
அன்புள்ள சகோதரி —
வயது: 60. மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டேன். எனக்கு, இரு மகள்கள், ஒரு மகன். கல்லுாரியில் படிக்கும்போது உடன் படித்த மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் மனைவியும் அரசு பணியில் இருக்கிறார். அவருக்கு, வயது: 56. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இருதரப்பு சொந்த பந்தங்களும், எங்களுடன் பேசுவதில்லை.
மூத்த மகள், எம்.காம்., படித்தாள். சி.ஏ., படிக்க, ஆடிட்டரின் அலுவலகத்துக்கு பயிற்சிக்கு போய் வருவாள். என் மகளுக்கும், ஆடிட்டருக்கும் காதல் அரும்பியது. காதலை என்னிடம் வெளிபடையாக கூறினாள், மகள்.
ஆடிட்டரை பற்றி முழுமையாக விசாரித்தேன். அவரிடம் நடைமுறை சிக்கல்களை கூறினேன். அவர், தன் காதலில் உறுதியாக நின்றார். அதனால், தைரியமாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். மகன் - மகள் பெற்று, சிறப்பாக கணவருடன் வாழ்கிறாள், மூத்த மகள்.
இரண்டாவது மகள், 'பயோகெமிஸ்டரி' படித்தாள். உடன் படிக்கும் மாணவனை காதலிப்பதாக கூறினாள்.
'இந்த மகளுக்காவது வரன் பார்த்து, நாமே திருமணம் செய்து வைப்போம். தயவு தாட்சண்யமின்றி, அவள் காதலை கத்தரித்து விடுங்கள்...' என்றாள், மனைவி.
'காதலித்து திருமணம் செய்த நீங்கள், என் காதலுக்கு எதிரி ஆகலாமா... இவனையே எனக்கு கட்டி வையுங்கள்...' என்றாள், மகள்.
இரண்டாவது மகளின் காதலனை பற்றி முழுமையாக விசாரித்தேன். அவனிடம் நேரடியாக பேசினேன். நாமே பார்த்தால் கூட இவ்வளவு சிறப்பான மாப்பிள்ளை மகளுக்கு கட்டி வைக்க முடியாது என நினைத்து, அவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தேன். நான்கு வயது மகனுடன், சிறப்பான வாழ்க்கை வாழ்கிறாள், இரண்டாவது மகள்.
கடைசி மகன், பிசிக்ஸில் பி.ஹெச்டி., முடித்து, ஒரு கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறான்.
'மகள்களுக்கு காதலிக்க கற்று கொடுத்து, சிறப்பான மாப்பிள்ளைகளை வலை வீசி பிடித்து விட்டாய். மகனுக்கும் காதலிக்க கற்றுக் கொடுத்து, எவளையாவது கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே...
'மகள்களுக்கு ஒரு நியாயம், மகனுக்கு ஒரு நியாயமா? இவனுக்கு மட்டும் நீ, பணக்கார இடத்தில் வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போகிறாய் போல...' என்று, அவதுாறு பேசுகின்றனர், உறவினர்கள்.
வெட்கத்தை விட்டு, 'நீ யாரையாவது காதலிக்கிறாயா... தயங்காம சொல், தீர விசாரிச்சு, நீ காதலிக்கிறவளையே உனக்கு கட்டி வைக்கிறேன்...' என்றேன்.
'ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்; அதுவரைக்கும் திருமண பேச்சை எடுக்காதீங்க...' என்கிறான், மகன்.
என்ன செய்யலாம் சகோதரி?
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
காதலித்தவளையே திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளை பெற்று, படிக்க வைத்து, இரு மகள்களுக்கு காதல் திருமணம் செய்வித்த உங்களின் பேராண்மைக்கு, தலை வணங்குகிறேன்.
காதல் என்பது, கல்லுாரியில் சொல்லிக் கொடுத்து வரும் படிப்பல்ல. உண்மையான காதல், இரு இதயங்களும் சேர்ந்து போட்ட பூந்தோட்டத்தில் மலரும் பூ போல.
வீண் கவுரவம் பார்த்து, உங்கள் மகள்களின் காதல்களை சிதைத்து விடாமல், அவர்களுக்கு திருமணமும் செய்து, காதல் தேவதைக்கு கிரீடம் சூட்டி விட்டீர்கள்.
காதல் திருமணம் செய்து, சிறப்பான தாம்பத்தியம் செய்யும் பெற்றோரை பார்த்து, நல்லதொரு ஆணை தேர்ந்தெடுத்து காதலிக்க அனிச்சையாய் கற்றுக் கொண்டனரோ, உங்கள் மகள்கள்? இருக்கலாம் யாருக்கு தெரியும், சகோதரரே!
நீங்களும், மனைவியும் தன்னந்தனியராக வாழ்க்கை நடத்தியபோது, இந்த சொந்தபந்தம் உதவியதா... உங்கள் மகள்கள், மகனின் கல்வி செலவை ஏற்று, சொந்தபந்தம் ஒரு பைசா செலவு செய்ததா... மகள்களின் திருமண வாழ்க்கை தோற்று போயிருந்தால், உங்கள் சொந்தபந்தம், 'மாரல் சப்போர்ட்' செய்திருக்குமா...
கொள்ளுக்கு வாயை திறக்கும் குதிரை, கடிவாளத்துக்கு இறுக மூடிக் கொள்ளுமாம். அப்படி இருக்கிறது உங்கள் சொந்த பந்தத்தின் குணாதிசயம்.
காதலிக்க உங்கள் மகள்களுக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ, அவ்வளவு உரிமை காதலிக்காமல் இருக்க, மகனுக்கும் இருக்கிறது. நாளை, யாரையும் காதலிக்க மாட்டான் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நாளையும் அவன் காதலிக்கவில்லை என்றால், அவனுக்கு நீங்களும், உங்கள் மகள்களும் வரன் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள்.
நாளையே அவன் காதலித்தான் என்றால், வழக்கம் போல, காதல் உண்மையானதா என்பதை தீர விசாரித்து, அவன் காதலியுடன் பேசி, அவனது மன உறுதியை சோதியுங்கள். எல்லாம் பொருந்தி வருகிறது என்றால், அவனின் காதலுக்கும் முதல் மரியாதை செய்யுங்கள்.
உங்களுக்கு திருமணமாகி எப்படியும், 35 ஆண்டுகள் இருக்கும் என, யூகிக்கிறேன். 35 ஆண்டுகளாக சொந்த பந்தங்களின் ஏச்சு பேச்சுகளை கண்டுகொள்ளாமல் போன நீங்கள், இப்போது ஏன் அவர்களின், 'நெகடிவ்' விமர்சனங்களை காது கொடுத்து கேட்கிறீர்கள்?
இப்போது மகனுக்கு வயது: 26 இருக்கக்கூடும். இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருப்பதில் என்ன தவறு? இடையிடையே உங்கள் மனைவி மூலமாக, அவனின் உள்ளக்கிடக்கை தெரிந்து கொள்ளுங்கள். அவனுக்கு நிச்சயம் சிறப்பான வாழ்க்கைத் துணை அமையும். அவன் மூலமும், உங்களுக்கு பேரன் - பேத்திகள் கொஞ்ச கிடைப்பர்.
இன்னும், 15 ஆண்டுகள் உங்கள் மனைவியுடன் குடும்பம் நடத்தினால், 'பொன்விழா தம்பதியர்' என, போற்றப்படுவீர்கள். பேரன் - பேத்திகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பை, இறைவன் கொடுப்பான். கொள்ளு பேரன் - பேத்திகளை பார்ப்பீர்கள்.
சந்தர்ப்பம் அமையும்போது, மனைவியுடன் மனம் விட்டு பேசுங்கள். 35 ஆண்டு குடும்ப வாழ்க்கையில், மனைவிக்கு எதாவது ஆவலாதி இருக்கும். அதை அவர் வாய்விட்டு சொல்லியும் நீங்கள் நிறைவேற்றி தராமல் இந்திருப்பீர் அல்லது அவர் சொல்லாமலேயே தன் ஆவலாதிகளை மனதுக்குள் புதைத்து வைத்திருப்பார். அதை என்ன என கேட்டு, நிறைவேற்றுங்கள்.
உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்குவதை விட, மனைவியிடம் நல்ல கணவன் என்ற பெயர் வாங்குவது சிறப்பு.
அவ்வப்போது மகள்கள் வீடுகளுக்கு சென்று, பேரன் - பேத்தியை கொஞ்சுங்கள். மகள்கள் குடும்பத்தையும் வீட்டுக்கு வரவழைத்து, விருந்து உபசரியுங்கள்.
இன கவர்ச்சி தாண்டிய காதல்களை கொண்டாட இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள். காதலில் ஜெயித்தவர்கள், திருமண வாழ்க்கையிலும் ஜெயிக்க, தகுந்த ஆலோசனை வழங்குங்கள்.
மகனின் திருமணம் எப்போது நடந்தாலும், எனக்கு அழைப்பிதழ் அனுப்புங்கள். கட்டாயம் கலந்து கொண்டு வாழ்த்துகிறேன்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.