sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விளம்பரம்!

/

விளம்பரம்!

விளம்பரம்!

விளம்பரம்!


PUBLISHED ON : நவ 06, 2022

Google News

PUBLISHED ON : நவ 06, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணாடி முன் நின்று மீசைக்கு கறுப்பைத் தடவி, முறுக்கி விட்டுக் கொண்டார், வெற்றி விமலர். கட்சிக் கரையிட்ட புது வெள்ளை வேட்டி, சட்டையில் இருந்தார்.

''எத்தனை நேரம் அலங்காரம் பண்ணிக்குவீங்க?'' பட்டுப் புடவையின் மடிப்புக்களை நீவியபடி கேட்டாள், சரோஜா.

செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டி, ''அட, இருக்கட்டுமேடி... எத்தனை சேனல்காரங்க வருவாங்க. பார்க்க நல்லா இருக்க வேண்டாமா, உன் வீட்டுக்காரன்... நீ மட்டும் பளபளன்னு பட்டுப் புடவையும், நகைகளுமா ஜொலிக்குறியே...

''சரி, நேத்து அந்த வாசுதேவன் கொடுத்த பணத்திலிருந்து, மூன்று லட்சம் எடுத்து இந்த பெட்டிக்குள்ள வை.''

''எதுக்கு?''

''இன்னைக்கு அந்த கோமதி ஹோமுக்கு கொடுக்கணும்ன்னு சொன்னேனே.''

''மூணா, ரொம்ப அதிகமுங்க. நேத்து நம் வைஜுவுக்கு ஒரு யெல்லோ டயமண்ட்ல...''

''அட எடுத்து வை, சரோஜா... அதாவது, கொடுத்தாதான் தலைவருன்ற, 'கெத்' இருக்கும். வாசுதேவன் தந்ததுல, இது, 10 சதவீதம் கூட இல்லையேம்மா.''

மாடியை விட்டு இறங்கியவர், பெரிய ஹாலுக்குள் நுழைந்த போது, சோபாக்களில் உட்கார்ந்திருந்த சிறு கூட்டம், தபதபவென்று வேட்டி சரசரக்க எழுந்து நின்று, 'பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா!' என்றது, பல சுருதிகளில்.

அவர்கள் கைகளில் மாலை, பூங்கொத்து, பரிசுகள் என்று, எதிர்காலத்துக்கான முதலீடுகள்.

அரசியல் பின்புலமிக்க பெரும் புள்ளியான வெற்றி விமலர், பலவித சிரிப்புகளோடு அவற்றை வாங்கிக் கொள்ள, 'ஸ்டில், வீடியோ கேமரா'க்களில் படங்கள் நிறைந்தன.

அவரவர் சால்வை, மாலை என்று, 'போஸ்' கொடுத்தனர்.

பின்னால் இருந்த உதவியாளன் கஜபதி, எல்லாவற்றையும் வாரிக் கொண்டு, அறைக்குள் சென்றான்.

''எல்லாருக்கும் நன்றி, நான் கிளம்பணும். மாம்பாக்கத்துகிட்ட அனாதைப் பிள்ளைங்க இல்லம் இருக்காமே, அங்கே நன்கொடை கொடுத்துட்டு வரணும். பொறந்த நாள்ல ஏதாச்சும் நல்லது செய்யணுமில்ல... என்ன கஜா, நான் சொல்றது.''

''அய்யா சொல்றது ரொம்ப ரொம்ப சரிங்க.''

வந்தவர்களை வெளியே அனுப்பும் வேலையை சரியாக செய்து முடித்தான், கஜபதி.

வெளியே வந்த வெற்றி, தன், 'ஆடி' காரில் ஏறு முன், ஒருமுறை வீட்டின் முன்பக்க பெரிய வளாகத்தை நோட்டம் விட்டார்.

நாலைந்து, 'இன்னோவா'வில், அவருக்கு பெருமை சேர்க்க, பயணிக்கத் தயாராக இருந்த கட்சி ஆட்கள் மற்றும் கட்சி சார்பு சேனல்களின் நிருபர்கள் என்று பலரும், பரபரப்புடன் போட்டி போட்டு வணக்கம் கூறினர்.

''வெளியவும் வண்டிங்க நிக்குது; அஞ்சாறு, 'சுமோ'வில ஆளுங்க வராங்க,'' மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக சொன்னான், கஜபதி.

சரோஜாவோடு வெற்றி விமலரும், தன் காரில் ஏறிக் கொள்ள, பின்னாலேயே, 'இன்னோவா, சுமோ'களுடன், 'கான்வாய்' கிளம்பியது.

இரண்டு கிரவுண்டு பழைய வீட்டை, 'கோமதி அம்மாள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்' ஆக மாற்றியிருந்தனர்.

முன்புறம் நிறைய இடம் திறந்தவெளியாக விட்டு, கட்டடம் இரண்டு பகுதிகளாக உள்வாங்கியிருந்தது. முன்பக்க திறந்த வெளியில், 'ஷாமியானா' பந்தலில் பிளாஸ்டிக் நாற்காலிகள், 1 அடி உயர மேடையிலும் நாற்காலிகள் மற்றும் ஒரு டேபிள் பேன்.

வரப்போகும் பெரும் புள்ளிக்கு பிறந்தநாள் என்பதால், இல்லத்துக் குழந்தைகளின் கைகளில் கயிறுகளில் கட்டப்பட்டிருந்த பலுான்கள். காற்றே இல்லாமல் ஆடும் காகிதத் தோரணங்கள்.

வாசலில் பெரிய கோலம்; அதில், 'வெல்கம்!' நுழைவாயிலில் வைத்துள்ள கரும்பலகையில், 'வெற்றி விமலர் அய்யா அவர்களே வருக' என்று, கலர் சாக்பீஸ் எழுத்துக்கள். டேபிளில் பன்னீர், கல்கண்டு கொண்ட ரோஜா தட்டுகள்.

மெயின் சாலையிலிருந்து குறுகிய மண் சாலையில், முதல் இரண்டு, 'இன்னோவா'கள் திரும்பியதும். வெற்றி விமலரின், 'ஆடி' காரும் நுழைந்தது.

அதுவரை லேசான குறட்டையிலிருந்த வெற்றி, காரின் ஆட்டத்தில் கண் விழித்து, ''எங்கடா போறீங்க,'' என்று கத்தினார்.

''முன்னாடி நம் ஆளுங்க, கஜபதி சார் எல்லாம் போறாங்க. அந்தப் பாதையில தான் வண்டி போகுதுய்யா!''

துாக்கத்தில் இருந்த சரோஜா மெல்ல நிமிர்ந்து, ''என்னாங்க இது, சாலை இவ்வளவு மோசமா இருக்கு.''

''கூப்பிடுடா அந்த கஜபதியை.''

உத்தரவுக்குப் பணிந்த டிரைவர், போனை எடுத்தான்; முன் வண்டியில் சென்று கொண்டிருந்த கஜபதியை அழைத்து, பின்னால் இருந்த அய்யாவிடம் பவ்யமாக நீட்டினான்.

''என்னாடா கஜா, ஏதோ நல்ல பிரபல ஹோமா இருக்கும்ன்னு பார்த்தா, எங்கியோ அனாமத்தா இருக்கிற இடமாப் பிடிச்சிருக்கே.''

''அய்யா, நம்ம சுப்புதான் இந்த இடத்தை சொன்னான். இந்த ஏரியாவுல நமக்கு அவ்வளவா ஓட்டு இல்லீங்க. அதனால, இங்கே ஏதாச்சும் செய்து, நல்ல பேர் வாங்கினா நல்லது தானுங்களே.''

முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு வண்டிகளும் திடீரென நின்று விட, 'ஹாரன்'கள் அலறின.

'ஆடி'யும் நின்றது.

''என்னடா வேலு?''

தலையை நீட்டி எட்டிப் பார்த்து, ''பெரியவரு ஒருத்தர், நடு பாதையிலே போயிட்டிருக்காரு. காது கேக்காது போல, 'ஹாரன்' அடிச்சும் நகரல. முதல் வண்டி டிரைவர், வண்டியை நிறுத்திட்டு, அந்த ஆளை திட்டி, ஓரமா நகர்த்திட்டு வந்திருக்காரு,'' என்றான், டிரைவர்.

வண்டிகள் நகர்ந்து செல்லும் போது, அந்தப் பெரியவர் ஓரமாக நின்றிருந்தார்.

வேட்டி, அரைக்கை சட்டை, துண்டு, நரைத்த தலை, ரப்பர் செருப்பு. வயது 70, இருக்கும். 'மாஸ்க்' அணிந்திருந்தார், கிராமத்துப் பெரியவர்.

''உன் பையில, 'மாஸ்க்' இருக்கு, எடு சரோஜா. நீயும் மாட்டிக்க; அப்புறம் எவனாச்சும், 'மாஸ்க் போடாம வந்தார் வெற்றி விமலர்'ன்னு கிளப்புவான்.''

அத்தனை கார்களையும் ஒரே நேரத்தில் பார்த்ததும், அதிர்ந்து போனது அந்த தெரு.

இல்லத்து வாசலில் இறங்கியதும், அதன் நிர்வாகி சிவசங்கரும், அவர் மனைவி உஷாவும் கும்பிட்டு வரவேற்றனர்.

உதவியாளர்கள், ஆசிரியைகளுடன் இன்னும் சிலர், வரிசையில் நின்று கைகூப்பினர்.

கொண்டை போட்ட பெண், புன்னகையுடன் பன்னீர் தெளித்து, கல்கண்டு நீட்டினாள்.

தலையசைத்தபடி சேனல்களுக்கு முகம் தெரிய, சிரித்தபடி, கல்கண்டை வாயில் போட்டு, கேமராவைப் பார்த்தார், வெற்றி.

விரலால் தட்டின் ஓரம் தொட்டு நடந்தாள், சரோஜா.

'ஷாமியானா'வின் கீழே இருந்த குழந்தைகள், வந்த விருந்தினருக்கு இருக்கைகளை கொடுத்து, மேடையையொட்டி கிடைத்த இடங்களில் நின்றனர்.

வெற்றி தம்பதியை, அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

சிவசங்கரின் மேஜைக்குப் பின், சாமந்தி மாலையில், நெற்றியில் பெரிய பொட்டுடன் லட்சணமான அம்மாவின் பெரிய படம்.

''என் அம்மா கோமதி,'' என்றார், சிவசங்கர்.

அறிமுகங்களுக்குப் பின் வந்த, காபி, டீ, இளநீர், சமோசா மற்றும் பிஸ்கட் எதையும் தொடவில்லை, சரோஜா.

வெற்றி மட்டும், 'மாஸ்கை' கழற்றி, பிஸ்கட்டுடன் பாதி டீ குடித்தார்.

இல்லத்தைப் பற்றி விசாரித்தார்.

''அறைகள் அதிகமில்லை; பெரிய கூடங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில், சுமார் நுாறு பிள்ளைகள் வரை தங்க முடியும். 2 கி.மீ., தொலைவில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை படிக்கும் ஆதரவற்ற சிறுவர் - சிறுமியர் இங்கே இருக்கின்றனர்.

''முதல் பகுதியில், சமையல் அறை, பெண் குழந்தைகள் தங்கும் இடம். அடுத்த பகுதியில் பாய்ஸ். இரண்டு பகுதியிலும் தனி சாப்பாட்டு அறைகள். மொட்டை மாடியில் பந்தல் போட்டு அங்கேயே தங்கும் இரண்டு உதவியாட்களின் அறைகள்,'' என்றார்.

''இல்லத்தை சுற்றிப் பார்க்கலாமா?'' உஷா கேட்க, ''தாராளமாய்...'' என, எழுந்து கொண்டார், வெற்றி.

அறைக்கு வெளியே நின்றிருந்த, கஜபதி, அவரது ஜாடையைப் புரிந்து, சேனல்காரர்களை அழைத்தான்.

''கால் வலிக்குது...'' என்று உட்கார்ந்தவரிடம், கிசுகிசுப்பாக, ''சீக்கிரம் கிளம்புங்க, 6:00 மணிக்கு, வைஜுவும், மாப்பிள்ளையும் வரேன்னிருக்காங்க,'' என்றாள், சரோஜா.

கூடத்தின் சுவரில் மூடியில்லாத வரிசையான அலமாரிகளில், நம்பர் போட்டு பிள்ளைகளின் பை, சாப்பாட்டு தட்டு, டம்ளர்கள்.

சமையலறைக்குள், அண்டா, தவலைகள், பாத்திரங்கள். பெரிய கிரைண்டர் ஓடிக் கொண்டிருக்க, கையில் மாவுடன் ஒரு வயதான அம்மா, வணக்கம் சொன்னார்.

வெளியே, 'ஆஸ்பெஸ்டாஸ்' போட்டு விறகடுப்பில் தான் சமையல்.

அடுத்த பகுதிக்குப் போகாமலேயே உலாவை முடித்து, நிகழ்ச்சியை ஆரம்பிக்கச் சொன்னார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பை தொடர்ந்து, தன் பிறந்த நாளில் இல்லத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து, உரையாற்றினார், வெற்றி விமலர்.

எப்போதுமே ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் தான் துணை நிற்பதையும், சின்ன வயதிலிருந்தே பிறருக்கு உதவி செய்வது தனக்கு பிடித்த விஷயம் என்றும், பலமுறை பல கோணங்களில் பேசி, 'இன்னைக்கு நியூஸ்ல வரணும்' என்று, கவரை நீட்டினார், வெற்றி.

சிவசங்கர் - உஷா இருவரும் பெற்றுக் கொண்ட போது, 'ப்ளாஷ்'கள் மின்னின.

'இவ்வளவு பெரிய மனிதர், தன் பிறந்த நாளில் இந்த இல்லம் தேடி வந்து, உதவி செய்ததற்கு நன்றி...' என்றனர்.

ஒரு மணி நேரத்தில் எல்லாமும் முடிய, விடை பெற்று, காரில் ஏறினர்.

அப்போதுதான், சிவசங்கர், உஷா இருவரும், கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பெரியவரைப் பார்த்தனர். வேட்டி, அரைக்கை சட்டை, நரைத்தலை. பரபரக்க அவரிடம் ஓடினர்.

சற்று முன் கழற்றிய காது மிஷினை மீண்டும் பொருத்திக் கொண்டார், பெரியவர்.

'முத்துகுமாரு அய்யா, நீங்க வந்திருந்தீங்களா, பார்க்கலையே. முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கலாம்ல, உங்களை மேடையில உட்கார்த்தி இருப்போமே...' பதறினர், சிவசங்கர் - உஷா.

''அதனாலதான் வரல. துணிப் பையிலிருந்த கவரை எடுத்து, இந்த மாசம் பென்ஷன் தொகை. என்னால இவ்வளவு தான் முடிஞ்சுது; என் பேரனுக்கு திடீர்னு உடம்பு முடியாம போச்சு.

''மகன் ரொம்பத் திட்டினான்; அவனுக்கு பாதி கொடுத்துட்டேன். கடவுள் அருளிருந்தா, அடுத்த மாசம் இன்னும் தரேன். இந்தாங்க இதில் எட்டாயிரம் இருக்கு. பிள்ளைங்க படிப்புக்கு என்னால் ஆனது,'' என்றார்.

அதை வாங்காமல் கண்ணில் நீர் தளும்ப, ''ஆறேழு வருஷமா, மாசம் தவறாம பஸ்சிலிருந்து இறங்கி, மெயின் ரோட்ல நடந்து வந்து, உங்க, 'பென்ஷன்' பணத்திலிருந்து பெரிய தொகையை தர்றீங்க. உங்க கைச்செலவுக்கு வச்சுக்குங்க அய்யா,'' என்றாள், உஷா.

''எனக்கென்னம்மா செலவு, பஸ்சுக்கும், டீக்கும் வச்சிருக்கேன். பிள்ளை வீட்டுலதானே இருக்கேன். அவன் சோறு போட மாட்டானா. எப்பவும் உங்களுக்கு பத்தாயிரம் தருவேன்; இந்த மாசம் பேரனுக்கு செலவாயிடுச்சு,'' என்றார், பெரியவர்.

''ஒரு போட்டோ எடுத்துக்கலாமா அய்யா...'' தன் மொபைல் போனில், படம் எடுத்தாள், உஷா.

''எடுங்க. ஆனா, எந்த பத்திரிகைக்கும் வேண்டாம்,'' என சிரித்தபடி, 'போஸ்' கொடுத்தார்.

பத்மினி பட்டாபிராமன்






      Dinamalar
      Follow us