PUBLISHED ON : டிச 18, 2022

பிரபல சண்டை இயக்குனர், ஜூடோ ரத்தினம், தம் நண்பர்களுடன் இணைந்து, நல்லதுக்கு காலமில்லை என்ற படத்தை எடுத்தார். அதன் படப்பிடிப்பு திருப்பதி அருகே நடந்தபோது, வழக்கம்போல் தாமதமாக வந்தார், ஜெய்சங்கர்.
படக்குழு ஒரு திட்டம் போட்டது. அதன்படி, 'நீங்கள் மட்டும் தினமும் தாமதமாக வருகிறீர்கள். நாங்களெல்லாம் உங்கள் ஒருவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், சார்...' என்றார், படத்தின் கதாநாயகி ஸ்ரீப்ரியா.
ஸ்ரீப்ரியா சொன்ன நேரம், காலை, 8:00 மணி.
உடனே, 'அப்படியா, நீங்கள் எத்தனை மணிக்கு தினமும் வருகிறீர்களோ... அதற்கு அரை மணி நேரம் முன்பே, நான் நாளை வந்து விடுகிறேன்...' என்றார், ஜெய்சங்கர்.
'என்ன பந்தயம்...' என்றார், ஸ்ரீப்ரியா.
'நான், 7:30 மணிக்கு முன் இருப்பேன்...' என, 2,000 ரூபாய் பந்தயம் கட்டினார், ஜெய்.
மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்கு சரியாக, 7:30 மணிக்கே வந்து விட்டார், ஜெய்சங்கர். வழக்கமாக, 8:00 மணிக்கு வரும் ஸ்ரீப்ரியா, அன்று தாமதமாக, 8:30 மணிக்கு தான் வந்தார்.
பந்தயத்தில் தோற்ற ஸ்ரீப்ரியா, 2,000 ரூபாயை எடுத்து, ஜெய்சங்கரிடம் தந்தார். உடனே ஜெய், தன்னிடமிருந்த, 2,000 ரூபாயையும் அதனுடன் சேர்த்து, புரொடெக் ஷன் உதவியாளரை அழைத்து, அன்று படக் குழுவினருக்கு அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். தயாரிப்பாளர் ஜூடோ ரத்தினத்துக்கு ஆச்சரியம்.
'நிச்சயம் நீங்க பந்தயத்துல தோப்பீங்கன்னு தான் எல்லாரும் நினைச்சோம். எப்படி இந்த அதிசயம் நடந்தது...' என்றார்.
அதைக் கேட்டு கலகலவென சிரித்த ஜெய், 'நம் படத்துல வேலை செய்ற தொழிலாளர்கள், பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டு இங்கே கிடக்கிறாங்க. ஒருநாள், நான் சீக்கிரம் வர்றதன் மூலமா, அவங்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்ற வாய்ப்பு கிடைக்கிறப்ப, அதை விடுவேனா...
'அதான், நேற்று ஸ்ரீப்ரியா பந்தயம் கட்டும்போதே, நாளைக்கு சீக்கிரம் வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...' என்றார்.
ஜெய்சங்கருடன் படப்பிடிப்பு என்றால், அவருடைய உற்சாகம் உடன் நடிப்பவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும். வேடிக்கை, விளையாட்டு என, உற்சாகமாக வேலை நடக்கும்.
சினிமாவில், 'அண்ணே' என்ற அடிமை வார்த்தையை அழித்தொழித்ததில் ஜெய்சங்கருக்கு தனி இடம் உண்டு. அதற்கு பதில், 'ஹாய்' என, சமத்துவ வார்த்தையை சினிமாவில் பழக்கினார். உண்மையில், இது நாடக உலகிலேயே அவரிடம் துவங்கிய பழக்கம்.
படப்பிடிப்புக்கு வந்தால், காரிலிருந்து இறங்கும் போதே, லைட்மேனில் துவங்கி தயாரிப்பாளர் வரை, ஒருவரையும் விடாமல் எல்லாருக்கும் ஒரே விதமான புன்னகையோடு, 'ஹாய்' என, உற்சாக குரலில் சொல்வார். ஜெய்சங்கர் படப்பிடிப்பில் இருந்தால், பக்கத்து ப்ளோரில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்துவிடும்.
பத்திரிகையாளர் எம்.பி.மணி கூறிய தகவல் இது:
சென்னை, நுங்கம்பாக்கம், காலேஜ் லேனில், ஜெய்சங்கர் வீடு. மாடியில் அவரது தனி அறை. படப்பிடிப்பிற்கு புறப்படும்போது, கீழே உள்ள ஹாலுக்கு வருவார். நண்பர்கள், ரசிகர்களுடன் அங்கே சந்திப்பு. அதன்பின், மின்னலாய் வெளியேறி, காரில் பறந்து விடுவார். வழி நெடுக, 'ஹாய் ஹாய்... ஹலோ ஹலோ...' தான்.
அன்று, ஜெய் புறம்படும் போதே, அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. அந்த சமயம், தன் தம்பிகளுக்கு உதவுவதற்காக, ரியல் எஸ்டேட் பிசினசிலும், அவர் கால் பதித்திருந்தார்.
அப்பார்ட்மென்ட்கள் கட்டி விற்கும் பொறுப்பை, தம்பிகளிடம் ஒப்படைத்திருந்தார். அதில், கட்டுமான பணிகளை ஏற்றிருந்த கான்டிராக்டர் ஒருவர், ஜெய்சங்கரை பார்க்க வந்திருந்தார்.
கணக்கு வழக்குகளில், கான்டிராக்டர் ஏதோ தவறு செய்து விட்டார் போலும். அது தெரிந்து, கொதித்து போயிருந்தார், ஜெய். ஹாலுக்குள் நுழையும்போதே எரிமலை உஷ்ணம். கான்டிராக்டரை உண்டு இல்லை என்றாக்கி விட்டார்.
காத்திருந்த யாரையும் பார்க்கும் மூடில் இல்லை. கோபத்துடன் அவசரமாக வெளியேறி, காரை நெருங்கிய போது, அங்கே நின்றிருந்த இள வயது பெண் ஒருவர், ஏதோ பேசுவதற்காக கும்பிட்டார். இரண்டு எட்டு காலை முன்னே எடுத்து வைக்க, சுடு சட்டியில் போட்ட கடுகாக பொரிந்து தள்ளிவிட்டார், ஜெய்.
அந்தப் பெண் குபுக்கென அழுது, முந்தானையால் முகத்தை மூட, எனக்கு சங்கடமாகி விட்டது.
காரில் செல்லும் போது, 'என்ன இது, எப்போதும் இல்லாத வழக்கம். ஜெய்க்கு இவ்வளவு கோபம் வருமா...' மெல்ல கேட்டேன்.
'பின்னே என்னப்பா, அந்த கான்டிராக்டர் எவ்வளவு ஏமாற்றியிருக்கான் தெரியுமா? நானும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் தானே... சினிமாக்காரன்னா தப்பா சம்பாதிக்கிறவன்னு நினைச்சிடுறாங்க போல...
'ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கோ, நாம முட்டாளா இருக்கலாம்; தப்பில்லை. ஆனால், மற்றவன் நம்மை முட்டாளாக்க இடம் கொடுத்து விடக்கூடாது...' என்ற ஜெய்சங்கரின் வார்த்தையில் அழுத்தம் இருந்தது.
'கான்டிராக்டர் தப்பு பண்ணினான். திட்டித் தீர்த்துட்டீங்க. அந்த பொண்ணு என்ன தப்பு பண்ணினாள்... அவளை ஏன் காய்ச்சி எடுத்தீங்க...' என்று கேட்டேன்.
சட்டென, 'எந்தப் பெண், நான் திட்டினேனா?' அவர் வார்த்தைகளில் லேசான அதிர்வு.
கோபத்தோடு புறப்பட்டபோது, ஒரு பெண் கும்பிடு போட்டதையும், திட்டியதும், அந்த பெண் அழுததையும் விவரித்தேன்.
உடனே டிரைவரிடம், 'மாரிமுத்து, காரை வீட்டுக்கு விடு...' என்றார், ஜெய்.
ஜெய் வீட்டை நோக்கி விரைந்தது, கார்.
வழியில் கண்ணீரை துடைத்தபடி வந்த பெண்ணை, ஜெய்க்கு அடையாளம் காட்டினேன், நான். காரை, அந்த பெண் அருகே மெதுவாக விட்டார், டிரைவர் மாரிமுத்து.
தலையை வெளியே நீட்டிய ஜெய், 'வீட்டுக்கு வந்துட்டு போம்மா...' என்றார்.
மீண்டும் கார் வேகம் எடுத்தது.
வீட்டு போர்டிகோவில் ஜெய் காத்திருக்க, அரக்கபரக்க ஓடி வந்தாள், அந்த பெண். ஜெய் உதவியால் நர்சிங் கோர்ஸ் முடித்திருப்பதாகவும், பணியில் சேர, யூனிபார்ம், ஷூ, வாட்ச், பேனா என, சில பொருட்கள் வாங்க, உதவி கேட்டு வந்திருக்கிறார்.
விபரம் தெரிந்ததும், ரொம்பவே வருந்தி, அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு, அவருக்கு தேவைப்படுவதை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இப்படி, கோபமும், குணமும் இணைந்த மனிதாபிமானி என்று, ஜெய்சங்கரை நம் முன் நிறுத்துகிறார், எம்.பி.மணி.
மாடர்ன் தியேட்டர்சுக்கு உதவிய ஜெய்சங்கர்...
- தொடரும்.- இனியன் கிருபாகரன்