PUBLISHED ON : ஆக 08, 2010

விஷ மீன்!
கடலில் உள்ள எல்லா மீன்களும் உணவாகக் கூடியவை அல்ல. விஷத்தன்மை கொண்ட தேள், பாம்பு போல் மீன்களும் உண்டு என, தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் பிரிட்டனில் பெம்புரோக்ஷயர் பகுதியில் நியூகால் கடற்கரையில் நீந்தி விளையாடிக் கொண்டி ருந்த இரண்டு பேரை, மஞ்சள் நிற மீன் ஒன்று கொத்தியது; உடனே, அவர் கள் மயங்கினர். முதல் உதவி கிடைத்ததால் அவர் கள் உயிர் பிழைத்தனர். அவர்களை விஷத்தன்மை கொண்ட மீன் கொத்தியது தெரிய வந்தது. இந்த வகை மீன் கொத்தினால் மாரடைப்பு, அலர்ஜி ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். இந்த வகை மீன்கள், கடலின் ஆழமான பகுதியில் இருக்கும். மிக அபூவர்மாகத்தான் வெளியே வரும்.
* * *
100 கிலோ எடையில் தங்க நாணயம்!
நூறு கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய தங்க நாணயம் ஒன்று, 160 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
கடந்த 2007ம் ஆண்டு, கனடாவில் இந்த தங்க நாணயம் உருவாக்கப்பட்டது. நூறு கிலோ எடையுடன், 52 செ.மீ., விட்டம் கொண்ட இந்த நாணயம், 99.999 சதவீத சுத்த தங்கத்தாலானது. நாணயத்தின் ஒரு பக்கத்தில், பிரிட்டன் அரசி எலிசபெத் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, இன்னொரு பக்கத்தில், கனடாவில் தேசிய சின்னமான மூன்று இலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்ட இந்த நாணயம், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஏ.வி.டபிள்யூ., என்ற முதலீட்டு நிறுவனத்திடம் இருந்தது. சமீபத்தில், அந்த நிறுவனம் திவாலாகி விடவே, இந்த நாணயம் இன்டெர்நெட் மூலம் ஏலத்திற்கு விடப்பட்டது.
ஏலத்தில் பங்கு கொள்ள ஆறு பேர் பதிவு செய்தனர். இவர்களில் ஐந்து பேர் டெலிபோன் மூலம் ஏலம் கேட்டனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஓரோ டைரக்ட் என்பவர், எழுத்து மூலம் தான் வாங்கும் விலையை தெரிவித்தார். அவருக்கே, இந்த நாணயம் வழங்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்த விலை 3.99 மில்லியன் டாலர். அதாவது 160 கோடி ரூபாய்.
* * *
வயது பெண் குழந்தை பயங்கரவாதியா?
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த, ஆறு வயது அமெரிக்க பெண் குழந்தையை, பயங்கரவாதி என, அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த குழந்தை, விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் பெயர் அலிசா தாமஸ். இந்த குழந்தையின் தந்தை டாக்டர் சந்தோஷ் தாமஸ். சமீபத்தில், சந்தோஷ் தன் மனைவி மற்றும் அலிசாவுடன் கிளவ்லேண்டில் இருந்து மின்னபோலீஸ் நகருக்கு விமானத்தில் செல்ல ஹாப்கின்ஸ் நகர விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது, விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில், அலிசா பெயர் உள்ளது என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், நீண்ட விவாதத்திற்குப் பின்னர், அலிசாவும், விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார். உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு, காரணத்தை தெரிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்.
பயங்கரவாதிகள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை விமானத்தில் பறக்க தடை விதித்து, ஒரு பட்டியலை அமெரிக்க உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள இந்த பட்டியலில், அலிசா பெயர் இடம் பெற்றது எப்படி என்பதுதான் புதிராக உள்ளது.
— ஜோல்னா பையன்.
* * *
