PUBLISHED ON : பிப் 27, 2022

மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுபவர், பெர்னாட்ஷா.
ஒருமுறை, வயலின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராய் ஷாவை அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் கலைஞர் வாசித்த வயலினிசை மிகவும் மோசமாய் அமைந்து விட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும்,'வயலின் கலைஞரை பற்றி தங்கள் கருத்து என்ன...' என்று, நிகழ்ச்சிக்கு ஷாவை அழைத்தவர் கேட்டார்.
உடனே, 'இவர் வாசித்த வயலின் இசையை கேட்டதும் எனக்கு பனி கரடி ஞாபகம் வந்தது...' என்றார், ஷா.
திடுக்கிட்ட நிகழ்ச்சி அமைப்பாளர், 'பனி கரடிக்கும், வயலினுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே...' என்றார்.
'இவருக்கும், வயலினுக்கும் மட்டும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ன...' என்று கேட்டார், ஷா.
சென்னை மாகாணத்தின் முதல்வராய் இருந்தபோது, ஹிந்தி மொழியை தமிழகத்தில் கட்டாய பாடமாக அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார், ராஜாஜி.
ஹிந்தி மொழி திணிப்பிற்கு, தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார், ராஜாஜி. அப்போது, ஹிந்தி மொழியின் அவசியத்தை பற்றி எளிதாக எடுத்துரைத்தார்.
'வெளியே செல்லும்போது நாம் செருப்பை அணிந்து செல்கிறோம். வீட்டிற்கு வந்ததும் அதை வெளியிலேயே கழற்றி வைத்து நுழைகிறோம். அதுபோலவே, தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது, தமிழ் தெரியாத மக்களிடம் உரையாட நாம், ஹிந்தி மொழியை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்திற்கு திரும்பியதும் தமிழை பயன்படுத்திக் கொள்ளலாம்...' என்றார்.
டிச., 1948ல், சென்னையிலிருந்து வட மாநிலத்தை நோக்கி அடித்த ஒரு பெரும் சூறாவளி, ஹிந்தி பட மார்க்கெட்டின் கதவுகளை துாள் துாளாக்கி விட்டது. தம், 35 லட்சம் ரூபாய் தயாரிப்பான, சந்திரலேகா ஹிந்தி படத்தை வெளியிடுவதற்கு முன்னரே, பம்பாயில் ஒரு புரட்சியை உண்டு பண்ணி விட்டார், எஸ்.எஸ்.வாசன்.
சின்ன சின்ன விளம்பர பேனர்களையே நிர்மாணிப்பது வழக்கமாக இருந்த பம்பாய் நகரில், முதல் தடவையாக, 15க்கு 60 அடி அளவுள்ள மாபெரும் பேனரை, சந்திரலேகா படத்திற்காக நிறுவச் செய்தார், வாசன்.
சென்னை ஓவியர்களான பாலு பிரதர்ஸ், பம்பாய் சென்று, அந்த பேனரை நிர்மாணித்தது. பம்பாய் நகரவாசிகள் ஆச்சரியத்துடன் அந்த பேனரை பார்த்தனர். வாய் பிரசாரத்தின் மூலமே அப்படம் பற்றிய செய்தி நகரெங்கும் காட்டுத்தீ போல் பரவி, படம் பார்க்கும் ஆவலை துாண்டி விட்டது.
மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹிந்தி, சந்திரலேகா படத்திற்கு பம்பாய் தியேட்டர்காரர்கள் முதலில் இடம் கொடுக்காமல், சாக்கு போக்கு சொல்லி வந்தனர். அசந்துவிடாமல், படத்தை டில்லி நகரில் முதலில் வெளியிட்டு, புயலை கிளப்பினார், வாசன்.
இப்படத்திற்கு கிடைக்க துவங்கிய பேராதரவை கண்டதும், பம்பாய் உட்பட எல்லா ஊர் தியேட்டர்களும், நான் முந்தி, நீ முந்தி என்று, வாசனை அணுகினர்.
முதல் ஓராண்டு காலத்திலேயே அப்படம், 1.55 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்று, உலகத்திலேயே அதிக வசூல் பெற்ற படங்களில் இரண்டாம் இடத்தை பெற்றது. தயாரிப்பாளரின் பங்கிற்கு மட்டும் சுமார், 74 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதன்பின், அப்படம் இரண்டாம், மூன்றாம் முறையாக எல்லா ஊர்களிலும் ஓடி, மேலும் லாபத்தை குவித்தது குறிப்பிடத்தக்கது.
நடுத்தெரு நாராயணன்
