தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலைவாணர் என்.எஸ்.கே. (12)

கலைவாணர் என்.எஸ்.கே. (12)

கலைவாணர் என்.எஸ்.கே. (12)


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படப்பிடிப்பிற்காக கோவை சென்றால், பிரபல தொழில் மேதை, ஜி.டி.நாயுடுவை சந்திக்காமல், சென்னை திரும்ப மாட்டார், கலைவாணர். நாயுடுவுக்கு, கலைவாணரின் கருத்துள்ள நகைச்சுவைகளில், மிகுந்த ஈடுபாடு உண்டு.

ஒருமுறை, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவிலிருந்து, நாயுடுவை சந்திக்க அவரது பங்களாவுக்கு சென்றிருந்தார், கலைவாணர். அந்நாளில், அவர் ஜிப்பாவும், கரை இல்லாத நாலு முழ வெள்ளை கதர் வேட்டி அணிவது வழக்கம்.

ஜி.டி.நாயுடு கலைவாணரை உற்று நோக்கி, 'கிருஷ்ணா... இனிமேல் நீ, வழவழப்பான, உயர்ந்த, 'கிளாஸ்கோ மல்' துணி தான் உடுத்த வேண்டும்...' என்றார்.

அப்படிச் சொன்னதுடன் நின்று விடாமல், தம்மிடமிருந்த உயர்ந்த, 'கிளாஸ்கோ மல்' துணிப் பீசைக் கொடுத்து, 'அடுத்த முறை என்னை பார்க்க வரும் போது, இந்த துணியில், டிரஸ் தைத்து அணிந்து வர வேண்டும்...' என்று அன்பு கட்டளையிட்டார்.

'ஆகட்டும்...' என்று சொல்லி, காரில் கிளம்பினார் கிருஷ்ணன்.

சென்னை வந்ததும், கலைவாணரின் பயணப் பொருட்களோடு, நாயுடு கொடுத்த, மல் துணிப் பீசும் காரிலிருந்து இறங்கியது. கதர் துணியை விரும்பி அணியும் கலைவாணர், தங்களுக்காகவே மல் துணியை, வாங்கி வந்துள்ளதாக எண்ணினர், அவரது குடும்பத்துப் பெண்கள். எனவே, அந்த மல் துணியை, தங்கள் விருப்பம்போல், ஜாக்கெட் தைத்து கொண்டனர். செய்தி அறிந்ததும், அவர்களின் தேவைக்கு அந்தத் துணி பயன்பட்டதை கருதி, அமைதியாகி விட்டார், கலைவாணர்.

ஒரு சில நாட்களுக்கு பின், மீண்டும் படத்தில் நடிப்பதற்காக கோவை சென்றார், கலைவாணர். நாயுடுவை சந்திக்க, தன் வழக்கமான உடையில் சென்ற போது, முகம் சுண்ட, பேச்சிற்கு நடுவே, 'ஆமாம் கிருஷ்ணா... நான் கொடுத்த மல் துணியை என்ன செய்தாய்...' என்று கேட்ட நாயுடு, அவர் பதில் சொல்லுமுன், 'சரி சரி.... உன் சமாதானம் எதுவும் தேவையில்லை...' என்றார்.

அன்று, கலைவாணர், நாயுடுவின் பங்களாவில் தங்கி விட்டு, சென்னைக்கு கிளம்பிய போது, கார் டிக்கியில், ஒரு பீஸ் கிளாஸ்கோ மல் துணியை ஏற்றச் சொல்லி, 'இதையாவது, உனக்காக பயன்படுத்திக் கொள்...' என்றார், அத்தொழில் மேதை.

'ஆகட்டும்...' என்று தலையை அசைத்தார் கலை மேதை.

கோவையிலிருந்து, கலைவாணர் வருகிறார் என்றதும் உற்சாகம் அடைந்தனர், அவரது வீட்டுப் பெண்கள். காரணம், சென்ற முறை போல், இம்முறையும் ஏதாவது வரும் என்று! அதேபோன்று, கார் டிக்கியை, டிரைவர் திறந்ததும், மல் பீஸ் தென்பட, ஆவலோடு, அதை அள்ளி, வீட்டிற்குள் ஓடினர். வழக்கம் போல் சும்மா இருந்து விட்டார் கலைவாணர்.

மூன்றாவது முறையாக, ஜி.டி.நாயுடுவை, சந்திக்க நேர்ந்த போது, அதே வழக்கமான கதர் ஆடையில் கலைவாணர் இருப்பதைக் கண்டு, வெறுத்துப் போனார், நாயுடு.

சிறிது நேரம், இருவரும் அளவளாவிய பின், கலைவாணர் சென்னைக்கு புறப்படப் போகிறார் என்றதும், 'கொஞ்சம் இரு கிருஷ்ணா...' என்று நாயுடு எழுந்தபோது, சட்டென்று கலைவாணர், 'மல் பீஸ் தானே கொண்டு வரச் சொல்ல போறீங்க... வேணாம்; ஏற்கனவே நீங்க கொடுத்த, மல் பீஸ்களினால், வீடு, 'ஹவுஸ் புல்'லாகி விட்டது. அதை நான் பயன்படுத்துவதற்குள் வீட்டில் உள்ள பெண்கள் முந்தி, அந்த மல்லை, மல்லுக்கு நின்று, தையற்காரரிடம், என்னவெல்லாமோ டிசைன்களின் ஜாக்கெட் தைத்து, வீடு முழுவதும், நிரப்பி வைத்துள்ளனர். இனி, நீங்க கொடுக்க போகும் மல் பீசை வைக்க, வீட்டில் இடமில்லை...' என்று சொல்லி, நாயுடுவை, உட்கார வைத்தார்.

அதை கேட்டு, 'கலகல'வென்று சிரித்தார் ஜி.டி. நாயுடு.

இந்த முறை கோவையிலிருந்து கலைவாணர் வந்ததும், கார் டிக்கியை திறந்துப் பார்த்த, அவரது குடும்பம் ஏமாந்தது.

வெளியூர் போவதென்றால், பெரும்பாலும், தம் காரில் பயணமாவது கலைவாணரது வழக்கம்.

பயணத்தின் போது, கண்களை மூடி, உறங்குவது போல் தோற்றமளித்தாலும், தூங்குகிறாரா, ஆழ்ந்த சிந்தனையில் உள்ளாரா என்று கண்டுபிடிக்க முடியாது. இரவு நேரங்களில் பயணிக்கும் போது, தன் டிரைவரிடம் காரை சீரான வேகத்துடன், ஓட்டச் சொல்வார்.

அப்படித்தான், ஒருநாள் இரவு, சென்னையிலிருந்து, வெளியூருக்கு கலைவாணரும், மதுரமும் போக வேண்டியிருந்தது. அன்று, வழக்கமாக கார் ஓட்டும் டிரைவரால் வர இயலவில்லை. எனவே, வேறு ஒருவர், காரை ஓட்டிச் சென்றார். அவர், கண்மண் தெரியாமல், காரை செலுத்த, 'மெல்லக் காரை ஓட்டு...' என்று எச்சரித்தார், கலைவாணர்.

அவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், தமக்கு, பல ஆண்டுகள் கார் ஓட்டிய சர்வீஸ் உண்டு என்று சொல்லி, அதே வேகத்தில் காரை செலுத்தினார் டிரைவர்.

அப்போது, நல்ல இருட்டு; நடு வழியில் காரை நிறுத்த சொன்ன கலைவாணர், காரிலிருந்து இறங்கியதுடன், மதுரத்தையும், இறங்கச் சொன்னார். அவர் திகைப்போடு இறங்கியதும், டிரைவரிடம், 'உனக்கு வேகமாக தானே போகணும்... உன் இஷ்டம் போல், ஓட்டிக் கொண்டு போ; நாங்க பின்னால் மெதுவா நடந்து வர்றோம்...' என்றார்.

டிரைவர் சிறிது விழித்து, 'இல்லே... உங்களை பாக்க, ரொம்பப் பேர் காத்துக்கிட்டிருப்பாங்களேன்னு நினைச்சு, வேகமா ஓட்டினேன்...' என்றார், தயக்கத்துடன்!

'அது சரி... நீ இந்த வேகத்துல போனா, அவங்க எல்லாம் நம்மை பாக்க, இங்கேயே வந்துடுவாங்க போலிருக்கே... அப்படி ஆகி விடக் கூடாதுன்னு தான் சொல்றேன்...' என்றார் கிருஷ்ணன்.

அதற்கு பின், நிதானமாக காரை ஓட்டி சென்றார், டிரைவர்.

ஒரு சமயம், மதுரத்திற்கு, படத்தில், கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதை அவர், கலைவாணரிடம் கூறி, 'உங்க கூட நகைச்சுவை ஜோடியாக நடிப்பதை விட, நான், கதாநாயகியாகவே நடிக்கலாம்ன்னு சிலர் சொல்றாங்க; அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க...' என்று கேட்டார் மதுரம்.

உடனே, பெருந்தன்மையோடு, 'அதற்கென்ன... கதாநாயகியாக நடி; எனக்கு ஆட்சேபம் இல்ல...' என்றார் சிரித்தவாறு!

மாருத்பூமி என்ற தமிழ் படத்தில் மதுரத்திற்கு கதாநாயகி வேடம் கிடைத்தது. அதில், ஜோடி இன்றி தனியாக நடித்தார், கலைவாணர்.

எச்.எம்.ரெட்டி இயக்கிய அப்படத்தில், முக்கிய வேடத்தில் தோன்றினார், டி.எஸ்.சந்தானம். ஆனால், மாருத்பூமி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. காரணம், கலைவாணரும், மதுரமும் ஜோடி சேராமல், வேறுபட்ட வேடங்களில் நடித்ததாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் படத்தில் இடம் பெறாததாலும், படம் ஓடவில்லை.

படம் வெளிவந்தவுடன், அதை முதலில் உணர்ந்தவர் மதுரம் தான். 'இனி எப்போதும் கதாநாயகியாக நடிக்க மாட்டேன்; மக்கள், நம் இருவரையும் நகைச்சுவைக் காட்சிகளில் பார்ப்பதையே விரும்புகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன்...' என்றார் தழுதழுத்த குரலில்!

தொடரும்.

நன்றி:

வ.உ.சி., நூலகம்

பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us