PUBLISHED ON : ஜூலை 28, 2019

ஞானிகள் பலர், அங்கே இங்கே என்று பிரிந்திருந்தாலும், அவர்கள் உள்ளம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கும். பிரச்னைகள் எல்லாம், அந்த உத்தமர்களுடன் இருக்கும்-, அடியார்களால் தான்.
ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிகர் எனும் ஞானி, சிவபெருமானுடைய திருவருளை முழுமையாக பெற்றவர்; ஆச்சரியப்படும் வகையிலான செயல்களை, சுலபமாக செய்யும் ஆற்றல் படைத்தவர். ஒருசமயம், திருச்செங்கோடு எனும் திருத்தலத்திற்குச் சென்றார்.
தேசிகர் எங்கு சென்றாலும், பல்லக்கில் தான் செல்வார். அவரை பல்லக்கில் சுமந்தபடி திருச்செங்கோடு, வீதியில் சென்று கொண்டிருந்தனர், அடியார்கள்.
அவர்கள் சென்ற வீதியில், கல்வி- கேள்விகளில் தலைசிறந்த, கேதாரி எனும், ஞானியும், அவரது சீடர்களும் தங்கியிருந்தனர்.
பல்லாக்கை மறித்த, கேதாரியின் சீடர்கள், 'எங்கள் குருநாதர் இருக்கும் இந்த வீதியில், நீங்கள் பல்லக்கில் செல்வது, அவரை அவமானப்படுத்துவது போலாகும். எனவே, இறங்கி, நடந்து செல்ல வேண்டும்; பல்லக்கில் போகக் கூடாது...' என்று கூறினர்.
தேசிகரின் சீடர்கள், மிக பொறுமையாக, 'எங்கள் குருநாதர், பல்லக்கில் செல்வது நியாயம் தான்...' என்றனர்.
கேதாரியின் சீடர்கள் சிரித்தனர்.
'ஓகோ... அவ்வளவு பெருமை நிறைந்தவரா, உங்கள் குருநாதர்; அப்படியானால், இதோ, இந்த கோவிலில் இருக்கும் கல் நந்தியானது, கடலையை தின்னும்படி சொல்லுங்கள் பார்க்கலாம்...' என்றனர்; அது மட்டுமல்ல, உடனடியாக ஒரு கூடை நிறைய கடலையை எடுத்து வந்து வைத்தனர்.
பல்லக்கை விட்டு இறங்கி, இறைவனை வணங்கினார், தேசிகர்.
'சிவபெருமானே... மதுரையில் நீ, எல்லாம் வல்ல சித்தராக வந்து, கல் யானையை, கரும்பு தின்னச் செய்தாயே... இதோ, இந்த கல் காளை - நந்தி, உயிருடன் எழுந்து, இவர்கள் முன்பாகவே இந்த கடலையை தின்னும்படியாக செய்து அருள்...' என, வேண்டினார்.
அதே விநாடியில், கல் காளையானது, ஆரவாரத்துடன் எழுந்து, கூடையிலிருந்த கடலை முழுவதையும் சில விநாடிகளில் தின்றது; அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கல் வடிவாக போய் படுத்துக் கொண்டது.
அனைவரும் வியந்தனர்; கேதாரியின் சீடர்களோ, வியப்பின் எல்லைக்கே போய் விட்டனர். சில விநாடிகளில், தங்கள் நிலையை எண்ணி, தேசிகரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டினர்; சில சீடர்கள், குருநாதரை தேடி ஓடினர்.
விபரம் அறிந்து விரைந்து வந்தார், கேதாரி. தேசிகரை வணங்கி, 'என் மாணவர்கள் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்...' என, வேண்டினார்.
'சீடர்கள், சிறுவர்கள்; அப்படித்தான் இருப்பர். அவர்களிடம் கோபித்துக் கொள்வதில் பயனில்லை; காலப்போக்கில் சரியாகி விடுவர். வருத்தம் ஒன்றுமில்லை...' என்ற தேசிகர், சுவாமியை வணங்கி, பயணத்தை தொடர்ந்தார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மகானை பிடிக்கும்; ஆத்மார்த்தமாக அவரை, வழிபாடும் செய்வோம். அதே சமயம், மற்றவர்கள் வழிபடும் மகானை இழிவாகப் பேசுவதோ, குற்றம்சாட்டிப் பேசுவதோ, எந்த வகையிலும் நியாயமில்லை.
மகான்களையும், ஞானிகளையும் எடை போட, நாம் யார்?
பி. என். பரசுராமன்
