தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலைவாணர் என்.எஸ்.கே. (19)

கலைவாணர் என்.எஸ்.கே. (19)

கலைவாணர் என்.எஸ்.கே. (19)


PUBLISHED ON : ஜன 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலைவாணரும், மதுரமும் திருவாவடுதுறையில் உள்ள, ராஜரத்தினம் பிள்ளை, வீட்டிற்கு வந்த போது, தனிமையில் நாதஸ்வரம் வாசித்தபடி இருந்தார், ராஜரத்தினம்.

'நல்ல சந்தர்ப்பத்தில் தான் வந்திருக்கேன்...' என்று சொல்லியபடி வீட்டுக்குள் நுழைந்தார் கலைவாணர்.

அவரைக் கண்டதும் வணங்கினார் நாதஸ்வர மேதை. தம் இல்லத்திற்கு வருகை தந்த கலைவாணரின் பெருந்தன்மையை நினைத்து, உள்ளம் குளிர்ந்தார். மகிழ்ச்சியோடு, 'ஜிலுஜிலு'வென்று சில அருமையான ராகங்களை, நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டினார்; தன்னை மறந்து, மணிக்கணக்காக உட்கார்ந்திருந்து ரசித்தார் கலைவாணர்.

'இதற்கு முன், இப்படியொரு இசையை கேட்டதில்லை; நீங்கள் மகா மேதை. உங்கள் புகழ், உலகெலாம் பரவி, நாதஸ்வரச் சக்கரவர்த்தியாக விளங்கப் போகிறீர்கள்...' என்று உளமார, பாராட்டினார் கலைவாணர். பின், தம் இடுப்பிலிருந்து இரண்டு சவரன் தங்க நகையை எடுத்து, அவருக்கு பரிசளித்தார். அன்று, கலைவாணர் சொன்ன வாக்கு பலித்தது;

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, உலகப் புகழ் பெற்றார்.

தனியொரு இசைக் கருவியான நாதஸ்வரத்திற்கு, அவரது ஈடு இணையற்ற வாசிப்பால், வையகச் சிறப்பு கிடைத்தது.

அன்று, திருவாவடுதுறையிலிருந்து, மனநிறைவோடு, சென்னைக்குக் கிளம்பியபோது, தம் ஆசையை, விளையாட்டாக ராஜரத்தினம் பிள்ளையிடம் தெரிவித்தார் கலைவாணர்.

'எனக்கு கூட நாதஸ்வரம் கற்றுக் கொள்ள ஆசை; ஆனால், ஏனோ இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை...' என்றார். அதைக் கேட்டதும், முகமலர்ச்சியோடு, எழுந்து உள்ளே சென்று, ஒரு நாதஸ்வரத்தைக் கொண்டு வந்து, அவரிடம் கொடுத்தார் ராஜரத்தினம் பிள்ளை; அதை ஏற்க தயங்கினார், கலைவாணர். ஆனால், 'பிரியத்தோடு கொடுக்கிறார்; வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தான், உங்களுடைய ஆசையை, அவரிடம் வலிய சொன்னீர்கள். அதனால், அவர் நாதஸ்வரம் கொடுத்திருக்கிறார்...' என்று மதுரம் சொல்லவே, அதை விரும்பி பெற்றுக் கொண்டார் கலைவாணர்.

காரோடு, நாதஸ்வரமும் சென்னைக்கு பயணமானது. நடுவழியில், ஆசையோடு அதை எடுத்து, வாயில் வைத்து, 'பீ... பீ...' என்று ஊதினார். அதைக் கண்டு சிரித்த மதுரம், 'நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் ஆசை, திருவாவடுதுறை எல்லையிலேயே ஆரம்பமாகி விட்டதே...' என்றார்.

ஆனால், ஆசைப்பட்டது போல், கலைவாணருக்கு நாதஸ்வரம் வாசிக்க வரவில்லை. இருந்தாலும், அந்த நாதஸ்வரம், வேறு ஒரு நல்ல காரியத்திற்கு பயன்பட்டது. அது, வீட்டில், யாராவது நீண்ட நேரம் தூங்கினால், அவர்களின் காதுகளுக்கருகே, நாதஸ்வரத்தை ஊதுவார் கலைவாணர்; அவர்கள் விழித்து, எழுந்து, விழுந்தடித்து ஓடுவர்.

நாதஸ்வரம், புல்லாங்குழல் இசைக் கலைஞர்களிடம் ஈடுபாடு ஏற்பட்டது போலவே, கிளாரினெட் வித்வான், ஏ.கே.சி.நடராஜனிடமும், கலைவாணருக்கு அளவிலா பிரியம் உண்டாயிற்று.

ஒருநாள், சென்னை வானொலியில், கிளாரினெட் இசையை கேட்டவர், அந்த இசையில் உள்ளத்தை பறிகொடுத்து, உடனே, சென்னை வானொலி நிலையத்தாருக்கு போன் செய்து, வாசித்தவரின் பெயர் மற்றும் விலாசத்தை தெரிந்து கொண்டார். பின், தன் காரை அனுப்பி, ஏ.கே.சி.நடராஜனை, தன் இல்லத்திற்கு அழைத்து வரச் சொன்னார்.

ஏ.கே.சி., வந்தவுடன், அவரை அன்போடு வரவேற்று, 'சற்று முன், சென்னை வானொலியில், நீங்கள் வாசித்த கிளாரினெட் இசையைக் கேட்டேன்; மிக சிறப்பாக இருந்தது. கர்நாடக சங்கீதத்தை எவ்வளவு அருமையாக வாசித்துள்ளீர்கள்... அப்படியே சொக்கிப் போனேன்...' என்று புகழ்ந்து, ஒரு சவரன் தங்க நகையை பரிசாக அளித்தார், கலைவாணர். அவரது கலை உள்ளத்தையும், திறமையுள்ளோரை தேடிச் சென்று பாராட்டி, பரிசளிக்கும் கொடைத் தன்மையையும் கண்டு, மெய்மறந்து நின்றார், ஏ.கே.சி.,

அச்சந்திப்பிற்குப் பின், கலைவாணரின் கலா சாம்ராஜ்யத்தில், ஆஸ்தான வித்வானானார், ஏ.கே.சி.,

படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள, சென்னையிலிருந்து சேலம் மற்றும் கோவைக்கு செல்லும் போது, பெரும்பாலும் தன் காரில் தான் பயணம் செய்வார், கலைவாணர்.

நடிகர் குழுவோடு அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது, 'படங்களுக்குரிய நகைச்சுவை காட்சிகளை எப்படி அமைக்கலாம்...' என்பது பற்றிய ஆலோசனைகளை, செய்து கொண்டே போவார். பெரும்பாலும், அப்பயணங்களில், அவரது நாடக குருவான, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையும் இடம் பெற்றிருப்பார். முன் சீட்டில் கலைவாணரின் அருகில் அமர்ந்து, நகைச்சுவைக் காட்சிகளுக்கான நல்ல பல கருத்துகளை தெரிவிப்பார்.

ஒரு சமயம், அருந்ததி படத்தில் நடிக்க கலைவாணரும், யதார்த்தமும் சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் கிளம்பினர். கார், செங்கல்பட்டை நெருங்கிய போது, வழியில் ரயில்வே கேட்டுக்கருகே, காரை நிறுத்தினார், டிரைவர். காரிலிருந்து இறங்கிய பொன்னுச்சாமி பிள்ளை கேட் திறக்கப்படும் வரை, சிறிது நேரம் உலாவினார். பின், கேட் திறக்கப்பட்டதும், காரில் ஏறி அமர்ந்தவர், கதவை ஓங்கிச் சாத்தி மூடிய போது, அவரது கை கட்டை விரல், காரின் கதவிடுக்கில் சிக்கி, நசுங்கிப் போகவே, வலி தாங்காமல் அலறினார். ரத்தம் பீறிடவே, அருகில் இருந்த கலைவாணர், தன் மேல் துண்டால், கைவிரலை அழுத்திப் பிடித்தார்.

சில நிமிடங்களில், ரத்தப் பெருக்கு நின்று விட்டாலும், நசுங்கப்பட்ட இடத்தில், வலி இருக்கவே, உற்சாகம் குறைந்து காணப்பட்டார், யதார்த்தம்.

உடனே, அருகில் உள்ள டாக்டரிடம், அவரை அழைத்துச் சென்று, விரலுக்கு மருந்திட்டு, கட்டுப் போடப்பட்டது. பின், காரில் ஏறி அமர்ந்ததும், டிரைவரிடம் கலைவாணர், 'காரை சேலத்திற்கு ஓட்ட வேண்டாம்; சென்னைக்கு போ...' என்றார்.

அப்படி அவர் அறிவிப்பார் என்று, டிரைவர் எதிர்பார்க்கவில்லை. பார்க்கப் போனால், அது, சிறிய காயம் தான். அதற்கும் டாக்டரிடம் காண்பித்து, மருந்தும் போட்டாகி விட்டது. இந்நிலையில் எதற்காக, அருந்ததி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல், சென்னைக்கு திரும்பச் சொல்கிறார் என்று நினைத்தார் டிரைவர்.

யதார்த்தமும், தன் வலியைப் பொறுத்து, 'இந்தச் சிறிய காயத்திற்காக, பயணத்தை நிறுத்த வேண்டாம்...' என்றார்.

கலைவாணரோ, 'நான் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். நாம் இருவரும் காரில் பயணம் புறப்பட்டதன் நோக்கம், படங்களில் எப்படி நகைச்சுவை காட்சிகளை புகுத்தலாம் என்பதைப் பற்றி பேசியபடி போவதற்காகத் தான். அந்த உற்சாகத்தை, இந்த காயம் கெடுத்து விட்டது. என்ன தான் நீங்கள் உற்சாகத்தை வரவழைத்தாலும், ஒரிஜினல் உற்சாகமாக இருக்காது. எனக்காக, நீங்கள் வலியை பொறுத்து, நான் கேட்பதற்காக பதில் சொல்வீர்கள். அதையெல்லாம் எண்ணி தான், சேலம் பயணத்தை நிறுத்தி, சென்னைக்கு திருப்பச் சொல்றேன்...' என்றார்.

மறு பேச்சுப் பேசாமல், சென்னைக்கு காரை செலுத்தினார், டிரைவர்.

ஒருமுறை, கோவையிலிருந்து, கலைவாணரும், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையும் ரயிலில் சென்னை திரும்பினர். இதை எப்படியோ அறிந்த ரசிகப் பெருமக்கள், கலைவாணரைக் காண ஈரோடு ரயில் நிலையத்தில் ஆவலோடு காத்திருந்தனர்.

ரயில், ஸ்டேஷனில் நின்றதும், ஏராளமான மக்கள், கலைவாணரை காண, ஓடி வந்தனர். உடனே, கலைவாணர், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்த ஜன்னல்களை திறந்து விடச் சொன்னார். மக்கள் அவருக்கு கை கொடுத்தும், 'ஆட்டோகிராப்'பும் வாங்கினர்; மலர் மாலைகளை சூட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இவ்வளவையும், அவரோடு பயணம் செய்த ஆங்கிலேயேர் ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்து, அருகிலிருந்த பொன்னுசாமி பிள்ளையிடம், 'இவர் யார்?' என்று கேட்க, பொன்னுச்சாமி பிள்ளையும், 'இவர், இண்டியன் சார்லி சாப்ளின்...' என்றார்.

அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆங்கிலேயர், நடிகர் ஒருவருக்கு தமிழக மக்கள் கொடுக்கும் மரியாதையைக் கண்டு, வியப்புற்றார்.

கூடவே, தம்மிடமிருந்த சிறு நோட்டு புத்தகத்தில், கலைவாணரிடம், 'ஆட்டோகிராப்' பெற்றுக் கொண்டார். பின், தன் கைப்பெட்டிக்குள் இருந்து, தானும், தன் மனைவியும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை எடுத்து, அதற்கடியில் தன் கையெழுத்தை போட்டு, கலைவாணரிடம் கொடுத்தார்.

ஆங்கிலேயர் தந்த புகைப்படத்தை, அன்போடு பெற்றுக் கொண்டார், கலைவாணர். பின், சென்னை வரும் வரை, இருவரும், 'கலகல'வென்று பேசியபடி வந்தனர். இருவரின் கருத்துகளையும், மொழிபெயர்த்துச் சொல்ல, அதே ரயிலில் மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் இருந்தார்.

தொடரும்.

நன்றி: வ.உ.சி., நூலகம்

பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us