந்தன்மை எல்லாருக்கும் வராது!''
''என்னால் பொய் சொல்ல முடியாதும்மா... அதனால் தான், கோதைக்கு நாலு வயசாகிற போதே... 'அம்மாடி... உன்னை பெத்த அப்பா, நான் இல்லம்மா'ன்னு சொல்லிட்டேன். ஹரித்துவார்ல கங்கைக்கு போற வழில, நதிக்கரை ஓரம், கங்கா ஜலத்துடன் தாமிர சொம்பு, கங்கா தேவி கோவில் படம், மாலை மணின்னு சின்ன கடை வச்சு வியாபாரம் செய்திட்டிருந்தவன்...
''அன்னிக்கு ராத்திரி, கடையை மூடிட்டு, வீட்டுக்கு வர்ற வழில, குப்பைத் தொட்டியில குழந்தை அழும் சத்தம் கேட்டது. திகைச்சு போய், ரொம்ப நேரம் குப்பை தொட்டி பக்கம் போகவே தயங்கினேன்... யாருமே அந்தப் பக்கம் வரக்காணோம்... குழந்தையோ ரொம்ப அழுதது; எனக்கு மனசு தாங்கல...
''உடனே, ஓடிப்போய் குப்பைக்கு நடுல இருந்த குழந்தையை கையில எடுத்தேன்... பெண் குழந்தை... யாரோ பெத்ததும், போட்டுருக்காங்கன்னு தொப்புள் கொடியை பார்த்ததும் தெரிஞ்சது... ஆசையாய் துாக்கிட்டு வீடு வந்தேன்...
''ஸ்பூன்ல பாலை எடுத்து புகட்டினேன்... அழுகை நின்னது... பாவம், பசியில துடிச்சிருக்கு... பக்கத்து வீட்டுல குடியிருக்கற தங்சாவூர்க்கார குடும்பத்தார், 'பெரியாழ்வாருக்கு கிடைச்சது போல, ஆடிப்பூர நாளில் கிடச்சிருக்கு... கோதைன்னு பேரு வச்சிடப்பா...'ன்னு சொன்னாங்க...
''கோதை வந்த நேரம், என்னிக்கோ என் கையை விட்டுப் போன பரம்பரை சொத்தான வீடு, மீண்டு வந்தது... பெரிய பங்களால்லாம் இல்ல... ஆனா, கோதையை படிக்க வைக்க, அந்த வீடு தான் உதவினது. அவளும் படிச்சி, இன்று, வருமான வரித்துறையில், உதவி கமிஷனர் ஆகிட்டா... இது தெரிஞ்சதும், ஹரித்துவார்லேர்ந்து பலர் நேரா வந்திட்டாங்க...
''என் பேர்ல இருக்கிற அபிமானத்துல, தஞ்சாவூர் குடும்பம், சென்னையில ஒரு பத்திரிகைக்கும் எழுதிப் போட்டுட்டாங்க... நீங்களும் அதைப் படிச்சிட்டு, போன் போட்டு பேசறீங்க... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா... எல்லாம் கங்கா மாதா கருணை தான் வேறென்ன!''
''ஐயா... உங்களோட, 30வது வயசுல குழந்தையை எடுத்து வளர்த்த நீங்க, கல்யாணமே செய்துக்கலைன்னு கட்டுரையில போட்டிருக்கே?''
''ஆமாம்மா... கல்யாணம் செய்துகிட்டா, அந்தப் பெண், கோதையை எப்படி பார்த்துப்பாளோன்னு பயம் தான்... தங்க விக்கிரஹம் மாதிரி, கடவுள் எனக்கு ஒரு பரிசு கொடுத்ததை, நான் காப்பாத்தணும்ன்னு நினச்சேன்... கங்கா, எனக்கு தாய்... கோதை, எனக்கு மகள்... இந்த உறவே போதும்ன்னு நினைக்கிறேன்!''
''எவ்வளவு பெரிய தியாகம், ஐயா!''
''தியாகம் இல்லைம்மா... கடமை... பெரியாழ்வார் கூட, மகள் மேல ரொம்ப பாசமா இருந்தாராமே... மகள் தான் அவருக்கு உலகமாமே... தஞ்சாவூர் குடும்பம், எனக்கு கதை கதையா சொல்வாங்க... அவங்ககிட்ட, என் மகள் கோதை, திருப்பாவையெல்லாம் கத்துக்கிட்டிருக்கான்னா பாருங்களேன்...
''ரொம்ப புத்திசாலி பொண்ணு... சிரிச்ச முகம்... ஆனா, நான் கங்கை கரையோரம் வியாபாரம் செய்யறது மட்டும் அவளுக்கு பிடிக்கல... 'நான் தான் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேனே அப்பா... உங்களுக்கும் வயசு, 50க்கு மேல ஆச்சு... கடையை மூடிட்டு, வீட்ல ஓய்வு எடுங்க...' என்றாள்.
''அதெப்படிம்மா... இந்த கடையில வேலை செய்த போது தானே, கோதை எனக்கு கிடைத்தாள்... இதை விட முடியுமா?''
''ஐயா... கோதை கொடுத்து வைத்தவள்... எனக்கு, நேர்ல பார்க்க ஆசை... ஹரித்துவாருக்கு வரலாமா?''
''எல்லாரும் வரணும்... இது மோட்சம் அளிக்கும் பூமி... கங்கை, கை வீசி நடக்கும் இடம்... கங்கா மாதா ஆரத்தி இங்கு விசேஷம்... ஒருமுறை கங்கையில் குளித்தால் போதும், நம் பாவமெல்லாம் போய் விடும் அம்மா... கங்கையை தரிசிக்க நேரில் வாருங்கள். நிறைய பேசலாம்... கோதையிடமும், உங்களை அறிமுகப்படுத்துகிறேன். ஆமா, உங்கள் பெயரை கேட்கவே இல்லையே... என்ன பேர் அம்மா?''
''காவிரி!''
''ஆஹா... கங்கையை தரிசிக்க வரும், காவிரி. அம்மா... தவறாய் நினைக்கலேன்னே உங்க குடும்பம் பத்தி...''
''மன்னிக்கணும் ஐயா... நானே சொல்லி இருக்கணும்... தனி ஒருத்தி தான், குடும்பமென்று ஏதுமில்லை... சென்னையில அனாதை குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறேன்!''
''அனாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் தர்றீங்களா... உன்னதமான பணி அல்லவா... உங்களை சந்திக்க, நான் கொடுத்து வச்சிருக்கணும்... நல்லதும்மா, அவசியம் வாருங்கள்!''
மறுநாளே டில்லிக்கு விமானம் ஏறினாள், காவிரி. அங்கிருந்து காரில் ஹரித்துவாருக்கு பயணமானாள்.
போகிற வழியெல்லாம் ஞாபக அலைகள்...
இதே ஹரித்துவாரில், 15 ஆண்டுகள் வாழ்ந்ததை மறக்க முடியுமா... துள்ளித் திரிந்த பருவம்... அப்பாவிற்கு, பொது நிறுவனம் ஒன்றில் உயர் பதவி. அப்பாவின் அம்மா, -பாட்டி -மட்டும் வீட்டில் இருந்தனர். வெளிநாட்டு வேலை காரணமாக, ஒரே மகளான அவளை, அப்பாவும் - அம்மாவும், ஒரு வருஷம் பாட்டியிடம் விட்டுச் சென்ற போது, அந்த துயரம் நடந்தது.
பாட்டியின் கிராமமான, சணப்பிரட்டியைச் சேர்ந்தவன் என்று சொல்லி, வீட்டிற்கு வந்தான், ஒரு இளைஞன். அவன் கூறிய விபரங்கள், பாட்டியை நம்ப வைத்தது.
ஹரித்துவார் - ரிஷிகேஷ் பயணத்துடன், பத்ரிநாத் போகப் போவதாக பக்தி ததும்பும் குரலில் சொல்லவும், 'இந்த காலத்தில், காலேஜ் படிக்கிற பையனுக்கு இவ்வளவு பக்தியா?' என்று வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாகியது, பாட்டிக்கு.
மிக அணுக்கமாக பேசினான். கடைக்கு போய், எனக்கும், பாட்டிக்கும் சர்பத் வாங்கி வந்தான். அதைக் குடித்ததும், நான் மயக்கமாகி விட்டேன்.
காவிரிக்கு, அந்த சம்பவம் நினைவுக்கு வர, கண் கலங்கியது.
துாங்கி எழுந்து பார்த்தால், அவனை காணவில்லை. 'என்ன ஆச்சு எனக்கு... விடிந்து, இவ்வளவு நேரம் துாங்கிட்டேன்... அதிகாலையே ரிஷிகேசுக்கு போகணும்ன்னு சொல்லி இருந்தான்... என்னை எழுப்பி பார்த்திருப்பான், பாவம்... நான் ஏன் இப்படி அசந்து துாங்கினேனோ தெரியலைடிம்மா...' என்றாள், பாட்டி.
பாட்டியின் களங்கமற்ற முகம் நினைவில் வந்து, கண்களை மேலும் நனைத்தது, காவிரிக்கு. அவளது வெகுளித்தனம், பேத்தியிடமும் நிரம்பி இருக்கவே, இருவருக்குமே அந்த இளைஞன் மீது சந்தேகம் வரவில்லை.
தனக்கான நிகழ்வை புரிந்துகொள்ள முடியாத வயது காவிரிக்கு. ஆனால், உடலில் ஏதோ மாற்றம் தெரிந்த உணர்வில், தயங்கி, அவள் பாட்டியிடம் சொல்லவும், திடுக்கிட்டு மருத்துவ பரிசோதனை செய்தாள். அப்போது, 'வயிற்றில் சிசுவுக்கு நான்கு மாதமாகி விட்டது. 'அபார்ட் பண்ணினா, உங்க பேத்தி உயிருக்கு ஆபத்தும்மா...' என, டாக்டர் எச்சரித்தார். பாட்டி, கர்ப்பத்தின் காரணம் கேட்க, திருதிருவென விழித்தாள், காவிரி.
ஏதோ ஓர் உந்துதலில், கிராமத்து உறவினருக்கு, போன் செய்து கேட்டாள்.
'அந்த தறுதலை, சின்ன பெண்கள் பலர்கிட்ட, 'சில்மிஷம்' செய்ததால், ரெண்டு வருஷம் முன்னாடி ஊரை விட்டே துரத்திட்டோமே...' என்று கூற, நிலைகுலைந்தாள்.
காவிரியின் பள்ளிப் படிப்பு நின்று போனது. வயிற்றில் கட்டி என, ஹரித்துவாரில் அக்கம் பக்கத்திலும் பள்ளிக்கூட தலைமையிடமும் சொல்ல வேண்டி வந்தது.
'ஐயோ... காவிரி கண்ணு... உன் வாழ்க்கையை நான் சீரழிச்சிட்டேன்... விஷயம் உன் அப்பனுக்குத் தெரிந்தால், என்னைக் கூறு போட்டுடுவான்... அம்மா, உன்னை கங்கையில் முழுக்கி விடுவாள். அதனால, இன்னும் ஆறு மாசத்துல, குழந்தை பிறந்ததும், அதை எங்காவது கடாசிட்டு, நம் கிராமத்துக்குப் போயிடலாம்... உன் அப்பாகிட்ட, கிராமத்து குலதெய்வ வழிபாட்டுக்குப் போறதா போன்ல சொல்லிக்கலாம்...'
'பாட்டி... இந்த குழந்தை, என்ன பாவம் செய்தது... ஏன் பாட்டி இதை கடாசலாம்ன்னு சொல்றீங்க?' தன் அடிவயிற்றை தடவியபடி, ஏக்கமுடன் கேட்டாள், காவிரி.
பாட்டியும் கண்கலங்கினாள்.
'எந்த காலத்திலும் பொண்ணுக்கு விமோசனமே இல்லையடி பெண்ணே... இது, ஆணாக இருந்தாலாவது காப்பத்தலாம்ன்னு முடிவு செய்திருப்பேன்... ஒரு பெண்ணை நான் காவு கொடுத்தது போதும்...' என்றாள்.
சொன்னபடி, பச்சை உடம்புகாரி, 16 வயது பெண்ணான காவிரியுடன், ரயிலில் ஊருக்கு பயணமானாள்.
இவர்கள் சென்ற சில நாட்களில், இடி போல செய்தி வந்தது. இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்தில், காவிரியின் அம்மாவும் - அப்பாவும் மரணமடைந்து விட்டதாக.
அதைக் கேட்ட அதிர்ச்சியில், பாட்டியும் போய்விட, அப்பாவின் விமான விபத்து நிவாரண பணம், அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் இழப்பீட்டுத் தொகை என்று, லட்சக்கணக்கில் வந்தது, காவிரிக்கு.
சென்னையில், ஒரு அனாதை இல்லம் அமைத்து, அங்கேயே ஓர் அறையில் வாழ்ந்து வருகிறாள், காவிரி. உலகமே அது தான் என்றிருந்தாள், அவளின் பிரதி பிம்பமாயிருந்த கோதையின் படத்தை, அந்த பத்திரிகையில் பார்க்கும் வரை!
''அம்மா... நீங்கள் சொல்லிய இடம் இது தான்,'' என்று, டிரைவர் ஹிந்தியில் சொல்லவும், சுதாரித்து, காரிலிருந்து இறங்கினாள், காவிரி.
தான் வரப்போகும் விபரத்தை, ஹரிசந்தரிடம் போனில் தெரிவித்திருந்த படியால், வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.
பத்திரிகை புகைப்படத்தில் பார்த்த அதே முகம். 50 வயதை கடந்தாலும், முகம், குழந்தை போலிருந்தது.
சிரித்த முகத்துடன், காரை விட்டு இறங்கிய, காவிரிக்கு, தமிழில், ''வணக்கம்!'' கூறி வரவேற்றார்.
''வாங்கம்மா... வரவேற்க, கோதை தான் இல்லை... ஆபீசில் முக்கிய வேலையாம்... சாயந்திரம் வர்றதா சொல்லி இருக்கா... பக்கத்து வீட்டு தஞ்சாவூர் குடும்பமும், ஒரு மாசத்துக்கு அவங்க கிராம கோவில் விழான்னு தெற்கே போயிட்டாங்க.''
''அப்படியா?''
''உள்ளே வாங்கம்மா... சின்ன வீடு தான்!''
பூ, பழங்கள் அடங்கிய பையை அவரிடம் நீட்டியபடி, ''ஐயா... இல்லம் சின்னதானால் என்ன, உங்கள் உள்ளம் பெரிதாக இருக்கிறதே!'' என்றாள், காவிரி.
''மதியம், 2:00 மணியாக போகுதும்மா... சாப்பாடு ரெடி... உங்க ஊர் சாப்பாடு தான்... சாம்பார், ரசம், பொரியல் மற்றும் சக்கரைப் பொங்கல்ன்னு காலையிலேயே செய்துட்டு போயிட்டா, கோதை!'' என்றார்.
சாப்பிடும்போது, வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைந்தது, காவிரிக்கு.
''அம்மா... கொஞ்ச நேரம், கண் அயருங்க... நான் கடை வரை போயிட்டு, கோதை வர்றதுக்குள்ள திரும்பி வரேன்,'' ஹரிசந்தர் பரிவுடன் சொல்ல, காவிரிக்கு கண்கள் பனித்தது.
''ஐயா... உறக்கம் கொள்கிற மனநிலையே இல்லை... ரொம்ப நிறைவா இருக்கு... உங்ககிட்ட நேர்ல பேசணும்ன்னு தான் அவசரமாய் வந்தேன். ஆனா, இப்போ நான் சொல்லப் போற விஷயம் கேட்டால், உங்க உறக்கம் போய் விடுமோன்னும் பயமா இருக்கு.''
''அம்மா... என்ன சொல்றீங்க?'' திடுக்கிட்ட குரலில் கேட்டார்.
கைப்பையை திறந்து, அந்த புகைப்படத்தை அவரிடம் நீட்டினாள், காவிரி.
வாங்கிப் பார்த்த, ஹரிசந்தரின் விழிகள் வியப்பில் விரிந்தன.
''அட... கோதையின், 15 வயசு புகைப்படம், உங்க கைக்கு எப்படி...'' தயக்கமுடன் கேட்டபடி, புகைப்படத்தின் கீழே தேதியை பார்த்தவரின் முகம் மாறியது. காவிரியை உற்றுப் பார்த்தார், மறுபடி புகைப்படத்தை பார்த்தார். பிறகு,
''நீங்... நீங்க?'' என்றார், நடுங்கும் குரலில்.
கடந்த காலத்தை அவரிடம் விவரித்தாள், காவிரி.
கேட்க கேட்க, கண்களில் கங்கை பெருகியது, ஹரிசந்தருக்கு.
''ஐயா... உண்மையாய் வாழ்கிறவரிடம், நான் பொய் வேஷம் போட கூடாது. அதனால் தான் நேரில் வந்து இதைச் சொன்னேன். ஒரு சத்திய தரிசனம் எனக்கு கிடைத்து விட்டது. இதுவே போதும்,'' என்றாள்.
''அம்மா... கோதை, உங்கள் மகள்!'' ஹரிசந்தரின், குரல் நெகிழ்ந்தது.
''இல்லை ஐயா... என்றும், அவள் உங்கள் மகள் தான்! பெரியாழ்வாரின் செல்வ மகள், கோதையை போலவே, இவளும், என்றும் உங்களிடம் இருக்கட்டும்... அதைவிட அவளுக்கு வேறு பெருமை என்ன இருக்க போகிறது!''
திகைத்து நின்ற, ஹரிசந்தரிடம், ''நன்றி!'' என, கரம் குவித்து, கண்ணை துடைத்தபடி, வாசலில் காத்திருந்த காரில் ஏறினாள், காவிரி.
ஷைலஜா