PUBLISHED ON : செப் 05, 2021

விடியல்!
அன்புக்கில்லை அடைக்கும் தாழ்
வள்ளுவர் ஏற்றிய விளக்கு...
ஆழ்வார்களும், நாயன்மார்களும்
ஆண்டவனுக்கு ஏற்றியது பக்தி விளக்கு!
அறம் செய்ய விரும்பு
அவ்வையார் ஏற்றிய தர்ம விளக்கு...
பிறன்மனை நோக்காத பேராண்மை
கம்பன் காட்டிய குடும்ப விளக்கு!
ஆராயாத தீர்ப்புக்கு அறமே எமனாகும்
இளங்கோவின் நீதி விளக்கு...
வாடிய பயிரைக் கண்டால் உதவுவது
வள்ளலாரின் கருணை விளக்கு!
உடம்பை வளர்க்க உயிர் வளருமென்றது
திருமூலரின் மந்திர விளக்கு...
காயமே இது பொய்யடா என்று
சித்தர்கள் காட்டியது ஞான விளக்கு!
தீதும் நன்றும் பிறரால் வருவதில்லை
பூங்குன்றன் ஏற்றிய புதுமை விளக்கு...
யாதுமூரே யாவருங் கேளிர்
மனிதம் போதிக்கும் மகத்தான விளக்கு!
அச்சமில்லை அச்சமில்லை என்று
ஆங்கிலேயரை எதிர்த்தது பாரதி விளக்கு...
பெண்கள் பாடசாலை போகட்டுமென்றது
பாரதிதாசனின் கல்வி விளக்கு!
காலமெல்லாம் எளிமையை பரப்பியது
காமராசரின் நேர்மை விளக்கு...
மண்ணுலகே வியந்திட வைத்தது
காந்தியின் அகிம்சை விளக்கு!
வாழ்க்கைப் பாதையை அழகாய்
வெளிச்சம் போட்டுக் காட்டுகிற
விளக்கின் ஒளியில் நடந்து பாருங்கள்
எந்நாளும் எல்லாருக்கும் விடியல் தான்!
எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.
