PUBLISHED ON : அக் 22, 2023

அ நிறம் | அளவு
விளக்கின் ஒளியில் மயங்கி
விழுகிற விட்டில் பூச்சியாய்
பார்க்கும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படாதே!
சிலந்தி வலை அழகில் விழுந்து
உயிரிழக்கும் பட்டாம் பூச்சியாய்
அனைத்தும் அடைய எண்ணாதே!
துாண்டில் புழுவை விரும்பி
முள்ளில் துடிக்கும் மீனாய்
கண்ணில் காண்பதை விரும்பாதே!
திருட்டு வடை தின்னத் துடித்து
பொறியில் மாட்டித் துன்பப்படும்
எலியாய் என்றும் இருக்காதே!
வேலியைத் தாண்ட நினைத்து
மின்சாரம் பாய்ந்து இறக்கும்
பன்றியாய் எப்போதும் பலியாகாதே!
ரத்தம் குடிக்கக் கடிப்பதால்
அடிபட்டுச் சாகும் கொசுவாய்
பரிதாப நிலைக்கு ஆளாகாதே!
வேடன் விரித்த வலையில்
சிக்கித் தவிக்கும் பறவை போல
சிந்திக்காமல் மாட்டிக் கொள்ளாதே!
நீயொரு மனிதப் பிறவி என்பதால்
உழைத்து மட்டுமே உடல் வளர்க்க
உயிர் உள்ள வரை பேராசைப்படு!
— எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.
