PUBLISHED ON : மே 05, 2019

அ நிறம் | அளவு
கண்டால் முகம் சுளிக்கும்
கம்பளி பூச்சி பருவத்தை
கடந்த பிறகு தான்
வண்ணங்கள் நிரம்பிய
வாழ்வு கிடைக்கிறது
பட்டாம் பூச்சிக்கு!
பாசி படர்ந்த
சகதியை
சங்கடமென்று கருதுவதில்லை
குளத்துக்கு நடுவே
பூத்துச் சிரிக்கும் தாமரை!
பல நாட்கள்
காத்திருப்பிற்கு பிறகே
முத்து சாத்தியமாகிறது
சிப்பிக்கு!
துளித் துளியாய் வீழ்வதற்கு
கவலை கொண்டால்
துள்ளியோடும் குளிர் நதியாய்
எப்படி மாறுவாள் மழையரசி!
கடினங்கள், கசப்புகள்
காத்திருத்தல்கள், சவால்கள்
யாவற்றையும் கடந்து தான்
ஒளி வீசிக்கொண்டிருக்கிறது
பூரணமாய் ஒரு வாழ்க்கை!
இ.எஸ்.லலிதாமதி, சென்னை.
