தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக ! - தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் (1)

உயிரே உனக்காக ! - தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் (1)

உயிரே உனக்காக ! - தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் (1)


PUBLISHED ON : டிச 05, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.கியூ 410 - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், 'ஜிவ்'வென்று பறக்கத் துவங்கியது.

முதல் வகுப்பு இருக்கைகள், கன ஜோராக இருந்தன.

இருக்கைகள் தனித்தனியாக இருந்தாலும், இருவரும் ஒட்டிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தான் பார்ப்பதை போல, அவளை ஆர்வமுடன் பார்த்தான்.

சராசரி பெண்களை விட உயரமானவள், ஆரோக்கியமான உடல்.

அவளது அழகு அசாதாரண மானது, அவளையே பார்த்துக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது.

ஏர்ஹோஸ்டஸ் இடையில் குறுக்கிட்டாள்; அவளும் அழகாகத்தான் இருந்தாள்.

அழகானவர்களை இவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால், இவன் ஆணழகன். சராசரிக்கு அதிகமான உயரம். வலிமையான உடல். வசீகரிக்கும் பார்வை.

ஏர்ஹோஸ்டஸ் நெருங்கி வந்து நல்வரவு சொன்னாள்.

நுனிநாக்கு ஆங்கிலமாக இருந்தாலும், செயற்கை இல்லாமல் வெகு இயல்பாக இருந்தது.

அவள் அகன்றதும், மெல்ல தலையை சாய்ந்து, ''மது...'' என்றான்.

''என்ன நரேன்...''

மதுரிமாவையே ஆழ்ந்து பார்த்தான். சே... என்ன வரிசையான பற்கள்... வியந்தான். மூக்கைத் திருகி சரசமாடலாமா - குறும்புத்தனமாக யோசித்தான்.

முதலிரவு முடிந்து மூன்று நாட்களானாலும், அந்த இனிய நினைவுகள் சிந்தையில் சுழன்று கொண்டே இருந்தன.

விடுமுறைக்கென்று சென்னைக்கு தனித்தனியாக வந்தவர்கள், தம்பதிகளாக அமெரிக்கா திரும்புகின்றனர்.

கேட்பவர்கள் வியப்பர்; ஆனால், அதுதான் உண்மை என்று தலையில் அடித்து சத்தியம் செய்ய முடியுமா?

''என்ன யோசனை நரேன்?'' மதுரிமா கிசுகிசுத்தாள்.

''இந்த ஹோஸ்டஸ்!'' என்று, மதுரிமாவின் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக முணுமுணுத்தவன், மதுரிமாவின் காது மடல்களையே பார்த்து மயங்கிப் போனான்.

''கடவுள் உன் விஷயத்தில் ரொம்ப தாராளம்!''

''புதிர் போடாதே நரேன்...''

''நான் சொக்கிப்போய் நிற்கிறேன். உன் முகத்தின் ஒவ்வொரு அசைவும், என்னை சொர்க்கலோகத்திற்கு, 'வா'வென்று அழைக்குது!''

மதுரிமாவின் கைகளை பற்றி, தன் கைக்குள் அழுந்த பிடித்துக் கொண்டான்.

மதுரிமாவின் மனம், மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது.

பளிச்சென்ற முகத்தில், எவ்வித ஒப்பனையும் இல்லாமல், அரக்கு கலர் காட்டன் சில்க்கில், அப்சரஸ் போல் ஜொலித்த புதுக்கருக்கு கலையாத மனைவியை பெருமையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

முந்தைய இரவும், அவள் காது மடல்களை பார்த்து பரவசமாகி, செல்லமாக கிள்ளி, தன் பற்களால், அவளுக்கு வலிக்காத வகையில் கடித்து சரசமாடியது நிழலாடியது.

''அந்த ஹோஸ்டஸ் என்றீர்கள்!'' மதுரிமா முடிக்கவில்லை.

''ஓ... அவளை எங்கேயோ பார்த்த நினைவு...''

''பார்க்கும் எல்லாரும் உங்க நினைவில் பதிவாகி விடுவரே... நீங்கதான் கம்ப்யூட்டர் இன்ஜினியராச்சே!''

''பார்க்கும் எல்லாரும் இல்லை. அழகானவர்கள் மட்டும்...'' குறும்பாக சொன்னான்.

சட்டென்று மதுரிமாவின் முகத்தில் ரசாயன மாற்றம் ஏற்பட்டதை கவனித்த நரேன், அவசர அவசரமாக, ''ஏய்... ஜஸ்ட் ஜோக்!'' என்று படபடத்தான்.

சொல்லி வைத்தாற்போல், மீண்டும் அந்த ஏர் ஹோஸ்டஸ் அங்கு பிரசன்னமானாள்.

அவள் நடையில், ஒரு நடன ஒயில் தெரிந்தது. முகத்தில் மின்னல் ஒளி... தமிழில் பேசினாள்.

''வாழ்த்துக்கள்!'' என்று சொல்லி, சாக்லேட் குவியலை அவர்கள் பக்கம் நீட்டினாள்.

''தேங்க்ஸ்... எதுக்கு வாழ்த்துக்கள்?'' மதுரிமா சட்டென்று கேட்டாள்.

''யூகியுங்கள் மேடம். இன்னும் இருபது மணி நேரம் விமான பயணம் இருக்கு. உங்கள் கேள்விக்கு விடை, கடைசியில் சொல்கிறேன்!'' விசுக்கென்று நடந்து போனாள். ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல் இருந்தது.

''வேடிக்கையாக இருக்கு!'' - நரேன் தோள்களை குலுக்கிக் கொண்டே சொன்னான்.

''எல்லாம் வியப்பாக இருக்கு நரேன்!''

''ஆமாம்... உன்னை பார்த்தது சொக்கிப் போனது; மணந்தால் மதுரிமாவைத்தான் என்று  மனதிற்குள் சபதம் செய்தது...'' என்று அடுக்கிக் கொண்டே போனான்.

''இந்த கல்யாணம் இவ்வளவு சுலபமாய் கூடிவரும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.''

மெலிதாக தலையாட்டினாள் மதுரிமா. அதில் ஒரு பாவனை பளிச்சிட்டது.

வழக்கமான பெண் பார்க்கும் படலம். 'பிடிச்சிருக்கா...' என்ற பரஸ்பர விசாரிப்புகள். 'எவ்வளவு செய்வீங்க?' - வர்த்தக பரிமாற்றங்கள். 'பின்னர் கடிதம் எழுதறேன்...' என்ற சஸ்பென்ஸ் எதுவுமில்லை.

மதுரிமாவும், நரேனும், லாஸ் ஏஞ்சல்சில் வசிப்பவர்கள்.

குறுகிய விடுமுறைக்காக சென்னை வந்த நரேன், பெரிய கம்பெனியில், முக்கிய பதவி வகிக்கும் அதி அற்புத கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நினைத்தாலும், அவனை அசைக்க முடியாது. இந்தியாவுக்கு திரும்பி அனுப்ப முடியாது. அமெரிக்க குடிமகன் அந்தஸ்து பெற்ற இளந்தமிழன்.

மதுரிமா, கலை உலக தாரகை. அற்புதமான கதக் நடனக் கலைஞர். அவள் அம்மா நடத்தும் நாட்டியப் பள்ளியில் பயின்று, உலகெங்கும் சுற்றிவரும் இளம் மயில். ஒயிலான புள்ளிமான்.

இவர்கள் முதல் சந்திப்பும் வித்தியாசமாய் அமைந்தது.

மதுரிமா, நரேன் இருவர் மனதிலும், ப்ளாஷ்பேக்காக ஒளிபரப்பானது.

'தினமலர்' பத்திரிகையில், அன்றைய நிகழ்ச்சி நிரலை பார்த்துக் கொண்டே வந்தவன் பார்வை, ஒரு இடத்தில் நகராமல் நின்றது.

'இன்று மாலை நாரதகான சபா அரங்கில் அமெரிக்க நடனக்கலைஞர் மதுரிமாவின் கதக் நடனம்...' - அமெரிக்கா, கதக், இரண்டும் அவனை ஈர்த்தன.

அப்பாவை கேட்டான், 'மாலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் கிடைக்குமா?'

'ஓ... பேஷா... நான் நாரதகான சபாவின் மெம்பராச்சே... அம்மாவையும் அழைச்சிட்டு போகலாம்...'

மாலையில், அப்பா, அம்மாவோடு அரங்கிற்கு போனான் நரேன். அரங்க வாசலில் வரவேற்றார், சபாவின் காரியதரிசி கிருஷ்ணசாமி. அவர், நரேன் தந்தையின் நெருங்கிய நண்பர். மூன்று பேரையும் முதல் வரிசையில் உட்கார வைத்தார்.

வழக்கமான அறிவிப்புகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒலிபரப்பான பின், திரை விலகியது. 'பளிச்'சென்று மின்னல் அடிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது நரேனுக்கு.

வானவில்லின் வர்ணஜாலங்கள் மேடையில் அரங்கேறின. மகன் வைத்த கண் மாறாமல் மேடையிலேயே லயித்துப் போயிருப்பதை பார்த்து, நரேனின் அப்பாவும், அம்மாவும் வியந்தனர்.

மூன்று ஆண்டுகளாக, மகனை மணக்கோலத்தில் பார்க்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய ஆசைக்கும், ஆஸ்திக்கும் ஒரே வாரிசு நரேன் தான்.

விடுமுறையில் வரும்போதெல்லாம், ஜாதகப் பிரதிகள், பெண்ணின் புகைப்பட ஆல்பங்களுடன் காத்திருப்பர்.

அவன் விரும்பும் வகையில் எந்த பெண்ணும் அமையவில்லை. ஒருநாள் ரொம்பவும் சீரியசாக அம்மா சொன்னாள்...

'நரேன்... அமெரிக்காவில் வெள்ளைக்காரி யாரையாவது காதலிக்கிறாயா? மறைக்காமல் சொல்லு... எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லே. 'ஜாம் ஜாம்...'ன்னு கல்யாணத்தை நடத்தி வைக்கிறோம்!'

நரேன் கலகலவென்ற சிரித்தான்.

'நிச்சயம் ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் மணப்பேன். அதுவும் உங்க ஆசியுடன் தான்; உங்க விருப்பப்படி தான்!'

நரேன் சொன்னதை அப்படியே நம்பிய பெற்றோர், தங்கள் கண்ணில் படும் அழகான பெண்களை, தங்கள் மருமகளாக்கி கொள்ளலாமா என்று ஏங்கத் தொடங்கினர்.

சபா செயலர் கிருஷ்ணசாமி, அவர்கள் அருகில் வந்து உட்கார்ந்தார்.

'இந்த ஆர்ட்டிஸ்ட் கூட அமெரிக்கா தான்!'

ஆர்வமுடன் நரேன் கேட்டான்.

'எந்த மாநிலம்?'

'லாஸ் ஏஞ்சல்ஸ்!'

'ஓ... நான் இருக்குமிடம்தான்...' - உற்சாகமானான் நரேன்.

'உங்களுக்கு நாட்டியத்தில் ஈடுபாடு உண்டா?'

'கொஞ்சம், கொஞ்சம்...' என்ற நரேனின் பார்வை, மேடையிலேயே பதிந்திருந்தது.

'அப்படின்னா ஒரு ரிக்வஸ்ட்...' கிருஷ்ணசாமி விட்டபாடில்லை.

'என்ன?' என்பதை போல விழியை உயர்த்தினான்.

'இந்த நடனத்தை பற்றி ரெண்டு வார்த்தை மேடையில் பேசிடுங்களேன்...'

'நானா?' என்று கேட்டானே தவிர, 'மாட்டேன்...' என்று மறுக்கவில்லை.

கதக் நடனத்துக்கே உரிய வேகமான துள்ளல், சுற்றி சுழன்றாடும் பாங்கு, அவனை உண்மையிலேயே மெய் மறக்க வைத்தது.

கடைசி அயிட்டத்துக்கு முன், நரேன் மேடைக்கு அழைக்கப்பட்டான்.

நரேனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் செயலர்.

சென்னையில் வழக்கமாக, கலை மேடையில் தென்படாத முகம். அதனால், ரசிகர்கள் ஆவலுடன் அவன் பேசுவதை கேட்க தயாராயினர்.

'நான் ஒரு ரசிகன்; விமர்சகன் அல்ல... அறிவியல் தொழில். ஆனாலும், ஆட்டக் கலையில் ஆர்வமிக்கவன். இந்த நடனத்தை பார்த்த பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை. இந்த கலைஞர், தன் கால்களால் அழகான கவிதை எழுதியதைப் பார்த்தேன். கண்களால் காவியம் படைத்தார். அபிநயத்தால் புதினம் படைத்தார். அடேயப்பா... என்ன வேகம்; பாவனை!'

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், கரவொலி அதிகரித்துக் கொண்டே போனது.

'அபிநயத்தில் தளுக்கு, மினுக்கு, உல்லாசம், சல்லாபம், சரசம், சந்தோஷம், சாகசம், சவுக்கியம் அனைத்தும் பளிச்சிட்டன...' என்று பேசி முடித்தபோது, நாட்டிய தாரகையின் செக்கச் சிவந்த முகம் மேலும் சிவந்தது.

மேடையை விட்டு கீழே வந்தபோது, ஏதோ அவனே நாட்டியமாடியதைப் போல கை குலுக்கினர்.

நரேனுக்கு அது புதிய அனுபவம். அவன் பெற்றோருக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, வீட்டுக்கு திரும்பிய பிறகும் நீடித்தது.

சுடச்சுட இரவு உணவை பரிமாறிக் கொண்டே கேட்டாள் அம்மா.

'அவளை உனக்கு பிடிச்சிருக்கா நரேன்?' உருளைக்கிழங்கு பொடிமாசை சுவைப்பதை நிறுத்திவிட்டு, 'யாரை?' என்று அவசரமாக கேட்டான்.

'அதான், கவிதை, புதினம் என்று புகழ்ந்தாயே... உங்க ஊர்க்கார பொண்ணு!'

'போம்மா... கிண்டல் பண்ணாதே. சும்மா பேசச் சொன்னாங்கன்னு, பேசினேன்!'

'அப்படின்னா... நீ பேசினதெல்லாம் பொய்யா?' அம்மா வேண்டுமென்றே சீண்டினாள்.

'சே... சே! நான் பேசினது அத்தனையும் சத்தியம். என்ன ஒரு நளினம்!'

'அப்படியா...' என்று அப்பாவும் வியந்தார்.

'ஆமாப்பா... நாட்டிய வகையிலேயே எனக்கு பிடிச்சது, இந்த கதக் மட்டும் தான்!'

பேசிக் கொண்டிருக்கும் போது, டெலிபோன் ஒலித்தது.

அடுத்த முனையில், நாரதகான சபா கிருஷ்ணசாமி.

'உங்க பையனோட, மதுரிமாவின் அப்பா பேசணுமாம்...'

'இதோ...' என்று, டெலிபோனை மகன் பக்கம் நகர்த்தினார்.

'சார்... என்ன அருமையா பேசினீங்க. நன்றி சொல்லணுமாம் மதுரிமா...' பரவசமாகிப் போனான் நரேன்.

என்ன வசீகரமான குரல். நாலு வார்த்தை கச்சிதமாக பேசினாள்.

நரேனுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அடுத்த நாளே, அம்மா சுறுசுறுப்பானாள். அப்பாவை ஆட்டுவித்தாள். பெண் பார்க்கும் படலம். ஜாதகம் பார்க்காமல் நடந்தது.

நாட்டிய உடையில் பார்த்ததை விட, மிக நளினமாக இருந்தாள். எந்த உடை அணிந்தாலும், அவளது அழகின் பரிமாணங்கள் வெளிப்பட்டே தீரும், உடலின் கட்டாயம் போலும். சதிராடும் கண்கள். பொற்சிலையாய் அமர்ந்திருந்தாள். உதட்டில் புன்னகை ஆட்சி செலுத்தியது.

காதலுக்கும், தாம்பத்ய வேட்கைக்கும் அவள் உள்ளம் தயாராகிக் கொண்டிருந்ததால், உடலெங்கும் அலாதியான படபடப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அந்த அமைதி, பாசாங்கு இல்லை என்பதை உணர்ந்தான் நரேன். அவள், இன்ப உணர்ச்சிகளை வகைப்படுத்த முடியாமல் தவித்தாள்.

நல்லவேளை, அந்த நீண்ட மவுனம் நீடிக்கவில்லை.

'யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? அவங்க ரெண்டு பேரும் பேசட்டும்; முடிவு பண்ணட்டும்!'

அம்மா தடாலடியா அறிவித்தாள்.

மாடியில் நீண்ட ஹாலில், அவர்கள் இருவர் மட்டுமே. விசித்திரமாக மவுனம் ஆட்சி செலுத்தியது.

'உட்காரலாமா?' சிரித்துக் கொண்டே கேட்டான் நரேன்.

'ம்...' என்றாள்.

அப்போது தான் அவனை புதிதாக பார்த்தாள். அங்க இளமை ஆட்சி செலுத்தியது. இனிமை கரைபுரண்டு ஓடியது.

என்ன பேசினர். எவ்வளவு நேரம் பேசினர். யாரும் கடிகாரத்தை பார்க்கவில்லை. யாரும் அவர்களை தொல்லைப் படுத்தவில்லை. இணக்கம் இயல்பாக பளிச்சிட்டது.

அடுத்த நாளே, கல்யாண மண்டபம் தேடினர்; கிடைக்கவில்லை.

தாஜ் ஓட்டல் பெரிய அரங்கு கிடைத்தது. சுதா ரகுநாதன் பாடினார். சீனுவாஸ் மாண்டலின் வாசித்தார்.

நினைத்தாலே இனிக்கிறது. பத்து நாளில் கல்யாணம் முடிந்து, இதோ அமெரிக்கா புறப்பட்டு விட்டனர்.

ஏர்ஹோஸ்டஸ் மீண்டும் அவர்கள் அருகே வந்து, நரேன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக ஏதோ கிசுகிசுத்தாள்.

நரேன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. அவள் என்ன சொன்னாள் என்பதை அறிந்து கொள்ள, மதுரிமாவிற்கு ஆர்வம் இருந்தாலும், கேட்கவில்லை; அவனும் சொல்லவில்லை. விசுக்கென்று எழுந்தான்.

அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 — தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us