PUBLISHED ON : ஆக 08, 2010

- மதுனிகா ராணி
தொடர் - 31
முன்கதைச் சுருக்கம்!
நேசிகா மீது காதல் உண்டா, இல்லையா என்பதை அறிய, மூன்று சந்திப்புகளை நிகழ்த்தப் போவதாக கூறினான் யாத்ரா. அதன்படி, முதல் சந்திப்பை கடலில் நடத்த ஏற்பாடு செய்தான். படகில் பயணம் செய்தபடி இருவரும் பேசினர்.
இனி —
இரண்டாம் சந்திப்பு: வானும், வான் சார்ந்த இடமும்.
தாம்பரம்.
இரண்டு குட்டி விமானங்கள், விமான ஓடுதளத்தில் நின்றிருந்தன. காற்று திசை அறிய, நீள துணிப் பலூன்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.
குட்டை கவுனும், எம்ராய்டரி மார்பு சட்டையும் அணிந்திருந்தாள் நேசிகா. தலைகேச அலங்காரம் அட்டகாசமாய் இருந்தது. இரு கைகளிலும் காப்பு போன்ற வளையல்கள்.
புல்சூட்டில் இருந்தான் யாத்ரா.
பிரஞ்ச் கட் தாடி வைத்திருந்த பைலட், யாத்ராவையும், நேசிகாவையும் கைகுலுக்கி வரவேற்றார்.
குட்டி விமானம், காதலர் விமானமாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
யாத்ராவும், நேசிகாவும், விமானத்துக்குள் ஏறி, அமர்ந்தனர். விமானம் வானேறியது. பறவை பார்வையில், இரவு சென்னை.
''பார்க்க எப்படி இருக்கிறது தெரியுமா?''
''எப்படி இருக்கிறது?''
''அப்பாவின் தோளில் அமர்ந்து திருவிழா பார்ப்பது போலிருக்கிறது. மேலே மேலே பறக்க பறக்க, மனித ஜென்மங்களின் ஆசாபாசங்கள் அற்பமாய் தெரிகின்றன. அங்கே பார்... வாகனங்கள் ஒளிப் புள்ளிகளாய் ஓடுகின்றன. குட்டி விமானத்துக்கு பதில், செயற்கை கோளில் ஏறி அமர்ந்திருந்தால், ஒட்டு மொத்த நீல நிற பூமி உருண்டையை ரசித்திருக்கலாமே என யோசிக்கிறேன்!''
ஷாம்ப்பெய்ன் பாட்டிலை, 'சிஸ்' என்று திறந்து, இரு கோப்பைகளில் ஊற்றினான் யாத்ரா. ஒன்று அவனுக்கு; மற்றொன்று அவளுக்கு.
''முதன்முதலில் உன்னை பெண்ணென்று எப்போது உணர்ந்தாய்?''
''பதிமூன்று வயதில், முகத்தை பார்க்கும் எல்லாரும், கழுத்துக்குக் கீழ் பார்த்தபோது, எனக்கு முக்கியத்துவம் தராத அனைவரும், விழுந்து விழுந்து முக்கியத்துவம் தந்த போது, வகுப்பாசிரியர் எனக்காக மட்டும் பாடம் நடத்தின போது, 'இப்போதே உன்னை ரிசர்வ் செய்து கொள்கிறேன்; பத்து வருடங்களுக்கு பின் நம் கல்யாணம்...' என, படித்த,வேலை பார்க்கும் ஒரு கிறுக்கன் உளறிப்போன போது...
''குளியலில் தலையில் விழுந்த சாதாரண நீர், கால் சேரும் போது சந்தனமாய் மணந்தபோது, கிரேன் பாக்கு மனோகர்களும், சிசர் சிகரட் மனோகர்களும் அஜீத், விஜயாய் தெரிந்தபோது... நீ?''
''என்னை ஆணென்று எப்போது உணர்ந்தேன் தெரியுமா? புதிதாய் எனக்கு மீசை முளைத்தபோது, தூக்கத்தில் கிளுகிளு கனவுகள் புதிதாய் பூத்தபோது, பெண்களின் கழுத்துக்குக் கீழே, அரசல் புரசலாய் பார்த்து, பத்து கோடி பரிசாய் பெற்றதாய் மகிழ்ந்த போது, குரலின் மகரக்கட்டு மாறிய போது, அம்மாவின் கட்டியணைப்பு லஜ்ஜை தந்தபோது, பெற்றோர் நெருக்கத்தை பொறாமையாய் பார்த்தபோது.''
''எப்போது கொள்கைவாதியாய் மாறினாய்?''
''பத்தொன்பது வயதில். பெண்களை தப்பாய் பார்க்க, ஏமாற்ற மறுத்தேன். அவர்களுக்கு ஆதரவாய் பேசி, பல தடியர்களிடம் அடி வாங்கியுள்ளேன்.''
''முற்பிறவி, அடுத்த பிறவிகளில் நம்பிக்கை உண்டா?''
''உண்டு... முற்பிறவியிலும் எனக்கு நீ தோழியாக இருந்திருக்கிறாய்!''
''எந்த மதம் உண்மைக்கு நெருக்கமாய் உள்ளது?''
''எல்லாமே மனிதர்களின் யூகங்கள் தான். மனிதாபிமானம், கூடிய மட்டும் பொய் கூறாமை, பிறர்குடி கெடுக்காமை, நேரிய வழியில் பொருளீட்டுதல், புறம் பேசாமை, நன்றி மறவாதிருத்தல், பெண்மை போற்றுதல், இவையே கடவுளுக்கு நெருக்கமானவை. நான் மதம் சாராத ஆத்திகன்!''
''எல்லா பெண்களையும் பாராட்டுகிறாய். துர்கா பத்து ஆண்களுக்கு சமமாய் கிரிமினல் தனம் செய்கிறாளே...''
''ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் செய்து வந்ததை, பெண்கள் புதிதாய் செய்யும் போது, உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர். இதை ஆங்கிலத்தில், 'ஓவர் டூ' என்பர். துர்காவை சரிப்படுத்தி விடலாம். துர்கா எனக்கு சித்தி... என் சித்தியை, என் முன்னாலேயே அவ, இவன்னு பேசாதே!''
''பார்ரா பாசத்தை... சின்னராசு பாக்யராஜ் மாதிரி இருக்கு உன் டயலாக்!''
''உயரத்தில் பறக்கும் போது, உனக்கு என்ன தோன்றுகிறது?''
''கவுண்டமணிகிட்ட செந்தில் சந்தேகம் கேக்ற மாதிரி, நா ஒண்ணு கேப்பேன். நீ ஒளிக்காம, மறைக்காம பதில் சொல்லு!''
''கேளு!''
''விண்வெளி கலங்களில் செல்லும் ஆண், பெண், புவி ஈர்ப்பு விசையும், காற்றும் இல்லாத வெற்றிடத்தில் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியுமா?''
முறைத்தான்.
''பதில் தெரிஞ்சு என்ன செய்யப் போகிறாய்?''
''பதில் உனக்கு தெரியாததால் சமாளிக்கிறாய்!''
இருவரும் விசேஷ உடை அணிந்து, ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி காற்றில் மிதந்தனர். காற்று, இரு காதிலும் சீறியது.
''இப்போது சொல்... என் மீதான காதல் உறுதிபட்டதா?''
''லைட் லைட்டா...'' என்றான் யாத்ரா.
மூன்றாம் நிறைவு சந்திப்பு: பனிமலையும் பனிமலை சார்ந்த இடமும்
காஷ்மீர். பனி படர்ந்த மலைப்பிரதேசம் நிமிர்ந்திருந்தது.
யாத்ராவும், நேசியும், குளிர்தடுப்பு ஆடை அணிந்திருந்தனர். கைகளில் கையுறை, தலையில் உல்லன் குல்லா. கண்களில் விசேஷ பாதுகாப்பு கண்ணாடி.
ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய ஆயத்தமாய் இருவரும்.
ஸ்கேட்டிங் செய்து, ஆளரவமற்ற பிரதேசம் சேர்ந்திருந்தனர். மைனசில் குளிர். பற்கள் கிட்டித்தன. கண் எதிரே பனி பூதம்.
''ஹெள யூ பீல் நேசி?''
''கிரேட்... ஆனா...''
''என்ன ஆனா?''
''காதலைச் சொல்ல இவ்வளவு செலவு பண்ணணுமா நீ?''
''காதலை எப்பவுமே அதீத கற்பனையுடன் சேர்த்து தான் சொல்லணும். யதார்த்தமான காதல், ப்ளாக் அண்ட் ஒயிட் கிளி!''
''அப்படியே பனிப்புயல் வந்து நம்மை சாய்த்து விட்டால்?''
''பனிக்குள் புதைந்து போவோம். ஆயிரம் வருடம் கழித்து தோண்டி எடுத்தாலும், புதுமை மாறா உடலுடன், காதலின் உன்னதம் அறிவிப்போம்!''
''உச்!'' சூள் கொட்டினாள் நேசிகா.
''பனிப்பிரதேசத்தில், செக்ஸ் பீலிங்கே எழாது அல்லவா?''
''காதல் எழும்!''
''பதிலுக்கு பதில் பேசுகிறாய்!''
''நேசி... டென்சிங் போல், இமயத்தின் உச்சியில் ஏறி காதல் கொடி நட்டு வருவோமா? இருபது, முப்பது நாய்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் வண்டி ஏறி, பனிப்பிரதேசம் சுற்றி வருவோமா? மீனைப் பிடித்து, ஜப்பானியர்கள் போல் பச்சையாய் தின்போமா? பனி வீடு கட்டி, அதற்குள் வசிப்போமா?''
''குளிரில் விறைத்து விடுவேன். உன்னை காதலிக்க சவாலும், சாகசமும் தேவை. நல்லவேளை, ஆறு சந்திப்புகள் எனச் சொல்லி, மூன்று புதிய இடங்கள் சேர்க்காமல் போனாயே...''
சிரித்தான் யாத்ரா.
''விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்தது, சவால், சாகச மனிதர்களால் தான். வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே கயிறு நடனம் செய்கிறான் மனிதன். ஆணும், பெண்ணும் கை குலுக்கிக் கொண்டால், குழந்தை பிறக்கும் ஏற்பாட்டை கடவுள் செய்தால், ரசிப்பாயா? வித்தை செய்யும் குரங்குக்கு தான், கடலை பரிசளிக்கப்படுகிறது. ஆண், பெண் உறவை, 64 விதத்தில் சிந்தித்ததும் சாகசம் விரும்பிதான்!''
''உன்னை விட்டால் பேசிக்கொண்டே போவாய்!''
''இன்னைக்கி உனக்கு மூடு சரியில்லையோ?''
''அப்படி இல்லை!''
யாத்ராவின் மொபைல் சிணுங்கியது... எடுத்தான். எதிர்முனையில் மொழி, கடல், அகராதி இதர இதரர்.
''ஹாய் யாத்ரா!''
''ஹாய் தோழீஸ்!''
''எங்கிருக்கிறீர்கள்?''
''பனிமலையின் மடியில். குளிர், எலும்பின் மஜ்ஜையை தாக்குகிறது!''
''நேசிகா ட்ரிப்பை எப்படி என்ஜாய் பண்ணுகிறாள்?''
''பிரமாதமாய்!''
''காதலை சொல்ல மூன்று சந்திப்புகள் கேட்டாய். இது மூன்றாவது சந்திப்பு. இன்றாவது, உண்டு, இல்லைன்னு சொல்லிடுவ தான?'' மொழி.
''என்ன அர்த்தத்ல கேக்ற?''
''நான் ஒரு மூணு இடம் குறிச்சு வச்சிருக்கேன். நீ நேசிக்கு நோ சொல்லிட்டா, நாம போகலாமில்ல?''
''நானும் மூணு இடம் குறிச்சு வச்சிருக்கேன்!'' கடல்.
''உங்களுக்கெல்லாம், இடம், பொருள் தேவையில்லை. எப்பவுமே நோ தான். வயித்தெரிச்சல் பார்ட்டிகளா! அக்கா காதல் ஜெயிக்க மண்சோறு திங்கறேன், அங்கபிரதட்சணம் செய்றேன்னு வேண்டாம, வில்லித்தனம் பண்றீங்களே...''
''அத விடுப்பா... எங்கக்காவுக்கு முத்தம், கித்தம் குடுத்தியா? நீ முத்தம் குடுப்பதில் எக்ஸ்பர்ட் என்பதை, அகராதியின் கீழ் உதடு பாத்து தெரிஞ்சிக்கிட்டோம். நேசிக்கு பெர்பெக்ட் இங்கிலீஷ் உம்மா, சுட்டுப்போட்டாலும் வராது. கமல்ஹாசனின் ஆங்கில முத்தங்கள் கிரிமினல் வேஸ்ட்!''
''போனை அகராதிகிட்ட குடு!''
''ஹாய் யாத்ரா... உன் காதல் வெற்றி பெற இறைவனை வேண்டியிருக்கேன். காதல் நிறைவேறாதவர்களின் காதல் பிரார்த்தனை, ரொம்ப ஸ்ட்ராங்கானதுடா!''
''மே பி!''
மொபைல் போனை பிடுங்கி ஆசைதம்பி, ''ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, பனி பிரதேசத்ல எதுவும் முயற்சி பண்ணிடாதீங்க. அப்புறம் காலைல ஐஸ்பாளங்களாத்தான் வெட்டி எடுத்திட்டு வர வேண்டியிருக்கும்!''
சமர், ''முதலில் காதலை சொல். பின் அறைக்கு திரும்பு. குளிர்காயும் அறை அடுப்பை உயிர்ப்பி. இரவு உணவுடன் சிறிதளவு பிராண்டி. பின் இஷ்டம் போல விளையாடுங்க!''
ஒபிலி, ''காதல் செய்யும் அறைகள் இருந்தா பிரமாதமா இருக்கும்!''
''இன்றோடு உன் கன்னிப்பய்யன் பட்டம் அம்பேல்!'' என்றாள் பியூலா.
ஒவ்வொருவராய் கலாட்டா செய்தனர். முத்தாய்ப்பாய் யாத்ரா, ''ரிசல்ட்டுக்காக காத்திருங்கள் மக்களே!'' தொடர்பை துண்டித்தான்.
''அப்புறம்?''
''நீ தான் சொல்ல வேண்டும்!''
''இன்னிக்காவது இவன் சொல்லி விடுவானா என்று பரபரக்கிறாய் அல்லவா?''
''நானொன்றும் அலைஞ்சான் கேஸ் அல்ல. பொறுமையாகத்தான் இருக்கிறேன். சொல்ல வேண்டிய விஷயத்தை உடனே சொல்லாமல், பீடிகை போட்டால் உனக்கு ஒரு சாடிஸ்டிகல் சந்தோஷம் கிடைக்கிறதல்லவா?''
''என்ன இப்படி பேசுற?''
''வேற எப்படி பேசுறது? உன்னுடைய மூணு சந்திப்புகளும், ஹிட்லர்தனமாய் இருந்துச்சு. எனக்கு பனி ஒத்துக்காது. வீசிங் ப்ராப்ளம் உண்டு. ஏன் என்னை சித்திரவதை பண்ற?''
''சாரி!''
''சீய்... தொடாதே!''
''நேசி... ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மீ!''
''உன்னுடைய விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் எனக்குத் தேவையில்லை. மூணு சந்திப்புகள் வந்தோம்; மூணும் முடிஞ்சு போச்சு. என்ன சொல்ல நினைக்கிறாயோ, அத டக்குன்னு சொல்லிடு!''
முகம் கனிந்தான். ''நல்ல முடிவு தான்!''
''சொல்ல வேண்டியதை தெளிவா சொல்லு!''
இரு கைகளையும் அன்பே வா எம்.ஜி.ஆர்., போல உயர்த்தி, ''நான் நேசிகாவை நேசிக்கிறேன்!'' என முழங்கினான்.
இறுக்கமாக இருந்தாள் நேசிகா.
மீண்டும் கூவினான்.
''நீ கத்றது காதில் கேட்டது. மீண்டும் மீண்டும் ஏன் கத்ற?''
''எனி திங் ராங் வித் யூ?''
''ஆமா... நீ மனசில் நினைச்சதை சொல்லிட்ட... நான் என் மனசில நினைக்கிறதை சொல்லணுமில்ல...''
''சொல்லு சொல்லு!''
''நான்... யாத்ராவை... வெறுக்கிறேன்!''
— தொடர்ந்து பூக்கும்.
* * *
