தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கமலி டீச்சர்!

கமலி டீச்சர்!

கமலி டீச்சர்!


PUBLISHED ON : செப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'துாது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி...' எங்கிருந்தோ இந்தப் பாடலை, இந்தக் காலை வேளை காற்று இழுத்து வந்தது.

விஜயகுமாரியும் - புஷ்பலதாவும் ஆனந்தமாக ஒருவரையொருவர் மென்சீண்டல் செய்து அருவிக்கரை, ஆற்றங்கரை என்று ஆடிப்பாடும் காட்சி, சங்கரின் மனதில் ஓடியது.

ஒரு கணம் தான்.

அவர்கள் இருவரையும் நகர்த்தி விட்டு, மனக்கண் முன் வந்து நின்றார், கமலி டீச்சர். அழகான புன்னகையும், சிரிக்கும்போது மிக லேசாக விழுகிற கன்னத்துக் குழியும் தெரிந்தன.

சட்டென எழுந்து நின்றேன்.

டீச்சர் டீச்சர்... எல்லாருக்கும் இருப்பது போல சிறு பிராயத்து நினைவுகள் தான். ஆனால், நாளுக்கு நாள் வலுவடையும் நினைவுகள். நெல்லையின் அம்பாசமுத்திரம் பள்ளியும், ஆல மரமும், வகுப்பறையும், கமலி டீச்சரும் வெறும் நினைவுத்துண்டுகள் அல்ல. வாழ்வின் அங்கங்கள்... இப்பிறவியின் கடலை நீந்திக் கடக்க உதவும் உயிர்ப்படகுகள்.

அரைகுறையாக படிப்பு மற்றும் மதிப்பெண் வாங்கிய காலத்தின் நடுவில், எங்களை மோட்சிக்க வந்த தேவதை, கமலி டீச்சர்.

செல்வராஜ் எப்போதும் தாமதமாகவே பள்ளிக்கு வருவான். கன்றுக்குட்டியின் பால்வாடை எப்போதும் இருக்கும் அவனிடம். 'டேய்... உன் பேர் செல்வராஜ் இல்லடா, பால்ராஜ்...' என்று சிரிப்போம். அவன் முகம் சுருங்கி, தலை குனிவான்.

மருதுவும் அப்படித்தான். அவன் காலை வேளையில் டவுன் வீடுகளுக்குப் போய், பேப்பர் போட்டு விட்டுத்தான் பள்ளிக்கு வருவான். முகத்தைத் தொங்கப் போட்டபடியே, எப்போதும் ஏதோ யோசனையில் இருப்பான்.

'என்னடா... காலை வேளைல தெரு நாய் தொரத்துதா? பாத்துடா விழுந்து கிழுந்து பொதையல் எடுக்கப் போற...' என்று சிரிப்போம்.

சுந்தரமும் தனியாகவே திரிவான். கேட்டால், 'வானத்தைப் பாருடா... அதுதாண்டா, ரோஜா நட்சத்திரம், ஆண்டனியும் - கிளியோபாட்ராவும் நைல் நதியில் படகில் போகும்போது, இந்த நட்சத்திரம்தான் வழிகாட்டியதாம்...' என்று கண்கள் கிறங்க சொல்வான்.

எனக்கு கவிதை, கணக்கு, விளையாட்டு என்று எதிலும் ஆர்வமில்லை. ஏதோ பேருக்கு படிப்பு, வயிறு முட்ட சாப்பாடு, கும்பகர்ணன் போல துாக்கம் என்று இருந்தேன்.

அப்போதுதான், எங்கள் வகுப்பறைக்கு வந்தார், கமலி டீச்சர்.

முதல் தோற்றத்திலேயே எங்களை முழுமையாகக் கவர்ந்து விட்டார். இள மஞ்சள் நிறத்தில் சுரிதார், அதில் விரவிய கறுப்புப் பூக்கள், அழகான காட்டன் துப்பட்டாவின் மொடமொடப்பு, சிரித்த கண்கள், இளகும் புன்னகை என்று, பக்கத்து வீட்டு அக்கா போல இருந்த கமலி டீச்சரை, எங்கள் வகுப்பு காட்டான்கள் அனைவருக்கும் பிடித்து விட்டது.

கரும்பலகைக்கு பக்கத்தில் நின்று, சாக்பீசால் எழுதி, விடாத மழை போல ஒப்பித்து போகும் ஆசிரியர்களுக்கு நடுவில்... தலையில் வருடியபடி நடந்து, புன்னகையுடன் அவர் சொன்ன, 'ப்ராபப்லிட்டி தியரி'யும், 'குவாட்ராடிக் பார்முலா'வும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

வெறும் பாடங்களை மட்டும் எடுக்காமல், திரைப்பாடல்களில் நான்கு வரியை அவர் பாடுவார். அடுத்த நாலு வரியை எவனாவது ஒருத்தன் பாடுவான்.

ஒரு சாயலில் விஜயகுமாரி, மறுசாயலில் புஷ்பலதா போல இருந்தாலும், நேரில் பார்க்கும்போது, அவர் ஏதோ ஒரு ஹாலிவுட் நடிகையின் சாயலில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். அழகைத் தாண்டிய அந்தக் கம்பீரம், அது பேரழகு என்று நினைப்பேன்.

எத்தனை தடவை படித்தாலும், சோலார் சிஸ்டம், கிரகங்களின் வரிசைகள் எனக்கு மனப்பாடம் ஆகாது.

சூரிய குடும்பம் போல, வகுப்பறையில் ஒரு மாடல் உருவாக்கினார். நடுவில் ஒருத்தனை நிற்க வைத்தார். அவன் பெயரும் சூரியமூர்த்தி. சுற்றிலும் வட்டப் பாதையில் மற்ற கிரகங்களாக மாணவர்கள். 'மை வெரி எனர்ஜெடிக் மதர் ஜஸ்ட் செர்வ்ட் அஸ் நுாடுல்ஸ்' என்கிற வரியை எழுதினார். அந்த வாக்கியத்தின் முதல் எழுத்துகள்தான் கோள்களின் முதல் எழுத்துகள். மெர்க்குரி, வீனஸ், எர்த், மார்ஸ், ஜூபிடர், சாடர்ன், யுரேனஸ், நெப்டியூன் என்று, துாக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்.

வாழ்க்கைப் பாதையை கடந்து செல்ல என்னென்ன கருவிகள் வேண்டும், எவையெவை இருந்தால் சுலபமாக இருக்கும், அப்படிக் கடக்கும்போது வழியில் எவ்வளவு பேருக்குக் கை கொடுக்கலாம், அது எப்பேர்ப்பட்ட பேரின்பத்தைக் கொடுக்கும் என்பதையெல்லாம் சொல்லாமல் சொன்னார்.

'ஒரு குதிரையை குளம் வரை கூட்டி வரலாம். ஆனால், தண்ணீர் குடிக்க வைக்க, நம்மால் முடியாது. ஒரு மனிதனை சிறையில் அடைக்கலாம். ஆனால், அவன் செய்த தவறுக்கு நம்மால் வருந்த வைக்க முடியாது. எதுவுமே உள்ளிருந்து வரவேண்டும். அதற்கு தெளிவு வேண்டும். அந்தத் தெளிவு, அறிவிலிருந்து தான் வரும்.

'அறிவும், தெளிவும் அழகான கனவை உருவாக்கும். எதிர்காலம் எனக்கு இப்படி இருக்க வேண்டும், என் நோக்கம் இதுதான், இப்படி வாழ்க்கை அமைந்தால் எனக்கு மனநிறைவு கிட்டும் என்பதை, அந்த கனவுகள் தான் தீர்மானிக்கும்.

'ஆம்... கனவுகள் தான். ஒன்று, தனக்காக வாழும் கனவு; அடுத்தது, சமூகத்திற்கானது. அதிகமான செடிகளை நட்டால் தான் அதிகமான ரோஜாக்கள் கிடைக்கும் அல்லவா? கனவுகளை உண்டாக்கிக் கொள்ளுங்கள். லட்சியங்கள், நோக்கங்கள் இவற்றின் வசீகரமான செல்லப் பெயர் தான் கனவுகள். இலக்குடன் வாழும்போது எல்லாமே அர்த்தத்துடன் மிளிரும், அழகுடன் பளிச்சிடும். சரிதானே தங்கங்களே?'

அவை வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்வின் ஆழம் புரிய வைத்த மந்திரங்கள். வாழ்க்கைக்கு தயார் செய்வதல்ல, கல்வி; அதுதான் வாழ்க்கையே என்று உணர வைத்தது. எந்தத் தொழிலும் உன்னதமானதே, மற்றவருக்கு நன்மை பயக்குமெனில் என்று புரிய வைத்தது.

பால் வாசனையுடன் வரும் செல்வராஜ், தன் மாடுகளை அதிக பாசத்துடன் நேசித்தான். பேப்பர் போடும் மருதுவை, நாங்கள் அன்புடனும், மதிப்புடனும் பார்க்கத் துவங்கினோம். கவிதை பாடும் சுந்தரம், எங்களுக்கு ஷெல்லியாகத் தெரிந்தான்.

எனக்குள்ளும் இயல்பாக கனவுகள் வளரத் துவங்கின. அப்பா வைத்திருந்த லொட லொட ஸ்கூட்டர், ரேடியோ, சைக்கிள், டிரான்சிஸ்டர் என்று, எது கிடைத்தாலும் பிரித்து மேய்ந்தேன். போடும்போதே கவனித்து, மறுபடி நேர்த்தியாக சேர்க்கத் துவங்கினேன்.

ஆர்வம் என்னை செயலாற்ற வைத்தது. டீச்சரின் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்தியது. அப்பாவிற்கு ஒரே பெருமை. 'நான் வெறும் மெக்கானிக்டா. ஆனால், நீ மெக்கானிகல் இன்ஜினியர் ஆகப்போகிறவன்டா...' என்று, தட்டிக் கொடுப்பார்.

சிக்கநரசய்யன் கிராமத்தின் முதல் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்ற பட்டம், கமலி டீச்சரால் தான் எனக்கு கிடைத்தது. அது கொண்டு வந்த வளமான வாழ்வு, பதவி, மனைவி, வீடு, வாசல், மழலை செல்வம் என்று, நிறை வாழ்க்கையும் கமலி டீச்சர் கொடுத்தது தான்.

எனக்கு மட்டும் கிடைத்த கொடை அல்ல இது. இப்போது, நெல்லையில் மிகப்பெரிய பால் பண்ணை முதலாளி, செல்வராஜ். சென்னையின் நவீன மரக்கடை சொந்தக்காரன், மருது. தமிழ் இலக்கிய உலகின் மிகக் குறிப்பிடத்தக்க படைப்பாளி, சுந்தரம்.

தமிழகத்தின் நான்கு பகுதிகளில் ஏற்றுமதித் தொழில் செய்கிறான், ஜேம்ஸ். நான்கு நண்பர்கள், இஸ்ரோவில். எட்டு பேர், பல்கலைக்கழகங்களில். பனிரெண்டு பேர், அட்லாண்டா, யேல் மற்றும் 'ஸ்டான்போர்ட் யூனிவர்சிடி'களில் என்று, எங்கள் செட் மாணவர்கள், கொடி கட்டிப் பறக்கிறோம்.

பரசு மட்டும் நெல்லையிலேயே இருக்கிறான். ஆறு பள்ளிக்கூடங்கள் நடத்துகிறான். கல்வியின் தரத்திற்கு, 'யுனெஸ்கோ' விருது வாங்கியிருக்கிறான். எப்போதாவது பேசுவான். கமலி டீச்சர் பற்றி பேச்சு வரும்.

வயதின் மூப்பு, கமலி டீச்சரின் விழிகளை பாதித்தது. மூட்டுவலி, கணவரின் மரணம் என்று, கமலி டீச்சர் பற்றிய தகவல்கள் தெரிய வரும். ஊருக்கெல்லாம் விளக்காய் இருந்துவிட்டு ஒரே தெருவிலேயே தன் வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிற டீச்சரிடம் எனக்கு ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டி இருந்தது.

''என்ன ஜி, போன் அடிக்குதே கவனிக்கலையா... அதுவும் உங்க நண்பர் பரசு அழைக்கிறாரே?'' என்றபடியே, போனைக் கொடுத்து விட்டுப் போனாள், காஞ்சனா.

''பரசுவா? பரசு... டேய் எப்படிடா இருக்கே?'' என்றேன். ஏதோ ஒரு பட்டாம்பூச்சி என்னைச் சுற்றி பறப்பதை போலிருந்தது.

''நல்லா இருக்கேன்டா சங்கர்... உனக்கு ஒரு சர்ப்ரைஸ்டா... இங்க ஒருத்தங்க இருக்காங்க... உன்கிட்ட பேசணுமாம்,'' என்று சிரித்தான்.

மின்னல் வெட்டியது போலிருந்தது.

''கமலி டீச்சர் தானே... கொடுடா,'' என்றேன் பரபரப்பாக.

''டேய், பெரிய ஆளுடா நீ... டீச்சர், உங்க செல்ல மாணவன் லைன்ல இருக்கான்... இந்தாங்க!''

உள்ளே, 'உன் சொந்தப் பாதையை நீயே உருவாக்கிக் கொள்...' கமலி டீச்சரின் வாசகம் ஓடியது.

''ஹலோ, சங்கரா... நல்லா இருக்கியா கண்ணா?'' என்ற கமலி டீச்சரின் குரலில் பெரிய மாற்றம் இல்லை. அதே தேன் குழைவு.

''பிரமாதமா இருக்கேன் டீச்சர்... நீங்க?'' என்று ஆரம்பித்து ஏதேதோ பேசி, மெல்ல ஒரு கணம் நிறுத்தினேன்.

''என்னப்பா... என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?'' என்று, அதே கூர்மையும், சிரிப்புமாக கேட்டார்.

''ஆமாம் டீச்சர்... ஒரு கேள்வி, நீங்க தப்பா நெனைக்கலேன்னா...''

''அடடா... ஏன் பீடிகை... கேளுடாப்பா!''

''எங்கள் வகுப்பு மட்டுமில்லே டீச்சர்... நீங்க பாடம் எடுத்த வகுப்பு மாணவர்கள் எல்லாருமே இன்னிக்கு மனநிறைவா, வெற்றிகரமா வாழுறோம். அதுக்கு நீங்க மட்டும்தான் காரணம். கற்பித்தல் என்பதை, வெறும் சம்பள வேலைன்னு பார்க்காமல், சமுதாயப் பணின்னு செஞ்சீங்களே அந்த அறமும், அன்பும்தான் காரணம்...

''இப்படி, எங்களைக் கனவு காண வெச்சு, ஜெயிக்க வெச்ச உங்களுக்கு, கனவுகள் இல்லையா... எப்படி இந்தக் குறுக்குத் தெருவுக்குள்ளேயே உங்களை அடைச்சுகிட்டீங்க டீச்சர்?'' என்றேன்.

முதலில், அழகான சிரிப்பு தான் எதிர்முனையிலிருந்து கேட்டது. பின், தன் இயல்பான மென்குரலில், ''நல்ல கேள்வி சங்கரா... நான் பதில் சொல்கிறேன். எனக்கு டீச்சராக வேண்டும் என்ற எளிய கனவு, சிறு வயதிலேயே அது நிறைவேறி விட்டது. ஆனால், அது போதவில்லை.

''அந்த வயதில் புதிதாக எந்தக் கனவையும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் ஆழமான யோசனை வந்தது. என் கனவு, என்னை மட்டும் ஏன் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்... மற்றவர் பற்றிய அக்கறைதானே அடிப்படை மனிதப் பண்பு...

''என் மாணவர்களை நான் வெற்றியாளர்களாக ஏன் உருவாக்கக் கூடாது... ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாயிரம் மாணவர்களை நான் ஏன் தயார் செய்யக் கூடாது... என் பிரம்மாண்டக் கனவாக, அது ஏன் இருக்கக் கூடாது என்று நினைக்கத் துவங்கினேன்...'' என்று, அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

என் கண்கள், ஆனந்தத்துடன் நீரைப் பொழிந்தபடியே இருந்தன.

சாய்நேயா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us