PUBLISHED ON : ஜூலை 28, 2019

'எந்த முகத்துடன், சுவேதாவைப் பார்க்கப் போகிறேன்; அவளை, ரொம்பத்தான் படுத்தி விட்டேன்...' மனது அடித்துக் கொண்டது, சுந்தரேசனுக்கு.
காலை, 5:00 மணிக்கு எழுந்ததும், அம்மாவிற்கு, 'சுப்ரபாதம்' ஒலிக்க வேண்டும்.
இரவு, சமையல் பாத்திரங்களை கழுவி, அம்மாவிற்கு, 'ஹார்லிக்ஸ்' கொடுத்து, அவனுக்கும் கொடுப்பாள். அதன் பின், அலுவலக கோப்புகளை பார்த்து, படுக்க நேரமாகி விடும். அப்படியும், காலை எழுந்து, 'சுப்ரபாதம்' போட்டு விட்டு, மறுபடியும் துாங்க முயல்வாள்; துாக்கமே வராது.
'என்ன... புரண்டு புரண்டு, படுக்கிற... துாக்கம் வரலைன்னா, எழுந்து, காபி போட்டு தர்றதுக்கென்ன...' என்று கேட்டு, எரிச்சலுடன், பின்புறத்தில் ஓங்கி தட்டியிருக்கிறான். அதற்கும், அவள் எதுவும் சொன்னதில்லை.
மதியம், அலுவலகத்தில், சாப்பாட்டு நேரம். பசியுடன், மதிய உணவு டப்பாவை திறந்து, ஒரு வாய் சாப்பிட்டு, துப்பி விட்டான்; ஒரே புளிப்பு.
'புளிக்குழம்பு வைக்கச் சொன்னா, இப்படி தான், 'புளீளீக்' குழம்பு வைக்கிறது... நீயே சாப்பிட்டுத் தொலை...' சாயங்காலம் அலுவலகத்திலிருந்து வந்ததும், டிபன் பாக்சை, அவள் முகத்தில் வீசியிருக்கிறான்.
இப்படி, பலநாள் பொறுத்துப் பார்த்தாள். திடீரென ஒரு நாள், பிறந்த வீட்டிற்கு கிளம்பி விட்டாள்; வரவே இல்லை.
'போறாம்மா அவ, பெரிய அதிகாரின்னு திமிரு... என்னை விட அதிக சம்பளம், கார்... எனக்கு, அதெல்லாம் கிடையாதே... ஆணவம், அகங்காரம்...' என்றான்.
அவன் கூட சேர்ந்து, சுவேதாவை அம்மா திட்டுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால், அமைதியாக இருந்தாள். உடல்நல குறைவால், படுக்கையில் விழுந்து விட்டாள். அம்மாவின் மவுனம், அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வீட்டு வேலைக்கு, ஆள் போட்டாலும், வசதிப்படவில்லை. அம்மாவின் உடல் தேற மறுத்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். தன் துயரை மறைத்து, தந்தையுமாகி, அவனை வளர்த்தவள்.
கவலை அடைந்த, சுந்தரேசன், டாக்டரை கேட்ட போது, 'எல்லா மருந்தும் கொடுத்தாச்சு... உடல் நோய்க்கு, மருந்து இருக்கு... ஆனா, மன நோய்க்கு... அம்மாவிடம் மனம் விட்டு பேசி, கண்டுபிடியுங்க...' என்றார்.
இரவு -
அம்மாவின் அறையில் இருந்து, ஏதோ சத்தம் வரவே, பார்த்து, திடுக்கிட்டான். கட்டிலில் உட்கர்ந்திருந்த அம்மா, 'வாம்மா, சுவேதா... உள்ள வா... ஏன் வெளியே நிக்கிறே...' என்று சுவரை பார்த்து, இரு கைகளையும் நீட்டி, கூப்பிட்டு கொண்டிருந்தாள்.
'அம்மா... என்னம்மா... யாரும் இல்லியே...' என்று, சுந்தரேசன் பதற, 'டேய், நல்லா பாருடா... அதோ, 'லேவண்டர்' கலர் புடவையில, சிரிச்சுட்டு நிக்கிறாடா, என் மருமக... நீயும் கூப்புடுடா...' என்றாள்.
சமாதானப்படுத்தி, படுக்க வைத்தான். அவனுக்கு புரிந்தது; அம்மாவிற்கு சித்த பிரமை.
டாக்டரிடம் சொன்னதற்கு, 'முடிந்தால், ஓரிரு நாட்கள் அம்மாவுடன், சுவேதா தங்கினால் நல்லது...' என்றார்.
பலத்த யோசனைக்கு பின், சுவேதாவை சந்திக்க சென்றான்.
அன்று சனிக்கிழமை -
வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள், சுவேதா.
இவனை பார்த்ததும், வரவேற்றாள். இவனுக்கு தான், குற்ற உணர்வு; பேச தயக்கமாக இருந்தது. அவனிடம் கேட்காமலே, 'சோடா மேக்கரில்' சோடா தயாரித்து, 'லெமன் சால்ட்' போட்டு எடுத்து வந்தாள். அவனுக்கு பிடித்த பானம்; அவனுள் இன்ப அதிர்ச்சி.
சுவரில், பெரிய படத்தில், சுவேதாவின் அம்மா-, அவனது மாமியார், பெரிய மாலையுடன் காட்சி அளித்தாள்.
அதிர்ந்தான்.
''சாரி... அத்தை?''
''போயிட்டாங்க... ரெண்டு மாசமாச்சு, உங்களுக்கு போன் போட்டேன் எடுக்கல,'' என்றாள்.
டம்ளரை எடுத்தபடியே, ''அத்தை எப்படி இருக்காங்க?'' என்றாள்.
தயங்கி தயங்கி, ''அம்மா விஷயமா தான் வந்திருக்கேன்,'' என்றான்.
''அப்ப... என் விஷயமா வரல?'' சிரித்தவாறே, சற்று தள்ளி அமர்ந்தாள்.
''இல்ல இல்ல... உன்னையும் பார்க்க ஒரு வாய்ப்பு,'' என்றான், அவசரமாக.
வாசலில் காத்திருந்த சிலரிடம் பேசி விட்டு, ''ஒரு அவசரமான வேலை வந்துவிட்டது... இன்னிக்கு, டிரைவர் வேற லீவு,'' என்றவள், படபடப்பாக பேசி, இரண்டு நிமிடத்தில் உடை மாற்றி கிளம்பி விட்டாள்.
மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், 'முக்கியமான விஷயம்... அதுவும், அம்மாவின் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் பேச வேண்டியிருக்கிறது... இப்படி திடீரென கிளம்பி விட்டாளே...' என்று வருத்தப்பட்டான்.
ஆயினும், ஒன்றும் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்தான். அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. நியாயமான விஷயத்துக்காக, கோபித்து வந்தவளை, போகாதே என்று சொல்ல சமாதானப்படுத்தினானா... அவள் போன் நம்பரையே, 'ப்ளாக்' செய்து விட்டானே...
எல்லாவற்றிற்கும் மேலாக, போன மாதம், 'உன்னை, ஏன் விவாகரத்து செய்யக் கூடாது?' என்று கேட்டு, வக்கீல், 'நோட்டீஸ்' அனுப்பி இருக்கிறான்.
'என்னை வரவேற்று, அமர வைத்ததே பெரிய விஷயம்...' என்று நினைத்து, அமைதியாக இருந்தான்.
கார் அருகில் போனவளிடம், ''சுவேதா... நான் வண்டி ஓட்டட்டுமா?''
ஒருமுறை அவனை பார்த்து விட்டு, ''தாங்க்யூ,'' என்று, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
தான் வந்த இரு சக்கர வாகனத்தை, காம்பவுண்டுக்குள் நிறுத்தி, அவசரம் அவசரமாக காரில் ஏறி ஓட்டினான். அவள், கோப்புகளை பார்த்தபடி வந்தாள். அலுவலகம் வந்ததும், கார் கதவைத் திறந்து விட்டான். காரை ஓரமாக நிறுத்தி, அவள் கையிலிருந்த கோப்புகளை வாங்கிக் கொண்டான். சிரித்தவாறே முன்னால் சென்றாள்.
அன்று விடுமுறை ஆனதால், அலுவலகம் வெறிச்சென்று இருந்தது.
''டில்லியில் இருந்து, உயர் அதிகாரி வர்றார்... சில விஷயங்களை விவாதிக்க வேண்டியிருக்கிறது... சில நாட்கள் இப்படித்தான் ஆகிவிடுகிறது,'' என்று கூறியபடியே அறைக்குள் நுழைந்தவள், 'ஏசி'யை உயிர்ப்பித்தாள். சில நிமிடங்களில், அதிகாரி வருவதாக போன் வந்தது. பரபரப்பானாள்.
சிறிது நேரத்தில், 'ஆ...' என்று தலையை பிடித்து சாய்ந்தாள்.
திடுக்கிட்ட சுந்தரேசன், அவள் தோளைத் தொட்டு, ''ஒரு நிமிடம் இரு... காபி வாங்கி வர்றேன்,'' என்றவன், அலமாரியில் இருந்த, 'ப்ளாஸ்கை' எடுத்து, போனான்.
அப்போது, அதிகாரி வந்திருந்தார்.
சுவேதாவுக்கு காபியை கொடுத்தவன், அவருக்கும் காபி கொடுத்தான்.
அவர், இவனிடம், ''தம்பி... ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி வா,'' என்றதும், இவளுக்கு, 'சுரீர்' என்று கோபம் வந்து, ''சார்... இவர், என் கணவர்,'' என்று, பதறி விட்டாள்.
''ஐயாம் சாரி,'' என்று, அவனிடம் கை குலுக்கினார். சில நிமிடங்களில், அவர் கிளம்பிப் போனார்.
அவளை வீட்டில் இறக்கி, தன் வண்டியை எடுத்து, வீடு வந்து சேர்ந்தான், சுந்தரேசன். அந்த அதிகாரியிடம் கோபம் கொப்பளிக்க, 'இவர், என் கணவர்...' என்று சொன்னது, மனதில் எதிரொலித்தபடி இருந்தது.
வீட்டினுள் நுழைந்ததும், மனம் ஏனோ சோர்வாக இருந்தது. அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சுவேதா எதுவுமே பேசவில்லையே!
மறுநாள் -
வேலையிலிருந்து வீடு திரும்பியவன், அம்மா அறையில் பேச்சுக்குரல் கேட்டு வியந்தான்; அது, சுவேதாவின் குரல்.
எட்டிப் பார்த்தான். கட்டிலில், அம்மாவுடன் நெருக்கமாக உட்கார்ந்திருந்தாள், சுவேதா. நெகிழ்ச்சியான குரலில் கண்கலங்கி, ''என்ன மன்னிச்சிருங்கம்மா... ஏதோ ஒரு வெறுப்பில இருந்திட்டேன். உங்கள வந்து பார்த்திருக்கணும். அவர் சொன்ன போது, மனசு உடைஞ்சு போச்சும்மா,'' என்று விம்மினாள்.
''நீதாம்மா, எங்கள மன்னிக்கணும்... உன்ன பார்க்கணும் கூட, இவனுக்கு தோணலையே,'' அவள் கையை பிடித்து கண்ணீர் உதிர்த்தாள், அம்மா.
''இப்போ, சந்தோஷ வானில் மிதந்துகிட்டு இருக்கேன்மா... அவர் மாறிட்டார்மா... 'ஏங்க, டிரைவர் வரலை... கொஞ்சம் வண்டி ஓட்டுறீங்களா... நான், கோப்புகளை பாத்துட்டே வர்றேன்...'னு, ஒருநாள் சொன்னதுக்கு, சாப்பாட்டு தட்டை விசிறி அடிச்சு, 'ஏண்டி, நான் உனக்கு டிரைவராடி...' என்று கத்தினார்.
''அவர்தான்மா எனக்கு, நேற்று வண்டியை ஓட்டினார். என் கோப்புகளை துாக்கிட்டு வந்தார். எனக்கு தலைவலி வந்தா, மயக்கம் வந்திரும்ன்னு தெரிஞ்சும், 'போடி... உனக்கு காபி போட்டுட்டு, எனக்கும் போட்டு எடுத்துட்டு வா...' என்று ஈவிரக்கமில்லாமல் சொல்லுவார்...
''நேத்து, எனக்கு தலைவலி வந்ததும், ஓடிப்போய் காபி வாங்கி வந்தார்மா... அதுவும், அவருக்குண்டான காபியை, என் உயரதிகாரிக்கு கொடுத்திட்டார்மா... ஒரு பொண்ணுக்கு, தலைவலி வந்தா, அவ அம்மா தைலம் தேய்த்து விட்டா, சரியாகிரும்... அவளுக்கு கல்யாணம் ஆன பின், அப்படி ஒரு ஆதரவையும், அன்பையும், புருஷன்கிட்டதானம்மா எதிர்பார்க்க முடியும்... அது தப்பாம்மா?
''அப்படி ஒரு அன்பையும், ஆதரவையும், மிக இயல்பாய் நேற்று அவர்ட்ட பார்த்தேம்மா... என் மன பாரமெல்லாம் இறங்கிடுச்சும்மா... இந்த பிரிவு, ஒரு விதத்துல நல்லதை நடத்தியிருக்கு... வெயிலின் அருமைய நிழலில் உணர்த்தியிருக்கு... இனிமே, அவரையும், உங்களையும் பிரிய மாட்டேன்மா,'' என்றாள்.
வெளியில் நின்று, பேச்சை கேட்டுக் கொண்டிருந்த, சுந்தரேசன் மனம் நெகிழ்ந்து, ஓசைப்படாமல், அவள் இருந்த திசை நோக்கி கும்பிடு போட்டான்.
மேஜை டிராயரில் இருந்த, விடுதலைப் பத்திரத்தை கிழித்துப் போட்டான். வேகமாக சமையலறைக்கு நுழைந்து, சுவேதாவிற்கு பிடித்த, 'லெமன் டீ' போட்டு வந்தான், அவளை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க!
கே. ஜி. ஜவஹர்
