/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! - ஊரார் குறைகளை அடுக்கும் முன்...
/
கவிதைச்சோலை! - ஊரார் குறைகளை அடுக்கும் முன்...
PUBLISHED ON : ஜன 19, 2020

வீதியெல்லாம் குப்பையென
வாய் கூசாமல் கூறும் முன்
வீட்டில் கூட்டிய குப்பையை
வீதியில் வீசியெறிவதை
முதலில் நிறுத்துங்கள்!
தடை செய்த நெகிழிப் பைகள்
தாராளமாய் புழங்குவதாக
புலம்புவதற்கு முன்
பூ வாங்க, பழம் வாங்க
நெகிழி பை கேட்பதை
முதலில் நிறுத்துங்கள்!
குடி குடியைக் கெடுக்குமென
உபதேசம் செய்யும் முன்
'மேலை நாகரிகம்' என
குடித்து மகிழ்வதை
முதலில் நிறுத்துங்கள்!
லஞ்ச லாவண்யம்
நாட்டில் பெருகி விட்டதாய்
'கமென்ட்' அடிக்கும் முன்
பேசியதை நைசாய் போட
மேஜை டிராயர் திறக்கும்
ஆதி கலாசாரத்தை
முதலில் நிறுத்துங்கள்!
'பொம்பளப் பொறுக்கி'களை
பொதுவாய் துாற்றும் முன்
வக்கிரப் பார்வையால்
பெண்களை சுவீகரிப்பதை
முதலில் நிறுத்துங்கள்!
மேலதிகாரிகள், எரிந்து விழும்
சிடுமூஞ்சிகளென ஏசும் முன்
மனைவியிடமும், குழந்தைகளிடமும்
'சிடுசிடு'வென விழுவதை
முதலில் நிறுத்துங்கள்!
ஊரார் குறைகளை அடுக்கும் முன்
அவரவர்களிடம் உள்ள குறைகளை
முதலில் கண்டு களையுங்கள்!
சாய், சென்னை.

