தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க!

நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் இது...

சென்னை பேருந்து நிறுத்தத்தில், இரவு, 11:45 மணிக்கு, 'நைட் சர்வீஸ்' பஸ்சுக்காக, காத்திருந்திருக்கிறார் நண்பர். அருகில், யாரும் இல்லை.

அப்போது, வறுமையான தோற்றத்தில் இருந்த வயதான பெரியவர் ஒருவர், அவரிடம், 'ஐயா... ஒரு சின்ன உபகாரம் உங்களால ஆகணும்...' என்றிருக்கிறார். நண்பர் விவரம் கேட்க, 'ஐயா... என் மகன் கோபக்காரன்; அவன் குடிக்கிறத கண்டிச்சதால, என்னை, வீட்டை விட்டு துரத்திட்டான். ரெண்டு நாளா இந்த பிளாட்பாரத்துல தான் தங்கி இருக்கேன்...' என்று கூற, நண்பரோ, 'சாப்பாட்டுக்கு பணம் தர்றேன்; வாங்கிக்கங்க...' என்று பர்சை திறந்திருக்கிறார்.

உடனே, அப்பெரியவர், 'பணமெல்லாம் வேணாங்க... என் மகன் தான் முரடன்; குடிகாரன். ஆனா, என் மருமக, தங்கமானவ. ரெண்டு நாளைக்கு முன் வீட்டில் இருந்து வரும் போது கூட, 'மாமா... வெள்ளிக் கிழமை உங்க மகன் வியாபார விஷயமா கோயம்புத்தூர் போறதா சொன்னாரு. அதனால, அன்னைக்கு ராத்திரி, 10:00 மணிக்கு மேல எனக்கு போன் செய்யுங்க; அவர் கோயம்புத்தூர் கிளம்பிட்டார்ன்னா சொல்றேன்; வீட்டுக்கு வந்திடுங்க. அப்புறமா, உங்க மகன் வந்ததும் பக்குவமா பேசி, சமாதானம் செய்து வெச்சிடறேன்'னு சொல்லியிருக்கா. இது, என் மருமகளோட மொபைல் நம்பர். இதற்கு போன் செய்து, என்கிட்ட கொடுத்தீங்கன்னா, மகன் ஊருக்கு போனது தெரிஞ்சிக்கிட்டு, வீட்டுக்கு போயிடுவேன்...' என்று கூறியுள்ளார்.

நண்பரும் அந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள, எதிர்முனையில், தூங்க கலக்கத்தில், 'ஹலோ... யாருங்க இந்நேரத்துல...' என்று கேட்டிருக்கிறாள், ஒரு பெண். நண்பரும், 'உங்க மாமா தாம்மா இந்த நம்பரை கொடுத்து பேசச் சொன்னார்; பக்கத்துல தான் இருக்கார் கொடுக்கிறேன்...' என்று கூறி, திரும்ப, அந்த பெரியவரைக் காணோம்.

உடனே நண்பர், 'இங்க தாம்மா உங்க மாமா இருந்தார்; அதுக்குள்ள காணாமல்...' என்று முடிப்பதற்குள், 'யோவ்... நடுராத்திரியில ஒரு பொம்பளைக்கு போன் செய்றீயே... உன் மனசுல என்னய்யா நினைச்சிக்கிட்டிருக்கே, கொஞ்சம் இரு...' என்று போனை, 'கட்' செய்திருக்கிறாள்.

அப்போதும் கூட விபரீதமாய் யோசிக்காமல் அப்பெரியவரை தேடியுள்ளார், நண்பர். அதற்குள், போன் வரவே, எடுத்துள்ளார். முரட்டுக் குரலில் ஒரு ஆண், நாராசர வார்த்தைகளில், 'தனியா இருக்கற பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமாடா... இப்ப நீ எங்கே இருக்க சொல்லு... கூட்டமா வந்து உன்னை கொத்திட்டு போறோம்...' என்றிருக்கிறான். அப்போது தான், அபாயத்தை உணர்ந்து, 'லைனை' துண்டித்திருக்கிறார், நண்பர்.

ஆனால், திரும்பவும் ஒரு போன் கால்... 'ஏண்டா மவனே...' என்று ஆரம்பித்து, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை பிரயோகங்கள். 'நீ இருக்கற இடத்தை நெருங்கிட்டோம்; உன்னை மாதிரி ஆளுங்கள சும்மா விட்டா, குடும்ப பொண்ணுங்க வீட்ல நிம்மதியா தூங்க முடியாது...' என்று மிரட்டியுள்ளான். அப்போது தான், நண்பருக்கு, வயதான பெரியவரை பகடைக்காயாக பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பல் ஒன்று, 'நள்ளிரவு டார்கெட்'டுடன் அலைவது புரிந்துள்ளது. உடனே, மொபைலை, 'ஆப்' செய்து, ஆட்டோவில் ஏறி, வீடு வந்து சேர்ந்துள்ளார்.

மறுநாள், இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நம்பர்களில் பேசியவர்களை அழைத்து, கடுமையாக எச்சரித்த பின் தான், நண்பருக்கு பதற்றம் நீங்கியுள்ளது. 'அது, பெண்களை மையமாக வைத்து பணம் பறிக்கும் கும்பல்...' என்பதைக் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி, நண்பரை அனுப்பி வைத்திருக்கின்றனர், போலீசார். இப்படியெல்லாம் ஏமாற்ற, 'ரூம்' போட்டு யோசித்திருப்பரோ!

கே.பாலசுந்தரம்,சென்னை.

குறையாத செல்வம்!

இரண்டு ஆண்டுகளுக்கு பின், நண்பர் ஒருவரை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் வீட்டில், எப்போதும் ஒரு பணியாள் இருப்பர். ஆனால், சில காலத்துக்கு பின், அவரை மாற்றி விடுவார். இம்முறை சென்ற போதும், வேறொருவர் இருந்தார். அதனால், 'அடிக்கடி ஏன் பணியாளர்களை மாற்றுகிறீர்கள்?' எனக் கேட்டேன்.

அதற்கு, 'படிக்க ஆர்வம் இருந்தும் வசதியின்றி இருப்பவரை மட்டும் தான், நான் வேலைக்கு தேர்ந்தெடுக்கிறேன். அவர்கள் மாலை நேர வகுப்புக்கோ அல்லது தபால் வழியிலோ படிக்க விரும்பினால், அதற்கு தேவையான கட்டணத்தை கட்டி, படிக்க வைப்பேன். சிலர் பட்டம் வாங்கிய பின்னரும், நன்றிக் கடன் தீர்க்க, தொடர்ந்து என்னிடம் வேலை செய்வதாக சொல்வர். அவர்களோட எதிர்காலம் கருதி, வலுக்கட்டாயமாக அனுப்பி விடுவேன்.

'என்னிடம் பணி செய்தபடியே படித்த அனைவரும், இப்போது நல்ல வேலையில் இருக்கின்றனர். பத்தாம் வகுப்பு தகுதியோடு என்னிடம் வேலைக்கு சேர்ந்த ஒருவர், இப்போது, ஐ.டி., துறையில் நல்ல வேலையில் இருக்கிறார். தேவைப்படுவோருக்கு கல்விச் செல்வத்தை கொடுத்தால், அது அவர்கள் தலைமுறையையே தலைநிமிர வைத்து விடும்...' என்றார். அவரை பாராட்டி விட்டு வந்தேன்.

— எஸ்.ராமன், சென்னை.

இப்படியும் சில பெற்றோர்!

எங்களுக்கு சொந்தமான காம்பவுண்டில், ஒரு வீடு காலியாக இருப்பதை அறிந்து, வாடகைக்கு வீடு கேட்டு வந்தனர், ஒரு தம்பதியர். வந்தவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்ததுடன், எங்களது குடும்பத்தை பற்றி விசாரித்தனர்.

அப்பெண்ணிடம், 'இதென்னம்மா புதுசா இருக்கு... வீட்டின் உரிமையாளராகிய நாங்க தான், உங்க குடும்பம், குழந்தைகள், வேலையை பற்றியெல்லாம் கேட்கணும்; நீங்க என்னடான்னா, எங்க குடும்பத்தை பற்றி கேட்குறீங்க...' என்றேன்.

அதற்கு அந்த பெண், 'தப்பா நினைச்சுக்காதீங்கம்மா... என் வீட்டுக்காரர் மாதத்தில் பாதி நாட்கள் வெளியூரில் இருப்பார்; நானும், தனியார் நிறுவனத்தில் வேலை பாக்குறேன். எங்களுக்கு ஆண், பெண் என, ரெண்டு குழந்தைக. இருவருமே, மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாங்க. நான் வர தாமதம் ஆனாலும், என் பிள்ளைகளுக்கு, பேச்சுத் துணைக்கு, அவர்கள் வயதை ஒத்தவர்கள் இருந்தால் போதும். உங்கள் வீட்டில், கல்லூரி படிக்கும் பெண் இருக்கிறாள் என்பதால், எங்களுக்கு உங்க வீடு பிடித்து விட்டது...' என்று கூறி, முன்பணம் தந்து விட்டு சென்றனர்.

வாடகைக்கு குடியேறுவோர், வீட்டின் வசதி, தண்ணீர், மின்சாரம், பஸ் வசதி மற்றும் கடைத்தெரு போன்றவற்றை விசாரிப்பது வழக்கம். ஆனால், புதிதாக வந்த குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகளின் மனம் திசை மாறி விடாமல், சரியான துணை, தகுந்த நட்பு பற்றி அக்கறை கொண்டது, எங்களுக்கு புதுமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் தெரிந்தது.

எஸ்.திலகவதி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us