PUBLISHED ON : நவ 06, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலர்கள்
கீழே வீழவில்லை எனில்
கனிகள் ஏது?
மரம் இலைகளை
உதிர்க்கிறது எனில்
துளிர்கள் வருமென்ற
நம்பிக்கையில் தானே!
சேமித்த நீர்த்துளிகளை
மேகம் சிந்துவதால் தானே
மழையும், நதியும், அருவியும்
மற்றும் உலகில் உள யாவும்!
நிலவின் தேய்வு
தோல்வியா என்ன...
அது முழு பிறை காணும்
முயற்சியில் தானே
ஒவ்வொரு திங்களும் ஓடுகிறது!
பூமியின் ஒரு பக்கம்
இருள் தரும் சூரியன்
மறுபக்கம் ஒளி தானே
தந்து கொண்டிருக்கிறான்!
வாழ்க்கை நாளும் உன்னை
வாட்டி எடுக்கிறதா...
திக்கு தெரியா காட்டைப் போல்
கண்ணாமூச்சி காட்டுகிறதா?
கொஞ்சம் தலையுயர்த்திப் பார்
முடிவிலியாய் தெரியும் வானத்தில் கூட
பறவைகள் திசையறியும் போது
உன் பாதச் சுவடுகளுக்குக் கீழ் இருக்கும்
பூமியில் உன்னால் திசையறிய முடியாதா!
இ.எஸ். லலிதாமதி,
சென்னை.