
ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழி காட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேர்மையானவர்; தைரியமானவர். தவறு செய்பவர் யாராக இருப்பினும் தட்டிக் கேட்க தயங்காதவர்.
உலகின் கொடுங்கோலன் என்று சொல்லப்படும், ஹிட்லர், 'எனது போராட்டம்' என்ற வாழ்க்கை நுாலில், இந்தியாவை பற்றி தவறாக எழுதியிருந்தார்.
இச்செய்தி தவறானவை என்பதை, அவருக்கு உணர்த்த எண்ணினார், நேதாஜி. ஜெர்மனியில், ஹிட்லரை சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது.
'ஜெர்மனியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்...' என்று, நேதாஜியை கேட்டார், ஹிட்லர்.
வெள்ளையர்களிடமிருந்து, இந்தியாவை காப்பாற்ற உதவி கேட்டு வந்திருக்கிறார் என்று நினைத்து, இப்படி கேட்டார், ஹிட்லர்
ஆனால், ஹிட்லரிடம், 'தாங்கள் எழுதிய, 'எனது போராட்டம்' என்ற நுாலில், இந்தியாவை பற்றி தவறாக எழுதியுள்ளீர்; அந்த பகுதியை நீக்குங்கள்...' என்றாராம், நேதாஜி.
நேதாஜியின் நாட்டுப்பற்றை கண்டு வியந்த, ஹிட்லர், அதற்கு சம்மதித்தார்.
க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: 'பிறவி தலைவர்' என, காந்திஜியால் பாராட்ட பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதா என்றால், தலைவர் என்று பொருள். ஜி என்ற சொல், மரியாதையை குறிக்கும். தலைவர் என, உலக மக்களால் கருதப்பட்டார், சுபாஷ் சந்திரபோஸ்.
தன், ஐ.சி.எஸ்., பதவியை, நாட்டு விடுதலைக்காக ராஜினாமா செய்த முதல் இந்தியர், சுபாஷ் சந்திரபோஸ். 1932ல், சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம், 'இந்திய போராட்டம்' என்ற நுாலை எழுதினார்.
சந்தர்ப்பவாத அரசியலை வெறுத்தவர், நேதாஜி. உலக போரை பயன்படுத்தி, சுதந்திரம் வாங்க நினைத்தார். அவரை வீட்டுக் காவலில் வைத்தது, ஆங்கிலேய அரசு.
நகைகளை சேர்த்து, நேதாஜியிடம் கொடுத்து, வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வலியுறுத்தினர், இந்திய பெண்கள். அவர் வந்தால், தடையின்றி அனுமதிக்கும்படி ஆணையிட்டது, ரஷ்யா.
தாய் நாட்டுக்காக தப்பினார், நேதாஜி. 66 ஒற்றர்கள், அவர் வீட்டை காவல் காத்திருந்தனர். இருந்தும், அவர் தப்பியதை அவர்களால் அறிய முடியவில்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்று, பின், பெர்லினை அடைந்தார். அங்கு, பேரம் பேசாத வீரர்களுடன் இந்திய படையை அமைத்தார். புலி சின்னத்தை கொடியாக்கினார். ஜனவரி, 1942 முதல், சுபாஷை, மரியாதைக்குரிய தலைவர் என, பொருள்படும்படியாக, நேதாஜி என அழைத்தனர், மக்கள்.
நடுத்தெரு நாராயணன்

