தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று, நம் நாட்டில், மருத்துவத்துறையின் பகல் கொள்ளை பற்றி அறியாதவர் இருக்க முடியாது; ஏனென்றால், டாக்டரை அணுகாத மக்களே இல்லை என்ற நிலை, உருவாகி விட்டது.

இரு நண்பர்கள் மூலம், மருத்துவத்துறையில் நடக்கும், பகல் கொள்ளையின், வேறு பல கோணங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. 'பிரம் த ஹார்சஸ் மவுத்' என்பது போல, மருத்துவ நண்பர் ஒருவரே, இதைக் கூறியது, அதிர்ச்சி அடைய வைத்தது.

லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில், 'கன்சல்டன்ட்' பதவியில் இருக்கிறார், அந்த டாக்டர் நண்பர். நம்மூர்காரர் தான் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டன் சென்று, எப்.ஆர்.சி.எஸ்., பட்டம் இரண்டு பெற்று, தற்போதைய தகுதியை அடைந்துள்ளார்.

இந்திய டாக்டர்கள், லண்டனில் எப்.ஆர். சி.எஸ்., படித்து, பட்டம் பெற்றிருந்தாலும், அவர்களால் மருத்துவமனையில், 'ரிஜிஸ்தார்' என்ற வரையிலுமே, பதவி உயர்வு அடைய முடியும். 'கன்சல்டன்ட்' என்ற பதவியை, எளிதில் பெற்றுவிட முடியாது; வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் அப்பதவி கிடைக்கும். ஆனால், டாக்டர் நண்பரின் திறமையை அவர்களால் ஒதுக்கித் தள்ள இயலவில்லை; உரிய பதவியை அளித்தே ஆக வேண்டும் என்ற நிலை வந்ததும், கொடுத்து விட்டனர்.

இங்கு, 'பிராக்டீஸ்' செய்யும், லண்டன், 'ரிட்டன்' டாக்டர்கள் பலரும், 'ரிஜிஸ்தார்' பதவி வரையே அடைந்தவர்கள். அதற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று அறிந்த பின், வெறுப்பில் இங்கே வந்தவர்கள் தான்!

மூன்று வார விடுமுறையில் லண்டனிலிருந்து, சென்னை வந்திருந்த டாக்டர் நண்பர், தம்முடன் லண்டனில் பணியாற்றிய சில டாக்டர்களை பார்க்கச் சென்றிருந்தார். அவர்கள் எல்லாம், சென்னையில், கடந்த சில ஆண்டுகளில் தோன்றியுள்ள, 'பைவ் ஸ்டார்' கலாசார மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர்.

அவர்களிடமும், அந்தந்த மருத்துவமனைகளின் தலைமை டாக்டர்களிடமும் பேசிவிட்டு வந்த டாக்டர் நண்பர் கூறியது:

மணி... லண்டனில் தினமும் குறைந்தபட்சம், மூன்று அறுவை சிகிச்சைகள் செய்கிறேன். ஆபரேஷனுக்கு உட்படுத்தப்பட உள்ள நோயாளிகள் ஏராளமானவர் இருக்கின்றனர். 'மூன்று வார விடுப்பில் இந்தியா போகிறேன்; என் உதவி டாக்டரை, (உதவியாளர் வெள்ளையர்) உங்களுக்கு ஆபரேஷன் செய்விக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன்...' என, அவர்களிடம் கூறினேன். அதற்கு, 'வேண்டவே வேண்டாம் டாக்டர்... நாங்கள் இன்னும் மூன்று வாரம் காத்திருக்கிறோம்...' என, வெள்ளைக்கார நோயாளிகளே என்னிடம் கூறினர்.

காரணம், என்னுடைய தொழில் நேர்மையும், திறமையும் தான். நான் ஆபரேஷன் செய்யும் நோயாளிகளில், 1,000ல் இருவர் கூட இறந்ததில்லை; அப்படியே இறந்து போனவர்களும், வேறு காரணங்களாலேயே இறந்துள்ளனர்.

அனாவசிய டெஸ்டுகளை செய்யச் சொல்லி வலியுறுத்துவது இல்லை; அதேபோல, தேவை இல்லாமல் அவர்களை மருத்துவமனையில் நாள் கணக்கில் வைப்பதும் இல்லை.

ஆனால், இந்தியாவில், மருத்துவம் தெய்வீகமாகக் கருதப்படாமல், வியாபாரமாகி விட்டது. நான் சந்தித்த மருத்துவமனைகளின் தலைமை மருத்துவர்கள், என்னுடைய துறையில், திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கு இல்லாததால், தம் மருத்துவமனையில் பணியாற்ற என்னை அழைக்கின்றனர்.

மாதம், 'கியாரண்டீட்' ஆக 10 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, வழி செய்வதாக கூறுகின்றனர். அதே நேரம், தேவையோ, தேவை இல்லையோ, அந்த, 'டெஸ்ட்' இந்த, 'டெஸ்ட்' என்று மருத்துவமனைக்கு பணம் கிடைக்க உதவ வேண்டும் என்றும், நோயாளி வந்த உடனேயே, 'இன்டென்சிவ் கேர் யூனிட்'டில் அனுமதித்து, அதற்கு தனியே பணம் கறந்து, மருத்துவமனைக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

'இது போன்ற வேலைகளில் என்னால் ஈடுபட முடியாது; மருத்துவத் தொழிலை புனிதமாகக் கருதி ஈடுபட்டுள்ளேன். என்னால் உங்களுக்கு பயன் இருக்காது...' என்று, அவர்களிடம் கூறி விட்டேன், என்றார்.

எழுத்தாளர் நண்பர் ஒருவர் கூறக் கேட்ட சமாசாரம் இது...

'என் நண்பன் ஒருவன், மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்க உள்ளான்...' என்றார்.

'சிரமமான தொழிலாச்சே... நிறைய பணம் முடக்க வேண்டி இருக்குமே...' என்றேன்.

'அட, போப்பா... புரியாத புள்ளையா இருக்கியே... அந்தக் காலம் எல்லாம் மாறிப் போச்சு. ரெண்டு, மூணு டாக்டர்கள் கைவசம் இருந்தால் போதும்...' என, புதிர் போடுவது போல பேசினார்.

'புரியல; விளக்கமாக சொல்லுங்க...' என்றேன்.

'மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்கும் என் நண்பன், முதல் தான் போடுறான். அவனுக்கு மூன்று டாக்டர்கள் பழக்கம். அவர்கள் தான் இவனை மெடிக்கல் ஸ்டோர் ஆரம்பிக்க தூண்டியது; ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், ஒவ்வொரு டாக்டருக்கும் மாதம், குறிப்பிட்ட தொகை கொடுத்துட வேண்டுமாம்.

'அதற்கு பிரதிபலனாக, இவரது கடையிலேயே மருந்து வாங்க, அவர்கள் சிபாரிசு செய்வராம். அதுவும், வியாதிக்கு தேவையான மருந்துகளுடன், ஜெனரல் மருந்துகளையும் எழுதிக் கொடுப்பராம்.

'அது மட்டுமல்ல, எல்லா வகை மருந்துகளையும் வாங்கி, ஸ்டாக் செய்து பணத்தை முடக்கணுங்கிற அவசியம் இல்லையாம். இந்த டாக்டர்கள் குறிப்பிடும், 10 வகையான மருந்துகளில் மட்டும் பணத்தை முடக்கினால் போதுமாம்; எப்படி, பிசினஸ்...' என்றார்.

'புனிதமான மருத்துவத் துறையை இனி, 'மெடிக்கல் புரபஷன்' என, அழைப்பதை விடுத்து, 'மெடிக்கல் பிசினஸ்' என, அழைக்கலாம்...' எனக் கூறி வைத்தேன்.

பவானி ஆற்றில் நீச்சல் அடித்தபின், கரையில் உட்கார்ந்து இருந்தேன். குளித்துக் கொண்டு இருந்தார், லென்ஸ் மாமா. குளிக்க வந்த கிராமத்து ஆசாமி ஒருவர், வேட்டி மடிப்பிலிருந்து, புது பொடி மட்டை ஒன்றை எடுத்தார். பொடியைக் கையில் கொட்டி, நீர் சேர்த்துக் குழைத்து, ஷாம்பூ போல தலையில் தேய்க்க ஆரம்பித்தார்.

அதிர்ந்து போய் அவரிடம் விவரம் கேட்டேன். 'பார்ட்டி' சொன்ன பதில் இது தான்:

'பேன் தொல்லைங்க... மூக்குப் பொடி போட்டு தேய்ச்சு கழுவுனா, ஓடியே போயுடுமுங்க...'

முடியா, பேனா... கேட்கவில்லை நான்!

டெலிபோன் ஆன்சரிங் மிஷினில், 'தினம் ஒரு தகவல்' முகமறியா வாசகி ஒருவர், ஒரு புதிர் போட்டிருந்தார்.

இதோ, அது:

அந்த ஊரிலேயே பிரபலமான ஒரு சோம்பேறியின் வீடு, தீப்பற்றிக் கொண்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், 'ஆ... ஊ...' என்று, அலறியபடி வீட்டினுள்ளே ஓடுவதும், அங்கிருப்பனவற்றை எல்லாம் முடிந்தவரை வெளியே இழுத்து வந்து போடுவதுமாக இருந்தனர்.

எந்தச் செயல்பாடும் இல்லாமல், அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்த சோம்பேறி, திடீரென என்னவோ நினைத்துக் கொண்டவன் போல வீட்டுக்குள் ஓடினான்.

சென்ற வேகத்தில் திரும்பினான்... அவன் எதை எடுத்து வந்திருப்பான் என, நினைக்கிறீர்கள்?

இப்படி கேட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்து இருந்தார்.

அடுத்த நாள் விடை கூறி இருந்தார்.

நான் நினைத்த பொருளே அது! எதை எடுத்து வந்திருப்பான் என, நான் கணித்தது போலவே, நீங்களும் கணித்தீர்களா என சரி பார்க்க.

விடை: சென்ற வேகத்தில் அவன் திரும்பி வந்தபோது, அவன் கையில் பாயும், தலையணையும் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us