/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
'கூட்டு பொரியல்காரம்மா வந்துட்டாங்க...'
/
'கூட்டு பொரியல்காரம்மா வந்துட்டாங்க...'
PUBLISHED ON : டிச 11, 2022

சென்னையில், ஒரு ஞாயிற்றுக்கிழமை.
வானமே கூரையாகக் கொண்ட அமைந்தகரை வாழ் நடைபாதைவாசிகள், யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பசியால் குழி விழுந்து பஞ்சடைத்துப் போன அவர்களின் கண்களில் திடீர் பிரகாசம்.
'கூட்டு, பொரியல்காரம்மா வர்றாங்க...' என்று ஒருவர் குரல் கொடுக்க, ஆங்காங்கே சிதறியிருந்தவர்கள் ஒன்று சேர்கின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கும் பெண்ணின் இரண்டு கைகளிலும் இரண்டு பை நிறைய உணவு பொட்டலங்கள்.
'ஐயா எப்படி இருக்கீங்க, அம்மா நல்லாயிருக்கீங்களா, அண்ணே இப்ப கால் வலி பரவாயில்லையா...' என்று ஒவ்வொருவரையும் அன்போடு விசாரித்தபடி, தான் கொண்டு வந்த உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டிலையும் வழங்குகிறார்.
பெரிய கும்பிடு போட்டு அவரிடம் இருந்து உணவு பொட்டலங்களை வாங்கிக் கொள்ளும் மக்கள், பரபரவென பிரித்து, சாப்பிடத் துவங்குகின்றனர்.
பொட்டலத்தின் உள்ளே சாம்பார் சாதம், அப்பளம், கூட்டு, பொரியல், சர்க்கரை பொங்கல், வடை என்று நிறைந்திருக்கிறது.
அவர்கள் திருப்தியாக சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு, அடுத்த இடத்திற்கு விரைகிறார். அங்கும் இதே போல, பசிப்பிணி நீக்கி அடுத்த இடம் என்று, இப்படியே, 5 கி.மீ., சுற்றளவிற்கு சென்று, பைகள் காலியானதும் வீட்டிற்கு திரும்புகிறார்.
யார் இவர்?
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தேவி சித்ரா, இல்லத்தரசி. கணவர் விஜயகுமார், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
சிறு வயது முதலே ஏழை, எளியவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்.
'கோவிட்' சமயத்தில், தன் குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஹோட்டலில் இருந்து உணவு பொட்டலங்களை வாங்கி வந்து கொடுத்தார். வணிக நோக்கோடு தயார் செய்யப்பட்ட அந்த உணவு, அவர்களின் வயிற்றை நிரப்பியதே தவிர, மனதை நிரப்பவில்லை என்பதை புரிந்து கொண்டு, தாமே தயார் செய்து கொடுப்பது என்று முடிவு செய்தார்.
அதன்படி காலை, 4:00 மணிக்கு எழுந்து, 50 பேர் சாப்பிடக் கூடிய அளவிற்கு உணவு தயார் செய்து, சுடச்சுட கொண்டு போய் கொடுத்தார். ருசியான உணவை திருப்தியாக சாப்பிட்ட சந்தோஷம் அவர்கள் கண்களில் தெரிந்தது.
இவர் தரும் சாப்பாட்டில் எப்படியும் ஒரு கூட்டும், பொரியலும் இருக்கும் என்பதால், இவரது பெயரே கூட்டு, பொரியல்காரம்மாவாகி விட்டது.
அமாவாசை போன்ற நாட்களில் வடை, பாயசம், சர்க்கரை பொங்கல் என, விசேஷ உணவும் வழங்குவார்.
கொஞ்சம் காசு கையில் வந்தால் போதும், 50 போர்வையை வாங்கிக் கொள்வார். நடு இரவில் வண்டியில் சென்று, தெருவோரம் யாரெல்லாம் போர்வை இல்லாமல் துாங்குகின்றனரோ, அவர்களுக்கே தெரியாமல் போர்த்திவிட்டு வந்து விடுவார். இதே போல, வேட்டி - சேலை தானமும் உண்டு.
'பத்துக்கு பத்தடி கொண்ட வாடகை வீட்டில், அப்பா மற்றும் உறவுக்கார குழந்தைகள் ஆகியோர் உதவியுடன், எங்களது செலவுகளை எல்லாம் சுருக்கி, இந்த விஷயத்தை சந்தோஷமாக செய்து வருகிறேன்.
'எல்லாவற்றுக்கும் கணவர் தான் முக்கிய காரணம். தினமும் உணவு வழங்க வேண்டும் என்பது, என் நோக்கம்...' என்று சொல்லும் தேவி சித்ராவின் எண்ணம் ஈடேற, உங்கள் ஆசிகள் துணை நிற்கட்டும். அவரது மொபைல் எண்: 9841605054, 9551371908.
எல். முருகராஜ்