PUBLISHED ON : ஜூலை 23, 2023

வித்தியாசமான பெயர்களில் பல தெய்வங்களை, தமிழகக் கோவில்களில் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர் தான், காணா நட்டம் உடையார். யார் இவர், எங்கிருக்கிறார் தெரியுமா?
கோவில் நகரமான கும்பகோணத்திலுள்ள சோமேஸ்வரர் கோவிலில் இருக்கிறார். இவர் வேறு யாருமல்ல. சாட்சாத் நடராஜப் பெருமான் தான். இவரது பெயர் பற்றிய வரலாறு சுவையானது.
ஒரு காலத்தில் வெள்ளத்தால் இந்த உலகமே அழிய இருந்தது. சிவனை அணுகி, 'உலகம் அழிந்து விட்டால், எனது படைப்புக் கலன்களும் அழிந்து விடுமே... இவற்றை எப்படி பாதுகாப்பது?' என, கேட்டார், பிரம்மா.
'கும்பத்திற்குள் படைப்பு கலன்களை போட்டு, அமிர்தம் ஊற்றி, கும்பத்திற்குரிய பொருட்களை அதன் மேல் வைத்து, ஒரு உரியில் வைத்து வெள்ளத்தில் மிதக்க விட்டு விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார், சிவன்.
அப்படியே செய்தார், பிரம்மா. சிவன் அந்த கும்பத்தின் மீது அம்பை எய்ய, அது உடைந்து சிதறியது. அதிலிருந்த அமிர்தம் ஒரு குளமாக மாறியது. அதுவே மகாமகக் குளம்.
கும்பத்தின் மேலிருந்த பொருட்கள், பல இடங்களில் சிதறி விழுந்தன. அதில் உரி விழுந்த இடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இவரை, முதன் முதலில் வழிபட்டான், சந்திரன். சோமன் என்ற பெயரும் சந்திரனுக்கு உண்டு. இதனால், அந்த லிங்கத்துக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாளை சோமேஸ்வரி என்றனர்.
பிற்காலத்தில் இங்கு பெரிய கோவில் எழுப்பப்பட்டது. கும்பேஸ்வரர் கோவில் அருகிலேயே இந்தக் கோவிலும் அமைந்தது.
தங்கள் தாய், தந்தையை காண, முருகப் பெருமானும் இங்கு வந்தார். ஆறு முகங்கள், 12 கரங்களுடன் மயில் மீது ஏறி வந்த இவரை, ஆறுமுக நயினார் என்றனர். அது மட்டுமா, இவரது திருவடிகளைப் பார்த்தால், பாதரட்சை அணிந்திருப்பதைக் காணலாம். இது மிகவும் வித்தியாசமான அமைப்பு.
இங்குள்ள நடராஜருக்கு, காணா நட்டம் உடையார் என, பெயர் சூட்டியுள்ளனர். இவர் இங்கே ஆடும் நடனத்தை, வேறு எங்கும் காண முடியாது என்ற பொருளில் இது சொல்லப்பட்டிருக்கலாம்.
ஆனால், இவரை வாழ்நாளில் தரிசிக்காமல் போனால், நஷ்டம் அவருக்கல்ல. நமக்குத் தான் என்ற பொருளில், இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது என்கின்றனர், பக்தர்கள்.
இந்த கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக வந்தால் மாலீசர், மங்கள நாயகியையும்; கட்டை கோபுரத்தைக் கடந்தால், சோமநாதர், தேனார்மொழி அம்பாளையும்; வடக்கு வாசலை ஒட்டி, சோமேஸ்வரர், சோமேஸ்வரியையும் தரிசிக்கலாம்.
ராஜகோபுரம் வழியே தான், பக்தர்கள் பெரும்பாலும் வருவர். 1964ல், 100 பக்தர்கள் சேர்ந்து ஆளுக்கு லட்சம் வீதம், நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரம் எழுதி, ஒரு பெட்டியில் வைத்தனர். இந்த கோடி மந்திரங்கள் அடங்கிய பெட்டி, பக்தர்களால் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகிலுள்ள பொற்றாமரைக் குளக்கரையில் இந்தக் கோவில் உள்ளது. சோமேஸ்வரரையும், காணா நட்டம் உடையாரையும் தரிசிக்க கிளம்புவோமா!
தி. செல்லப்பா
