sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கலாட்டா கல்யாணம்!

/

கலாட்டா கல்யாணம்!

கலாட்டா கல்யாணம்!

கலாட்டா கல்யாணம்!


PUBLISHED ON : ஜூன் 27, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சார் இதுதானே, 'கலாட்டா கல்யாணம்' மேட்ரி மோனியல்... கல்யாணத்துக்கு பதிவு பண்ணணும்... உள்ள போகலாமா?''

''போங்க... முதலாளி உள்ள தான் இருக்காரு,'' என்றான், வாசலில் இருந்த பியூன்.

''வணக்கம் சார்...'' சொல்லிய இளைஞனை பார்த்தார், திரவியம்.

அவனைப் பார்த்ததும், சென்னைக்கு புதிது என புரிந்தது.

''சொல்லுங்க, என்ன வேணும்?'' என்றார்.

''பதிவு பண்ணணும்.''

''ஆமா, உங்களுக்கு எந்த ஊரு?''

''துாத்துக்குடி பக்கம், குமாரபுரம்.''

''அப்படியா சொல்லுங்க... பொண்ணு வேணுமா, மாப்பிள்ளை வேணுமா?''

''பொண்ணு தான் வேணும்.''

''எந்த மாதிரி பொண்ணு வேணும்?''

''நல்ல அழகா இருக்கணும்ங்க. படிச்சு, பெரிய உத்யோகத்துல இருக்கணும்... சம்பளம், லட்சத்துக்கு குறையாம வாங்கணும்... முக்கியமா, 'சாப்ட் வேர்'ல இருந்தா, பிரச்னை இல்லை.''

''மாப்பிள்ளை அழகா இருப்பாரா?''

''அதெல்லாம் அப்புறம் சொல்றேங்க... முக்கியமா, பொண்ணோட அம்மா - அப்பா கூட இருக்கலாம்.''

''இதுக்கு மாப்பிள்ளை வீட்ல ஒத்துக்கணுமே... பாதி பிரச்னை அதனாலதானே... 'எனக்கு இரண்டுமே பொண்ணு அல்லது ஒரே பொண்ணு... யார் வீட்டுக்கு போக முடியும்'ன்னு, கூடவே வந்துடறாங்க... கொஞ்ச நாள்ல, 'டைவர்சே' ஆயிடுது,'' என்றார், திரவியம்.

''மாப்பிள்ளை தங்கமானவன். அதெல்லாம் ஒண்ணுமே சொல்ல மாட்டான். உறுதி சொல்றேங்க, கடைசி வரை காப்பாத்துவான்.''

''அப்புறம்?''

''குழந்தை பெத்துக்கறதெல்லாம் அவங்க விருப்பம்ங்க... அவங்க எப்படி இருந்தாலும் மாப்பிள்ளை புரிஞ்சு நடந்துக்குவாங்க.''

''ரொம்ப முற்போக்கான பையனா இருப்பான் போல இருக்கே?'' என்றார், திரவியம்.

''ஆமாங்க... பையனுக்கு நல்லா சமைக்கத் தெரியும். துணிய துவைச்சு காயப் போட்டு எடுத்து, மடிச்சு வைக்க தெரியும். புடவை இஸ்திரி போட தெரியும். கார், பைக் ஓட்ட தெரியும்.

''எவ்வளவு நேரம், 'ஷாப்பிங்' போனாலும் கூடவே இருந்து, பொறுமையாக கூட்டிட்டு வருவாப்ல. காய்கறி, மளிகை சாமான் எல்லாம் கரெக்டா வாங்க தெரியும். ஒட்டடை அடிக்கிறது, பாத்ரூம் கழுவறது எல்லா வேலையும் சொல்லாமலே செய்வான்.''

''இதெல்லாம் எப்படி கத்துக்கிட்டாரு?''

''கல்யாணம் பண்ணணுன்னு முடிவு எடுத்ததும், இதெல்லாம் கத்துகிட்டு தான், பொண்ணு பார்க்கவே சம்மதிச்சிருக்கான்.''

''இதுக்கெல்லாம் அவங்க அம்மா - அப்பா ஒத்துக்குவாங்களா?''

''அதெல்லாம் ஒத்துக்குவாங்க... கல்யாணம் ஆனதும், மாசா மாசம் அவங்களுக்கு ஒரு தொகை தாரேன்னு சொல்லி, அவங்க அம்மா - அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டான்.''

''ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே தம்பி... இந்த காலத்துல இப்படியும்

அம்மா - அப்பாவா?''

''இப்படி இருந்தால்தான் பொழைக்க முடியும்ன்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க.''

''சரி, நீ சொல்லு...''

''அந்த பொண்ண கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவான். சண்டை போட்டு, அடிக்க மாட்டான். சினிமால வர்ற மாதிரி, எப்ப பாத்தாலும், 'டார்லிங், செல்லம், புஜ்ஜி குட்டி, ஜில்லு' இப்படி தான் கூப்பிடுவான். அப்புறம் எப்படி சண்டை வரும்...

''குழந்தை பிறந்தால், மாமியார் கூட சேர்ந்து, இவனே குழந்தையையும் பார்த்துக்குவான். மாமியாருக்கு உதவியா என்ன வேலைன்னாலும் செய்வான். மாமனாரையும் கவனிச்சிக்குவான்.''

''பென்டாஸ்டிக்... இப்படி ஒரு மாப்பிள்ளை நான் பார்த்ததே இல்லையே. சரி, மாப்பிள்ளையை பத்தி கொஞ்சம் சொல்லு... பெயர் என்ன?''

''சிவக்குமார்... 'ஷார்ட் பார்ம்'ல ஷிவ்... நீங்க பொண்ணுகிட்ட, இந்த பேர் சொன்னா மட்டும் போதும்.''

''ஓ.கே., படிப்பு?''

''டபுள் டிகிரி.''

''என்ன வேலை?''

''ஹெச்.ஹெச்.ஓ.,''

''எவ்வளவு சம்பளம்?''

''ஒரு லட்சம்.''

''இவ்வளவு சம்பளத்துல இப்படி ஒரு மாப்பிள்ளையா?''

''ஆமா, எந்த ஊர்ல வேலை பார்க்குறார்?''

''இப்ப யாரு ஊருக்கெல்லாம் போறா... எல்லாம், 'ஆன்லைன்' வேலை.''

''ஆமாம். ஜாதகம், போட்டோவும் கொடு.''

''அதுக்கு முன்ன ஒரு சின்ன விஷயம்... ஒரு மாப்பிள்ளை பார்க்கணும்.''

''அது யாருக்கு?''

''மாப்பிள்ளையோட தங்கச்சிக்கு.''

''வெரிகுட் வெரிகுட்... அண்ணன் - தங்கச்சி இருக்கிற இடமா பார்க்கலாமா?''

''வேண்டாம், சரிப்பட்டு வராது... நம், 'குவாலிபிகேஷ'னுக்கேத்த மாப்பிள்ளை பார்க்கணும்.''

''ஓ அப்படியா... சரி, எப்படி பார்க்கணும்?''

''மாப்பிள்ளை டிகிரி படிச்சிருக்கணும். கம்பெனியில வேலை பார்த்தா போதும். ஏன்னா, பொண்ணுக்கு நகை குறைவா தான் போடுவாங்க.''

''பொண்ணுக்கு கூட பிறந்தவங்க எத்தனை பேரு?''

''ஒரு அண்ணன் தான்.''

''அம்மா - அப்பா கூட வந்து இருக்க மாட்டாங்களே?''

''ச்சே ச்சே, அதெல்லாம் இருக்க மாட்டாங்க. மானமுள்ளவங்க.''

''வெரிகுட்... பொண்ணு ஏதாவது வேலை பார்க்குதா?''

''ஒரு நல்ல வேலை பார்க்குது... மாதம், 20 ஆயிரம் சம்பளம்.''

''வீட்டு வேலை எல்லாம் பார்க்கும்ல?''

''அதெல்லாம் பார்ப்பா... மாமியார் - மாமனார் கூட இருந்தா, கொஞ்சம் அவங்க உதவி செஞ்சா, இவ பார்த்துப்பா.''

''பொண்ணு என்ன வேலை பார்க்குது?''

''ஹெச்.எம்.,''

''என்னய்யா, ஹெச்.எம்.,ன்னு சொல்ற... சம்பளம், 20 ஆயிரம்தான்கிற?''

''அது இருக்கும் இடத்தை பொறுத்து சார்.''

''சரி விடு, பொண்ணு செவப்பா இருக்குமா?''

''சுண்டுனா ரத்தம் வரும், தக்காளி கலரு.''

''அப்ப, ஓ.கே., அதுக்கும் ஜாதகம் போட்டோ எல்லாம் எடுத்து வந்து இருக்கீங்களா?''

''ஆமா, இந்தாங்க.''

''எத்தனை நாள்ல சொல்வீங்க?''

''நீங்க சொன்ன இரண்டு, 'அலையன்ஸ்'மே ரொம்ப நல்லா இருக்கு. என்கிட்ட கைவசம் சில பொண்ணு, மாப்பிள்ளை இருக்கு... கேட்டுட்டு, உங்களுக்கு பதில் சொல்கிறேன்,'' என்றார், திரவியம்.

''ஓ.கே.,ன்னா நீங்க ஒரு போன் அடிங்க. பொண்ணும் - மாப்பிள்ளையும் அவங்க குடும்பத்தோட இங்க வந்துடுவாங்க.''

''ஆமா, மாப்ள போட்டோ கொடுக்கலையே?''

''இந்தாங்க.''

''அட, உங்க போட்டோ மாதிரி இருக்கு. அப்ப நீங்க தான் மாப்பிள்ளையா?''

''ஆமா சார்... எனக்கும், என்

தங்கச்சிக்கும் தான் பொண்ணும், மாப்பிள்ளையும் வேணும்.''

''வெரிகுட்... சீக்கிரமே போன் பண்றேன்.''

ஒரு வாரத்திலேயே போன் பண்ணி, அவர்கள் குடும்பத்தை அலுவலகத்துக்கு அழைத்தார். ஏற்கனவே அங்கு இரண்டு குடும்ப ஆட்களும் இருந்தனர்.

''இவங்க, மிஸ் சவுமியா... ஒரு பெரிய, 'சாப்ட்வேர்' கம்பெனில வேலை பார்க்கறாங்க... மாசம் ஒண்ணே கால் லட்சம் சம்பளம் வாங்குறாங்க... இவங்களுக்கு உங்களோட, 'பயோடேட்டா' ரொம்ப பிடிச்சிருச்சு...

''இவர், மிஸ்டர் சுந்தர்... இவருக்கு, உங்க தங்கையோட, 'பயோடேட்டா' பிளஸ் போட்டோ இரண்டுமே புடிச்சிருக்கு... கொஞ்சம் உட்கார்ந்து பேசுங்க,'' என்று அறிமுகப்படுத்தினார், திரவியம்.

''ஹாய்...'' என்று, இவன் கையை பிடித்து குலுக்கிய யுவதி, பார்லரின் உதவியால் அழகாக இருந்தாள்.

''நீங்க எந்த கம்பெனியில் வேலை பார்க்குறீங்க?''

''என் சொந்த கம்பெனியில.''

''கம்பெனி வச்சிருக்கீங்களா... அப்படி அவர் சொல்லவே இல்லையே. கம்பெனியில, ஹெச்.ஹெச்.ஓ.,ன்னு சொன்னாரு, நான் கூட அதை பத்தி உங்ககிட்ட கேட்கணும்ன்னு நினைச்சேன்... நீங்க என்னன்னா சொந்த கம்பெனின்னு சொல்றீங்க?''

''மேடம், என்னோட தகுதி எல்லாம் அவர் உங்ககிட்ட சொன்னாரா?''

''ஆமா, டபுள் டிகிரின்னு சொன்னாரு.''

''நான் அதை என் தகுதியா சொல்லல... சமையல், வீட்டை பார்த்துக்கொள்வது, உங்களுக்கு உதவியாய் இருக்கிறது, இதுபற்றி நிறைய சொல்லி இருந்தேனே...''

''அப்கோர்ஸ் சொன்னாரு... எனக்கு அதுதான் ரொம்ப பிடிச்சிருந்தது. அதனாலதான் உடனே பார்க்க, சம்மதம் சொன்னேன். 'வெரி அண்டர்ஸ்டாண்டிங்' எனக்கு எல்லாம் ஓ.கே., உங்க வேலை, சம்பளம் பத்தி தெரிஞ்சா, உடனே கல்யாணம் வச்சுக்கலாம்.''

''நான்தான் சொன்னேனே, சொந்த கம்பெனி. இப்போ உங்களை கல்யாணம் பண்ணி இத்தனை வேலையும் பார்த்தா, அதுதான் என்னோட நிரந்தரமான வேலை... அதுக்கு பேரு தான், 'ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆபீசர்' இத்தனை வேலைக்கும் என்னோட சம்பளம் ஒரு லட்சம்... அத நீங்க கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துடுவீங்க... அப்புறம் என்ன... உங்களையும், உங்க அம்மா - அப்பாவையும் நான் சந்தோஷமா பார்த்துப்பேன்.''

''யூ இடியட்... வேலையே இல்லாம, உனக்கு வேலை பார்க்குற பொண்ணு கேட்குதா?''

''மேடம், அவசரப்படாதீங்க... எனக்கு வேலை இல்லாம இருக்க போய் தான், இவ்வளவு வேலையும் செய்ய முடியும். உங்கள மாதிரி நான் ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன்னு வைங்க, காலைல போயிட்டு, ராத்திரி, 10:00 மணிக்கு தான் வருவேன். அப்புறம் நீ வேலை செய், நான் வேலை செய், நீ என்னடா பேசுறது, நான் என்னடா பேசுறது இப்படி பேசிப்பேசி, ஆறே மாசத்துல, 'டைவர்ஸ்' ஆயிடும்...

''கேட்டா, ஆண்களே சுத்த மோசம்... வீட்டு வேலையில உதவ மாட்டாங்க... அவங்க அம்மா - அப்பாவ மாத்திரம் நாங்க பார்த்துக்கணுமா... எங்க அம்மா - அப்பாவை யார் பார்த்துக் கொள்வது... குழந்தையை யார் பார்க்க... இந்த பிரச்னை எதுவுமே இல்லாமல், புல் டைம் அட் யுவர் சர்வீஸ்,'' என்றான்.

''டாமிட்... மிஸ்டர் திரவியம், வாட் இஸ் திஸ்?'' என்றாள், அந்தப் பெண்.

''என்னடா?'' என்றார், திரவியம்.

''சார், ரொம்ப அவசரப்படாதீங்க... கொஞ்சம் பொறுங்க, எத்தனையோ, 'டைவர்ஸ்' ஆன, 'சாப்ட்வேர்' பொண்ணுங்க இருப்பாங்க... அவங்ககிட்ட இந்த, 'ஆபர்' பத்தி சொல்லுங்க... உடனடியா எனக்கு வேலையும் கிடைக்கும், கல்யாணமும் நடக்கும்.''

''மிஸ்டர் திரவியம்... இந்த பொண்ணு என்ன சொல்லுது பாருங்க,'' என்று அலறினான், சுந்தர்.

''அங்க ஏன் சார் போகணும். நானே சொல்றேன், அவளுடைய வேலை,

ஹெச்.எம்.,ன்னா ஹவுஸ் மேனேஜ்மென்ட்... காலை, 8:00 மணியிலிருந்து சாயங்காலம், 6:00 மணி வரை ஒரு வீட்ல வேலைக்கு போயி, அவங்க வீட்ல எல்லா வேலையும் பார்த்து கொடுத்து, வீட்டையும் மேனேஜ் பண்ணிட்டு வருவா... ஐயா பார்க்குற மெக்கானிக் வேலைக்கு, இதைவிட அதிகமான சம்பளத்துல வேற பொண்ணா கிடைக்கும்?'' என்று கூற, கோபத்தில், சவுமியாவும், சுந்தரும் கொதிக்க...

மயங்கி விழுந்தார், திரவியம்.

அஜூத்யா காந்தன்






      Dinamalar
      Follow us