
கூடவே இருந்து, உதவி செய்து அருள் புரிகிறது, தெய்வம். இதை அறியாதபோது, தானே சொல்லி விளக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை மகா பாரதத்தில் விவரிக்கிறார், வியாசர்.
துரியோதனனை கீழே தள்ளிய பிறகு, கண்ணன் தலைமையில் பாண்டவர்கள், அவனின் பாசறையை நோக்கிச் சென்றனர். அங்கு போனதும் அவரவர், தங்கள் ரதங்களில் இருந்து இறங்கினர்.
அப்போது, 'அர்ஜுனா, உன்னுடைய காண்டீபம் எனும் வில்லையும், பெரியவைகளான இரண்டு அம்பறாத்துாணி (அம்புக் கூடு)களையும் கீழே இறக்கு; நீயும் இறங்கி விடு. பிறகு நான் இறங்குகிறேன். இது உனக்கு நன்மையைத் தரும்...' என்றார், கண்ணன்.
அர்ஜுனனும் அவ்வாறே செய்ய, தான் பிடித்திருந்த குதிரைகளின் கடிவாளங்களை விட்டு இறங்கி, விலகி நின்றார், கண்ணன்.
அந்த நேரத்தில், தேரின் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகிச் சென்றார். அடுத்த விநாடி, தீப்பிடித்து எரிந்து சாம்பலானது, தேர்.
பாண்டவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அர்ஜுனன் கைகளைக் கூப்பிக் கண்ணனை வணங்கி, 'பகவானே, என் தேர் எரிந்து சாம்பலாகி விட்டதே. ஏன் இவ்வாறு ஆயிற்று என, அறிய விரும்புகிறேன்...' என்றான்.
'அர்ஜுனா, இந்தத் தேரானது முன்பே, துரோணர், -கர்ணன் முதலியவர்கள் வீசிய அஸ்திரங்களால் எரிந்து போய் விட்டது. நான் இதன் மீது ஏறி இருந்ததால், போரில் இது அழியாமல் இருந்தது.
'உன்னால் ஆக வேண்டிய வேலை முடிந்து விட்டதால், உன்னைக் காப்பாற்ற வேண்டி, முதலில் இறங்கச் சொல்லி, அதன்பிறகு நான் இறங்கினேன். அவர்கள் வீசிய அஸ்திரங்களின் சக்தியால் தேரும் எரிந்தது...' என்றார், கண்ணன்.
தர்மரைக் கட்டித்தழுவி, 'தர்மரே, தெய்வாதீனமாக நீங்களும், உங்கள் சகோதரர்களும் வென்றீர்கள். முன்பொரு சமயம் நான், அர்ஜுனனுடன் உங்களைப் பார்க்க வந்த போது, 'கண்ணா, என் சகோதரனும், உன் நண்பனுமான இந்த அர்ஜுனனை ஆபத்துகளில் இருந்து காப்பாற்று...' என்று வேண்டினீர்கள்.
'அதன்படியே இதோ, அர்ஜுனனைப் போரில் காப்பாற்றி விட்டேன்...' என்று கூறி முடித்தார், கண்ணன்.
தர்மருக்கு ஆனந்தக் கண்ணீர் ததும்பியது. அவர் கைகளைக் கூப்பி, 'பகவானே... துரோணர், கர்ணன் முதலான மாவீரர்களின் பிரம்மாஸ்திரத்தை, உங்களைத் தவிர வேறு யாரால் தாங்க முடியும்?
'எங்களைக் கட்டிக் காப்பாற்றியது நீங்களல்லவா... உங்கள் அருளால் தானே, நானும், இவர்களும் பகை நீங்கித் துயர் நீங்கினோம்...' என்றார்.
தெய்வம் கூட இருந்து உணர்த்துகிறது; செயல்படவும் வைக்கிறது. உணர்ந்து செயல்பட்டு நலம் பெறுகிறோம் என்பதை விளக்கும் நிகழ்வு இது.
நம்மைச்சுற்றி ஏராளமான நல்லவர்களை தெய்வம் வைத்திருக்கிறது. அவர்கள் நல்லது சொல்லி வழி நடத்துகின்றனர். அவர்களைத் தெய்வமாக உணர்கிறோமோ இல்லையோ, அவமானப்படுத்தாமல், அனைவரிடமும் அன்போடு இருக்க முயல்வோம்; அல்லல்கள் விலகிப் போகும்!
பி. என். பரசுராமன்

