PUBLISHED ON : ஜூலை 23, 2023

ஜூலை 27 அப்துல் கலாம் நினைவு தினம்
வாழ்வில் எளிமையும்
கையில் துாய்மையும்
கொண்டவர்!
பேச்சில் இனிமையும்
செயலில் நேர்மையும்
உடையவர்!
அறிவில் கூர்மையும்
லட்சியத்தில் வலிமையும்
கொண்ட மகான்!
உலக அரங்கில்
குனிந்த இந்தியாவை
நிமிரச் செய்தவர்!
ஏவுகணையால்
உலகை ஆச்சரியத்தில்
மூழ்கடித்த இந்திய நாயகன்!
இளைஞர் இதயங்களில்
நம்பிக்கை விதைகளை துாவி
கனவு காண சொன்னவர்!
பேச்சிலும் எழுத்திலும்
செயலிலும் இந்தியாவிற்கு
வலிமை ஊட்டியவர்!
பொதுநல நோக்கில்
தன்னலம் மறந்த
தியாகச் செம்மல்!
வாழ்வோருக்கு
வாழ்வியல் பாடத்தை
வைத்துப் போன ஆசான்!
பதவிக்கு ஆசைப்படாதவரை
பதவி ஆசை கொண்டதில்
ஜனாதிபதியானார்!
பணங்களை நோக்காமல்
மனங்களை நேசித்த
அன்பின் ஆலயம்!
அரசுப் பள்ளியில் பயின்று
அரசை வல்லரசாக்கிய
லட்சிய நாயகன்!
காலங்களின் கைகளில்
என்றென்றும் தவழும்
ஞானக் குழந்தை!
காலந்தோறும் வரலாறுகளே
படிக்கத் துடிக்கும்
அரிய பொக்கிஷம்!
மரித்தும் மனங்களில்
வசிக்கும் வசீகரன்
பிரிக்க முடியாத பிரியம்!
— சங்கீதா சுரேஷ், தருமபுரி.
