PUBLISHED ON : ஜூலை 28, 2019

விஜய் அலறல்!
மெர்சல் மற்றும் சர்கார் படங்கள், அரசியல் சர்ச்சைகளை உருவாக்கியதால், தற்போது நடித்து வரும், பிகில் படமும், அவ்வாறு சிக்கி விடக்கூடாது என்று நினைக்கிறார், விஜய். அதனால், 'இந்த படத்தில், ஒரு காட்சியில், காவி வேட்டியுடன், கழுத்தில் சிலுவை டாலர் அணிந்து நடித்திருப்பதால், ஏதேனும் சர்ச்சை வர வாய்ப்புள்ளதா-...' என, சில சட்ட வல்லுனர்களுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியிருக்கிறார். காட்சியின் தன்மையை கேட்டறிந்த அவர்கள், 'யாரும் பிரச்னை செய்ய முடியாது...' என்று, 'கிரீன் சிக்னல்' கொடுத்த பிறகே, தைரியமாக நடித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
காஜல் அகர்வாலுக்கு எதிராக, தமன்னா!
கடைசி சுற்றில் இருக்கும், காஜல் அகர்வாலுக்கும், தமன்னாவுக்கும் இடையே, படங்களை கைப்பற்றுவதில் பெரிய அக்கப்போரே நடந்து வருகிறது. சமீபத்தில், தமன்னாவுக்கு செல்ல இருந்த, தெலுங்கு படத்தை, அவரை விட குறைவான சம்பளத்தில், தான் நடித்துத் தருவதாக சொல்லி, 'அபேஸ்' பண்ணி விட்டார், காஜல். இதனால் கடுப்பான, தமன்னா, 'அடுத்தபடியாக, காஜலுக்கு செல்ல இருக்கும் ஒரு படத்தை கைப்பற்றி, அவருக்கு, தக்க பதிலடி கொடுக்க வேண்டும்...' என்று, வரிந்து கட்டி திரிகிறார். உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை!
- எலீசா
கவர்ச்சிக்கு மாறிய, வேதிகா!
இதுவரை, கவர்ச்சியில் கோடு தாண்டாமல் நடித்து வந்த, வேதிகாவிற்கு, காஞ்சனா - 3 படத்திற்கு பின், சரியான படங்கள் இல்லை. அதனால், கவர்ச்சி கோதாவில் குதிக்க ஆயத்தமாகி விட்டவர், குட்டை பாவாடை அணிந்த, தன் புகைப்படங்களை சுற்றலில் விட்டிருக்கிறார். அதோடு, 'குடும்ப நடிப்புக்கு, 'குட் பை' சொல்லி, குட்டை பாவாடை நடிகையாக மாற, தயாராக இருக்கிறேன். அதனால், என்னை, 'கமர்ஷியல்' நடிகை ஆக்கினால், ரசிகர்களை குதுாகலப்படுத்துவதற்கான முழு உத்தரவாதம் தருகிறேன்...' என்று, இயக்குனர்களிடம் வாக்குறுதி அளித்து வருகிறார்.எறிந்த கல் விழுகிற மட்டும்!
- எலீசா
அடுத்த அவதாரம் எடுக்கும், இனியா!
வாகை சூடவா மற்றும் மவுனகுரு உட்பட, பல படங்களில் நடித்துள்ள, இனியா, தற்போது, மியா என்றொரு இசை, 'ஆல்பம்' ஒன்றை தயாரித்துள்ளார். 'சிறு வயதில் இருந்தே, மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தேன். நடன திறமையை வெளிப்படுத்த, சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால், இந்த, 'ஆல்பம்' தயாரித்துள்ளேன். அடுத்து, ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதற்காக, இளவட்ட இயக்குனர்களை அணுகி, தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். அந்த படத்தின் மூலம், கதையின் நாயகியாகப் போகிறேன்...' என்கிறார்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* ஓவியமான நடிகைக்கு, ஆண் நண்பர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில், அவர்களுடன், 'ஜாலி டூர்' அடிக்கும் நடிகை, 'மிட்நைட் பார்ட்டி'களில், சினிமாவை மிஞ்சும் குத்தாட்டம் போட்டு வருகிறார். அம்மணியின் இந்த பரவச ஆட்டம் பற்றிய தகவல், 'கோலிவுட்'டில் கசிந்ததை அடுத்து, அவருடன் படங்களில் நடிக்கும் சில நடிகர்களும், தாங்களும், 'மிட்நைட்' கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விண்ணப்பித்தனர். 'கண்டிப்பாக, சினிமாக்காரர்களுக்கு அனுமதி கிடையாது...' என்று, உரக்க சொல்லி, அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டாராம், நடிகை.
'ஏண்டா அம்பி... பக்கத்து வீட்டு, ஓவியா பொண்ணு, உன்னை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்கிறான்னு அழறியே... அவள பத்திதான் உனக்கு தெரியுமே... அவளுக்குன்னு ஒரு குழுவை சேர்த்துக்கிட்டு, அவங்களோடு மட்டும் தான் விளையாடுவா... நீ போய், உன் நண்பர்களுடன் விளையாடுடா, கண்ணா...' என்று, பேரனுக்கு ஆறுதல் சொன்னார், தாத்தா.
சினி துளிகள்!
* 90 எம்எல் படத்தில், 'மரண மட்ட' என்ற பாடலை பாடிய, ஓவியா, தொடர்ந்து சினிமாவில் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்ளோதான்!
