PUBLISHED ON : பிப் 27, 2022

''கண் எதிரில் ஒரு அநியாயம் நடந்திருக்கு. அதைக் கண்டும் காணாமல் போகச் சொல்றீங்களா... என்னால முடியாதும்மா, கண்டிப்பா அவனுக்கு எதிரா நான் சாட்சி சொல்லத் தான் போறேன்,'' என்ற நேத்ராவின் குரலில் இரும்பின் உறுதி தெரிந்தது.
''சொன்னா புரிஞ்சுக்கோ நேத்ரா. எதுக்கும் அஞ்சாதவன். அவங்கப்பாவின் அரசியல் செல்வாக்கு நமக்கே தெரியும். அவரோட ஆள், 'சாட்சி சொல்லாமல் இருப்பது நல்லது'ன்னு பேசிட்டு போனாலும், அது மறைமுக மிரட்டல் தானே?''
''அம்மா... நான் சட்டம் படிக்கிறவம்மா. இவனை மாதிரி ரவுடிகளுக்கு பயந்தா முடியுமா?''
மகளிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த, சுசீலா, கணவன் சிவராமனிடம், ''நீங்களாவது சொல்லக் கூடாதா... வினயாவுக்கு நடந்த கொடுமையை நினைச்சா எனக்கும் தான் பதறுது. அதுக்காக, இவள் அவனை எதிர்த்து நின்னா, அந்த படுபாவியால் ஏதாவது பிரச்னை வந்தா, என்னங்க செய்யிறது?'' என்றாள்.
''அப்பா, ப்ளீஸ்... நீங்க எதுவும் சொல்லாதீங்க. அந்தப் பாவி, அவள் மேல் ஆசிட் ஊற்றியதை என் கண்ணால பார்த்த பிறகும், சாட்சி சொல்லாமல் இருந்தா, என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்பா,'' என்ற நேத்ரா கண்களில் கண்ணீர் தெரிய, அவர் மவுனமானார்.
சட்டக் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும், நேத்ராவின் நெருங்கிய தோழி வினயா மீது, ஆசிட் வீச்சு நடந்திருந்தது. வினயாவின் திடமான மறுப்புக்குப் பிறகும், காதல் என்று அவள் பின்னால் சுற்றிய கயவன்தான், அந்த பாதகச் செயலைச் செய்திருந்தான்.
சென்ற மாதத்தில் ஒருநாள், இருவரும் நுாலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ நேத்ராவை பெயர் சொல்லி அழைக்க, அவள் திரும்பிய சமயத்தில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.
தோழியின் கதறலில் இவள் பதறி திரும்ப, அதற்குள் வண்டியைக் கிளப்பியவனின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டும் தான் இவளால் கவனிக்க முடிந்தது. ஆனால், வலது முழங்கையில் போட்டிருந்த, 'டிராகன் டாட்டூ' அவன் யாரென்பது, அவளுக்குத் துல்லியமாக காட்டியது.
இதற்கு முன், பலமுறை வினயாவை அஸ்வின் பின் தொடர்ந்தபோது, இவள் அவனைப் பார்த்திருந்ததால், எளிதாக அடையாளம் காண முடிந்தது.
அந்த துர் சம்பவத்திற்கு பின், வினயாவின் அம்மாவை அழைத்து போய், அவன் மீது புகார் கொடுத்ததில், அவனைக் கைது செய்தது, காவல் துறை. வழக்கு விசாரணைக்கு முன், நேத்ராவை, சாட்சி சொல்ல விடாமல் தடுக்க என்னென்னவோ செய்தார், அஸ்வினின் அப்பா. அவள் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை.
அஸ்வினின் அம்மாவுக்கு உடல் நிலை மோசமாக இருப்பதாக சொல்லி, தங்கள் செல்வாக்கால் அவனுக்கு, 'ஜாமின்' வாங்கியிருந்தனர். 'அப்பா, அவளை என்கிட்டே விட்டுடுங்க. நான் பார்த்துக்கறேன்...' என்று கொதித்தான், அஸ்வின்.
'டேய்... பண்ணின வரைக்கும் போதும். வழக்கு முடியற வரை, கொஞ்சம் சும்மா இரு. நம்மாள் ஒருத்தனுக்கு உன்னை மாதிரியே, 'டாட்டூ' போட்டு அவன் தான் ஆசிட் ஊத்தினான்னு சாதிச்சுக்கலாம்; அது பிரச்னை இல்லை.
'நீ வேற ஏதாவது செஞ்சு விஷயத்தை பெரிசாக்கிடாதே. இப்பவே பேப்பர், 'டிவி'ன்னு உன்னை விட என் பெயர்தான் அடிபடுது. 'மினிஸ்டர் போஸ்ட் தரேன்'னு தலைவர் சொல்லியிருந்தார். இந்த விஷயத்தால் எல்லாமே பறிபோயிடும் போலிருக்கு...'
அஸ்வின் செய்தது மிகப்பெரிய பாதகம் என்பதை விட, தனக்கு மந்திரி பதவி கிடைக்காமல் போய் விடுமோ என்பதுதான் முக்கிய கவலையாக இருந்தது. சிறு வயதிலிருந்தே அதிக பணமும், கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்த அஸ்வினுக்கு, வினயா, தன் காதலை ஏற்றுக் கொள்ளாததோடு, தன்னை அவமானப்படுத்தியதையும் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
ஒருவேளை அப்பாவின் முயற்சி தோல்வியடைந்து, தனக்கு தண்டனை கிடைத்து விட்டால் என, அப்பாவுக்கு தெரியாமல், நேத்ராவை தீர்த்து கட்ட முடிவெடுத்தான். அரசு மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை நிபுணர், சிவராமன். அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் தான் வினயா அனுமதிக்கப் பட்டிருந்தாள்.
அன்று காலை, தோழியைப் பார்த்து விட்டு, நேத்ரா கல்லுாரிக்கு கிளம்ப, ''ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா,'' என்று விடை கொடுத்த அப்பாவின் கண்களில் இருந்த கலக்கம், அவளுக்கு வருத்தத்தை அளித்தது.
'அப்பா, ப்ளீஸ்... இதெல்லாம் பார்க்கும்போது தான், கண்டிப்பா சாட்சி சொல்லி, அவனுக்கு தண்டனை வாங்கித் தந்தே ஆகணும்ன்னு வைராக்கியம் வருது. தப்பு செஞ்சா நிச்சயம் தண்டனை கிடைக்கும்ன்னு, தப்பு செய்ய நினைக்கிறவங்களுக்கு ஒரு பயம் வரணும்ப்பா...'
நேத்ரா சொல்வதில் இருந்த நியாயம் புரிய, 'நிச்சயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகணும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லம்மா. இருந்தாலும், நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு...' என்று அழுத்தமாக சொல்ல, அவளும் தலையசைத்து கிளம்பினாள்.
அன்று மாலை கல்லுாரி விட்டு வரும்போது, அஸ்வினால் கடத்தப்பட்டாள்.
வாயும், கையும் கட்டப்பட்ட நிலையில் அவளை ஒரு காரில் வெகு துாரம் அழைத்துப் போய், 'எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்னை ஒரு வழியாக்கிட்டு தான் கொல்லணும் போல இருக்கு. ஆனா, இப்போதைக்கு நேரமில்லை. அதனால், இப்படியே செத்துப் போ. அப்புறம் பேயா வந்து எனக்கெதிரா சாட்சி சொல்லு...' என்றவன் ஓடிக் கொண்டிருந்த காரிலிருந்து, அவளைத் தள்ளி விட்டான்.
தள்ளி விட்ட வேகத்தில் அவள் இறப்பது உறுதி என்று தெரிந்தது. இருப்பினும், எதற்கு வம்பு, அரைகுறையாய் விட வேண்டாம் என்றெண்ணி, அவளைத் தள்ளி விட்ட இடம் நோக்கி அசுர வேகத்தில் வண்டியைத் திருப்பினான். அதே வேகத்தில் எதிரே வந்து கொண்டிருந்த லாரி, அவன் கார் மீது மோதியது.
மகள் வீடு வர தாமதம் ஆனதும், சிவராமன் பதட்டத்துடன் அவளது மொபைலுக்கு அழைத்தார். வெகு நேரம் ஆகியும் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், பெற்றோர் இருவரும் பதறினர். அந்நேரம் அவரது எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்துப் பேசியவரின் முகத்தில் கலவரம் படர்ந்தது.
மனம் பதற ஆம்புலன்சை வரவழைத்து, மற்றொரு மருத்துவருடன் அவளிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். மகளிருந்த நிலையைப் பார்த்ததும், தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து கதறி அழுதார். அவருடன் வந்திருந்த மருத்துவர், 'டாக்டர், பயப்படாதீங்க... 'பல்ஸ்' இருக்கு...' என்று சொல்லி, வரும் வழியிலேயே தன்னால் இயன்ற முதலுதவிகளை செய்தபடி வந்தார்.
அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் முன், அரைகுறையாக கண் விழித்தவள் திக்கித் திணறி சொன்ன வார்த்தைகள், அவரைக் கொல்லாமல் கொன்றது. 'இந்த நொடியே, இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வினை கொன்று விட்டால் என்ன...' என, அவரது பெற்ற உள்ளம் கலங்கித் தவித்தது.
'அஸ்வினுக்கு அடிபட்டதால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு. உடனடியா ஆபரேஷன் செஞ்சாகணும். நம் சிவராமன் தான் இதில் ஸ்பெஷலிஸ்ட். ஆனா, இப்போ இருக்கிற நிலையில் அவரை ஆபரேஷன் செய்ய சொல்றது சரியா வருமான்னு தெரியலை...' என, தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர், மருத்துவர்கள்.
அஸ்வினின் அப்பாவோ, தன் மகனை, உயர்ந்த தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று பிரச்னை செய்து கொண்டிருந்தார்.
'சார், இது விபத்து வழக்கு. தவிர, 'அந்தப் பெண்ணை, உங்க மகன் கடத்திட்டு போயிருக்கான்'னு, 'மீடியா'வில், 'கிழி கிழி'ன்னு கிழிச்சிட்டு இருக்காங்க. உங்க இஷ்டத்துக்கு இப்போ எதுவும் செய்ய முடியாது...' என, கறாராக சொன்னார், காவல் துறை அதிகாரி.
'நீங்க அனுப்பின உங்க மகனோட ரிப்போர்ட் பார்த்தேன், சார். இதுக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர் சிவராமனை விட சிறந்தவர் யாருமில்ல. சோ, கவலைப்படாதீங்க...' என்று மருத்துவர் போனில் தெரிவிக்க, கலங்கிப் போனார்.
'அந்த டாக்டரோட பொண்ணைத்தான் இவன் கடத்தியிருக்கான். ரொம்ப சிக்கலான ஆபரேஷன்னு சொல்றாங்க. இவன் மேல இருக்கிற வெறுப்பில் அந்த ஆள் ஏதாவது ஏடாகூடமா செஞ்சுட்டார்னா... செய்யறதையாவது ஒழுங்கா செஞ்சு தொலைச்சானா... இவனும் அடிபட்டு என் உயிரை வாங்கறான்...' மனைவியிடம் எரிச்சலை காட்டினார்.
'டாக்டர் சிவராமன், இப்போ நீங்க இருக்கிற நிலை எனக்கு புரியுது. உங்களுக்கும் நிலைமையின் தீவிரம் புரியும்ன்னு நினைக்கிறேன். இந்த அறுவை சிகிச்சையில் நம்மையும் மீறி ஏதாவது தவறு நடந்தாலோ, இல்லை தானாகவே பிரச்னை வந்தாலோ, எல்லாரும் உங்களைத் தான் சொல்வாங்க.
'அதனால, முடிவை உங்களிடமே விடறேன். இந்த ஆபரேஷன் செய்ய உங்களுக்கு விருப்பமில்லைன்னா சொல்லிடுங்க. வேற யாரையாவது கூப்பிடலாம்...' என்றார், தலைமை மருத்துவர்.
'நானே செய்றேன் சார்...' என்றார், சிவராமன்.
'டாக்டர் சிவராமன், உங்களைத் தவிர வேறு யார் ஆபரேஷன் செய்திருந்தாலும், அஸ்வினை பிழைக்க வைத்திருக்க முடியாது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், ஒரு மருத்துவரா உங்க கடமையை சிறப்பா செஞ்சு, மற்றவர்களுக்கு முன்னுதாரணம் ஆயிட்டீங்க...' என்ற டீனின் பாராட்டை ஏற்று, மகளிருந்த அறைக்கு வந்த சிவராமனுக்கு கண்கள் கலங்கின.
'ஒரு மருத்துவராக என் கடமையை சரியாக செய்து விட்டேன். ஒரு தகப்பனாக என் மகளுக்கு நேர்ந்த அநீதிக்கு என்ன செய்யப் போகிறேன்?' என்ற கேள்வி, அவரது மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
ஒரு மாதத்திற்கு பின்-
அஸ்வின் பூரண குணமடைந்து வீடு வந்ததையடுத்து, அப்பாவும், மகனும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
'எப்படிப்பா அந்தப் பொண்ணோட அப்பாவை எனக்கு ஆபரேஷன் பண்ண விட்டீங்க... அந்த ஆள் ஏதாவது ஏடாகூடமா பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?'
'அப்போ இருந்த சூழ்நிலை அப்படி, அஸ்வின். நீ என் பேச்சை கேட்டு, கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா, இந்நேரம் வழக்கு முடிந்திருக்கும். இப்போ இன்னும் சிக்கலாக்கி வச்சிருக்கே.
'அந்தப் பொண்ணுக்கு அப்பப்போ விழிப்பு வருதுன்னு, வேற தகவல் வருது. இனிமேலாவது நான் சொல்றதைக் கேட்டு, அமைதியா இரு. மற்றதை நான் பார்த்துக்கறேன்...' என்றவர், அவனுக்கு பதிலாக வேறு ஒரு ஆளை காவல்துறையிடம் சரணடைய, தான் செய்திருக்கும் ஏற்பாட்டை விளக்கிக் கூறினார்.
திருப்தியுடன் தலையாட்டினான், அஸ்வின்.
'அம்மா, ப்ளீஸ்... இப்பவும் அவங்க ரெண்டு பேரும் செய்யிற தப்பை பார்த்துட்டு சும்மா இருந்தோம்னா, நாம மனுஷங்களா இருக்கவே லாயக்கில்லாதவங்களா ஆயிடுவோம்மா.
'அஸ்வின் செய்யிற தப்பையெல்லாம் தட்டிக் கேட்காம இருந்ததால, இப்போ என்ன வேலை செஞ்சு வச்சிருக்கான்னு பார்த்தீங்கல்ல... நீங்க, அவன் செய்ததை எல்லாம் மூடி மறைச்சு காப்பாத்திட்டே இருந்தா, இன்னமும் அவன் தப்பு செஞ்சுட்டே தான் இருப்பான்...' என்றாள், மகள் வசுமதி.
'அவன் செஞ்சது தப்பு தான். அதுக்காக அவன எப்படியோ போகட்டும்ன்னு எப்படி விட முடியும். இப்போதான் செத்து பிழைச்சு வந்திருக்கான். அவனை திரும்பவும் ஜெயிலுக்கு அனுப்பணும்ன்னு சொல்றியா...' என்றாள், அஸ்வினின் அம்மா பரிமளா.
'ஆண்கள்கிட்ட இப்படி நடந்துக்கணும், அப்படி நடந்துக்கணும்ன்னு என்கிட்டே எவ்வளவு சொல்லி வளர்த்திருப்பீங்க... ஆனால், அஸ்வின்கிட்ட ஒரு முறையாவது, நீ ஒரு ஆண் பிள்ளை, பெண்கள்கிட்ட கண்ணியமா நடந்துக்கணும்ன்னு சொல்லி இருக்கீங்களா... அவன் இந்த அளவுக்கு மோசமா வளர்ந்திருக்கிறதுக்கு ஒரு வகையில் நீங்களும் தான் காரணம்...'
'என்னடி சொல்றே?'
'அம்மா, இப்போ எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும்மா. அவ வளர்ந்து பெரியவள் ஆனதும், அஸ்வின் நடந்துகிட்ட மாதிரி என் பொண்ணுக்கு நடந்தா எப்படி இருக்கும்ன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...' என்றாள்.
'ஐயோ... அப்படி சொல்லாதடி...'
'நான் இப்படி சொன்னதுக்கே பதறுறீங்களே, அங்கே இரண்டு அம்மாக்கள் எப்படி தவிச்சிட்டு இருப்பாங்கன்னு நினைச்சு பார்த்தா, எனக்கு மனசு கலங்குதும்மா. அவங்க வேதனையை கொஞ்சமாவது நினைச்சு பாருங்க. அவங்க மனம் வெதும்பி கொடுக்கிற சாபம், நம் பரம்பரையையே அழிச்சுடும்...'
'இப்போ என்னடி பண்ண சொல்றே?' என்றாள், பரிமளா.
'அப்பாவும், அஸ்வினும் வழக்கை மாற்ற என்ன செய்யப் போறாங்கன்னு பேசிட்டு இருந்ததை பதிவு பண்ணி வச்சிருக்கேன். இதை போலீஸ்கிட்ட கொடுக்கப் போறேன்...'
'அப்படியே கொடுத்தாலும், உங்கப்பா தன் செல்வாக்கால் இதையெல்லாம் ஒண்ணுமே இல்லாம பண்ணிட மாட்டாரா?'
'தப்பு செய்யிறவங்க எப்பவுமே தப்பிச்சிட்டே இருக்க முடியாதும்மா. இப்போ, 'சோஷியல் மீடியா' முழுக்க இவங்களுக்கு எதிரா எல்லாரும் போராடிட்டு இருக்காங்க. பலமான சாட்சியம் கிடைச்சா, காவல் துறையும் நடவடிக்கை எடுத்து, நல்ல பெயர் வாங்கத்தான் பார்ப்பாங்க. நான் போலீஸ்கிட்ட போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
'நேற்று அஸ்வின் அறையை சுத்தம் செய்யும்போது, இந்த ஆல்பம் கிடைச்சிது. ஒரு அம்மாகிட்ட இதைக் காட்டவே எனக்கு கூசுது. ஆனா, உங்க மகனோட யோக்கியதையை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்ன்னு தான் காட்டறேன்...' என்று, ஒரு புகைப்பட ஆல்பத்தை நீட்டினாள்.
பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்ததை பார்த்தவர், 'கடவுளே...' என்று கை நடுங்க, அதை மூடினாள்.
சிறிது நேரம் கண்கள் மூடி யோசனையில் ஆழ்ந்திருந்த பரிமளா, மெல்ல கண் திறந்து, ''வசு, நீ பதிவு பண்ணி வச்சிருக்கிறதை என்கிட்டே கொடு. நானே போலீஸ்கிட்ட புகார் தரேன். உண்மையா தான் சொல்றேன்.
'நீ சொன்ன மாதிரி அவன் செய்யிற தப்பில் எனக்கும் பங்கு இருக்கு. அதை நானே சரி செய்யறேன். அனாவசியமா நீ இதில தலையிட்டு உன் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திக்காதே...' என்றதும், வசுமதி முகம் மலர்ந்தது.
அடுத்த நாள் காலை, கணவர் வெளியே கிளம்பிய நேரம், பரிமளாவும் கிளம்பத் தயாரானாள்.
''பரிமளா, எங்கே கிளம்பிட்டே?''
''பாவத்தைத் தொலைக்கப் போறேன்.''
விசித்திரமாக நோக்கியவர் மனைவியின் கையிலிருந்த பூஜை கூடையைக் கண்டதும், ''ஓ... கோவிலுக்கு போறியா... உன் பையன் இந்த வழக்கிலிருந்து நல்ல படியா வெளியே வரணும்ன்னு வேண்டிக்கோ,'' என்று புன்னகையுடன் சொல்லி கிளம்பினார்.
வெளியே வந்து ஆட்டோ பிடித்து அமர்ந்தாள், பரிமளா.
''எங்கே போகணும்மா?''
''கமிஷனர் ஆபிசுக்கு போப்பா,'' என்று சொல்லி, கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவளின் மனதில் இனம் புரியாத அமைதி.
பிரேமலதா பாலசுப்ரமணியம்
