தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சின்ன பாப்பா!

சின்ன பாப்பா!

சின்ன பாப்பா!


PUBLISHED ON : அக் 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஐயோ கடவுளே... இந்த கடுகு டப்பாவுல வச்சிருந்த காசை, எந்த நாயி எடுத்தது?'' பெரிதாக கத்திக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள், அங்காளம்மை.

''ஏலே, ராசுக்குட்டி, கொமரேசா...'' என, குரல் கொடுத்தாள்.

துாரத்தே ஒதிய மரத்தடியில், 'கிட்டி புல்' விளையாடிக் கொண்டிருந்த சட்டையில்லாத சிறுவர்களிலிருந்து பிரிந்து ராசுக்குட்டியும், குமரேசனும் ஓடி வந்தனர்.

'என்னம்மா...' என்று, மூச்சிரைக்க அம்மா எதிரே வந்து நின்றனர்.

சட்டென்று பாய்ந்து இருவருடைய காதையும் பற்றி திருகி, இழுத்தாள்.

''திருட்டு நாய்ங்களா... கடுகு டப்பாவுல வச்சிருந்த நுாறு ரூபாயை எவன்டா எடுத்தது?''

'ஐயோ, சத்தியமா நாங்க எடுக்கலைம்மா...' என, இருவரும் கோரஸாக கத்தினர்.

''பொய் சொன்னீங்க மென்னியை திருகிடுவேன். உண்மையை சொல்றீங்களா, இல்ல தோசைக் கரண்டிய பழுக்க காய்ச்சி, தொடையில இழுக்கட்டுமா?''

'நாங்க எடுக்கலைம்மா. சின்ன பாப்பா தான் எடுத்திருப்பா...' என்றனர்.

பொசுக்கென அவர்களின் காதுகளை விட்ட அங்காளம்மை, ''சின்ன பாப்பா எடுத்தாளா... நீங்க பார்த்தீங்களாடா?'' என்றாள்.

'நாங்க பார்க்கலைம்மா. ஆனா, அவ புதுசா ஒரு கலர் பாக்ஸ் வச்சி படம் வரைஞ்சுக்கிட்டிருக்கா. இந்த காசை திருடிக்கிட்டுப் போய் தான் வாங்கியிருக்கணும்...' என்றனர்.

''பள்ளிக்கொடத்துல என்னமோ படம் வரைய போட்டி வச்சிருக்காங்கன்னு, கலர் பாக்ஸ் வாங்க காசு குடுன்னு கேட்டா. என்கிட்ட காசு இல்லைன்னு சொன்னதும், நாயி கடுகு டப்பால கெடந்த காசை எடுத்துக்கிட்டுப் போயி கலர் பாக்ஸ் வாங்கியிருக்கா... இன்னைக்கு இருக்கு அதுக்கு தீவாளி. எங்கடா அவ?'' என்றாள்.

'மா மரத்தடியில படம் வரைஞ்சுக்கிட்டிருக்கு...' என சொல்லி, விடுதலைப் பெற்ற உணர்வுடன் இருவரும், 'கிட்டி புல்' ஆடும் இடத்தை நோக்கி பறந்தனர்.

ஆவேசமாக கொல்லைப்புற மா மரத்தை நோக்கி சென்றாள், அங்காளம்மை. போகும் போதே புடவையை துாக்கி சொருகி, கோழி கூண்டுக்கருகே வைத்திருந்த கட்டை விளக்கமாற்றை கையில் எடுத்து கொண்டாள்.

மா மர நிழலில் கால்களை நீட்டி அமர்ந்து, மடியில் அட்டையை வைத்து, வர்ணங்களை குழைத்து குழைத்து துாரிகையோடு இழைந்துக் கொண்டிருந்தாள், சின்ன பாப்பா.

ஆவேசமாக சின்ன பாப்பாவின் உச்சி மயிரைப் பற்றி துாக்கினாள்.

''அம்மா...'' என, அலறிய சின்ன பாப்பா, மடியிலிருந்த ஓவியத்தை தவற விட்டதில், மண்ணில் குப்புற விழுந்தது.

''திருட்டுக் கழுதை. கடுகு டப்பாவுல வச்சிருந்த நுாறு ரூபாயை எடுத்துட்டு போயி கலர் பாக்ஸ் வாங்கியிருக்கே... எம்மாந் திமிருடி உனக்கு?''

''அம்மா, நான் எடுக்கலைம்மா. கலர் பாக்ஸ், எங்க டிராயிங் டீச்சர் கொடுத்தாங்கம்மா.''

''பொய்யா சொல்ற பொய்...'' மகள் மறுக்க மறுக்க, கட்டை விளக்கமாறு பிய்ய பிய்ய விளாசினாள், அங்காளம்மை.

சின்ன பாப்பா போட்ட கூச்சலையும், அழுகையும் கேட்டு, வேலி படலை திறந்து ஓடி வந்தாள், மல்லிகா.

அவளுடைய கையிலிருந்த விளக்கமாற்றைப் பிடுங்கி துார எறிந்துவிட்டு, ''என்னா பொம்பளை நீ... பொம்பளைப் புள்ளையைப் போட்டு வெளக்கமாத்தால அடிக்கிற. லட்சுமி வூட்டுக்கு வருவாளா?'' என, அதட்டினாள்.

''வரமாட்டா. இந்த மாதிரி திருட்டு நாயிங்க இருக்கற வூட்டுல லட்சுமி எப்படி வருவா?'' ஆவேசமாக கத்தினாள், அங்காளம்மை.

''அப்படி என்னா பண்ணிப்புட்டா சின்ன பாப்பா. போட்டு இந்த விளாசு விளாசுற?''

''சரஸ்வதி பூசைக்கு படைக்க, கடுகு டப்பாவுல நான் வச்சிருந்த, நுாறு ரூபாயை திருடிக்கிட்டுப் போயி, இந்த நாயி, கலர் பாக்ஸ் வாங்கியாந்து வச்சுக்கிட்டு படம் வரைஞ்சிக்கிட்டிருக்கு. எம்மா திமிரு, நான் சாமான் சட்டு வாங்கி என்னாத்த படைக்கிறது?''

''இந்தா சின்ன பாப்பா, நீ நல்ல புள்ளைதானே... இப்படி செய்யலாமா? சரஸ்வதிக்கு படைக்க வச்சிருந்த காசை திருடினா, சரஸ்வதி படிப்பு தருவாளா?'' என,, மண்ணில் விழுந்து அழுது கொண்டிருந்த சின்ன பாப்பாவிடம் நியாயம் கேட்டாள், மல்லிகா.

''சத்தியமா, சரஸ்வதி மேல ஆணையா, நான் எடுக்கலை, சித்தி. இந்த கலர் பாக்ஸ் எங்க டீச்சரு கொடுத்தது.''

''பார்த்தியா பார்த்தியா திருடுனதுமில்லாம பொய் வேற சொல்றதை?''

''இந்தா... சின்ன பாப்பா, நல்ல புள்ளை. உன் களவாணி புள்ளைகளைப் புடி. அவனுங்க தான் எடுத்திருக்கணும்.''

''போடி, வந்துட்டா எம் புள்ளைகளை கொறை சொல்ல. எனக்குத் தெரியும், என் ஆம்பளைப் புள்ளைங்க மேல எப்பவும் உனக்கு கண்ணு. அவனுங்க மேல கொறை சொல்றதே உனக்கு வழக்கம்.''

''ஆமா... அதிசயமா நீதான் ஆம்பளைப் புள்ளை பெத்து வச்சிருக்கே பாரு, கண்ணு போடறாங்களாம். நீ, பொம்பளைப் புள்ளையை இப்படி கொடுமைப்படுத்தறதுக்கு, கடைசி காலத்துல, அந்த பயலுக, உனக்கு கஞ்சி கூட ஊத்தாம தெருவுல தள்ளலைன்னா அப்புறம் பாரு.''

''ஆமா, அப்ப நீ வந்து கஞ்சி ஊத்திட்டுப் போ.''

சண்டை வேறு பக்கம் திரும்ப, வேலி படலை திறந்து, திட்டியபடியே போய் விட்டாள், மல்லிகா.

அவள் போன பிறகும், ''மூணையும் பொட்டையா பெத்து வச்சுக்கிட்டு, எப்ப பாரு, ஆம்பளை புள்ளைங்களையே உருட்றது தான் வேலை,'' என்று கத்தினாள், அங்காளம்மை.

'அக்கா... அங்காளம்மையக்கா...' என்ற குரல் கேட்டு, வாசலுக்கு வந்தாள்.

பெரிய வீட்டு டிரைவர் நின்றிருந்தான்.

''என்னா கணேசு... பெரிய வூட்டம்மா அனுப்பினாங்களா?''

''ஆமாக்கா!''

''நான் தான் நேத்தே சொல்லிட்டு வந்தேனே... 'சாணிப் போரு குமிஞ்சிக் கிடக்கு, விராட்டி தட்டிப் போட்டுட்டுப் போ'ன்னாங்க. பண்டிகைன்னா இவங்க வூட்ல மட்டும் தான் வேலையிருக்குமா?

''குடிசையாயிருந்தாலும், கூட்டி மெழுகி, கோலம் போட்டு, நாங்களும் வெளக்கேத்தி வேண்டிக்கணும்ல்ல... 'ரெண்டு நாளு கழிச்சு வந்து தட்டிப் போடுறே'ன்னு சொல்லிட்டுத்தானே வந்தேன். உன்னை எதுக்கு அனுப்பி இருக்காங்க?''

''தெரியலைக்கா... சின்ன பாப்பாவை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க.''

ஆத்திரமாக இடுப்பில் கை வைத்தபடி, ''நல்லாயிருக்கே... ரெண்டு நாள், அந்த சாணி போரை பார்த்துக்கிட்டிருக்க முடியாதாம்மா, உங்க முதலாளியம்மாவுக்கு? சின்ன புள்ளையை கூப்பிட்டு விட்டிருக்காக. நான் செய்யலைன்னா என் பொண்ணை வேலை வாங்கணுமா?'' என்றாள், அங்காளம்மை.

கொல்லை வழியாக உறவை முறித்துக் கொண்டு போன மல்லிகா, வாசல் வழியாக வந்து உறவை புதுப்பித்தாள்.

''அக்கா... அந்தப் புள்ளையை அனுப்பி, தட்டிப் போட்டுட்டு வரச்சொல்லேன். பெரிய வூட்டுக்குப் போயி விராட்டி தட்டிப் போட்டுட்டு வந்தா, காசு குடுப்பாங்கல்ல. அத வச்சி, நீ சரஸ்வதி பூசைக்கு படையல் போடலாமில்ல.''

மல்லிகாவின் யோசனையும், சரியாகத்தான் தோன்றியது.

''ம்... நீ சொல்றதும், சரியாத்தான் படுது. திருட்டுக் கழுதை, பணத்தை திருடுச்சுல்ல. அதுவே சம்பாதிச்சு கொண்டு வரட்டும். அதுதான் அதுக்கு தண்டனை... ஏய், சின்ன பாப்பா...'' கத்தியபடியே மாமரத்தடிக்கு வந்தாள்.

அழுதபடியே, மண் அப்பிப் போன தன் ஓவியத்தை துடைத்துக் கொண்டிருந்தாள், சின்ன பாப்பா.

''இதபாரு, பெரிய வூட்ல கூப்பிட்டிருக்காக. போயி விராட்டி தட்டிப் போட்டுட்டு, காசு கொடுப்பாக வாங்கிட்டு வா. மாட்டேன் கீட்டேன்னு மொரண்டு புடிச்சே கட்ட வெளக்கமாறு தான் மறுபடியும் பேசும்.''

அங்காளம்மையின் மிரட்டலில் பயமாய் தலையசைத்தபடி, ஓவியப் பொருட்களை கொண்டு வந்து உள்ளே வைத்து விட்டு, பெரிய வீட்டுக்கு போனாள், சின்ன பாப்பா.

பொழுது போக திரும்பி வந்தவள், அம்மாவின் கையில் பெரிய வீட்டம்மா கொடுத்த பணத்தை கொடுத்தாள். வாங்கிய அங்காளம்மை அதிர்ந்தாள். சுளையாய், 500 ரூபாய்.

''என்னாடி, 500 ரூபாய் கொடுத்திருக்கா மவராசி. ம்... எல்லாத்துக்கும் சேர்த்து வேலை வாங்கிட்டாளா?''

எதுவும் பேசாமல் போய் சுருண்டு படுத்துக் கொண்டாள், சின்ன பாப்பா.

'பாவம்... அம்புட்டு சாணியையும் தட்டிப் போட்டுட்டு வந்திருப்பா...' என, மனம் இளகி, மகளுக்காக, கடுங்காப்பி போடப் போனாள், அங்காளம்மை.

வேலிப்படலை திறந்து, குடிசைக்குள் நுழைந்தவாறே, ''அக்கா...'' என்றாள், மல்லிகா.

பளிச்சென வந்து நின்றவளைப் பார்த்த, அங்காளம்மை, வாயைப் பிளந்து, ''என்னாடி... சீலபேணு புடிச்சு சிக்கா தலை வாராம கிடக்கறவ, சீவி சிங்காரிச்சு சின்னாளம் பட்டு கட்டிக்கிட்டு எங்க கிளம்பிட்டே?'' என்றாள்.

''அக்கா... பெரியவூட்டம்மா கொலு வச்சிருக்காங்களாம். எல்லாரும் போறாளுங்க பார்க்க. நானும் போறேன் வாரீயா?''

''ஆமா, பணம் இருக்கறவக கொலுவும் வெப்பாங்க; கோவிலும் கட்டுவாங்க. உனக்குத்தான் வேலை இல்லை, ஊர் சுத்துவ. எனக்குமா வேலை இல்ல?''

''அக்கா... கொலு பார்க்க வர்ற பொம்பளைகளுக்கெல்லாம், பெரிய வூட்டம்மா, புது சேலை தர்றாங்களாம்,'' என்றாள், மல்லிகா.

''அப்படியா... அதை முதல்லயே சொல்றதுக்கென்ன? இரு, ஒரு நிமிசத்துல சேலை மாத்திக்கிட்டு வந்துடறேன்,'' என்றாள், அங்காளம்மை.

ஊர் பெண்டுகள் எல்லாரும், பெரிய வீட்டம்மா வீட்டில் தான் இருந்தனர்.

படியமைத்து, அலங்காரம் செய்து, அழகழகான பொம்மைகளை, 'பளிச்'சென கொலுவில் வைத்திருந்தாள், பெரிய வீட்டம்மா.

ஊரில் அவங்க வீட்டில் மட்டும் தான், கொலு வைக்கும் வழக்கம் இருந்ததால், எல்லாரும், 'ஆ' என, வாயைப் பிளந்து, ஆச்சரியமாகப் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தனர்.

அங்காளம்மையும், மல்லிகாவும் வந்ததும், வாசலுக்கே ஓடி வந்து வரவேற்று, ''எங்க... சின்ன பாப்பாவை அழைச்சுக்கிட்டு வரலியா?'' என்றாள், பெரிய வீட்டம்மா.

''அது வரலை...'' என்று சமாளித்தாள், அங்காளம்மை.

''அவளை அழைச்சுக்கிட்டு வராம ஏன் வந்தே... சாயந்தரம் வாடின்னு அவக்கிட்ட சொல்லி அனுப்பினேனே. இங்க, இத்தனை சாமிங்க இருந்தாலும், உண்மையான சரஸ்வதி அவள் தான்.

''பாரு, இந்த பொம்மைகளெல்லாம், புதுசு மாதிரி எப்படி மினுக்குது. அத்தனையும் பழைய பொம்மைகள், எல்லாத்துக்கும் அழகா வர்ணம் பூசினது, உன் மக தான். அவள் கையில சரஸ்வதி குடி கொண்டிருக்கா.

''பாழடைஞ்சு கிடந்த பொம்மைகளை உயிரோட கொண்டு வந்துட்டா, பாரு. காலையில, 'பெயின்ட்' பண்ண ஆரம்பிச்சவ, பச்சை தண்ணி கூட குடிக்கலை. விரதமிருந்து, 'பெயின்ட்' பண்ணிக் கொடுத்தா. அவ, சாமி,'' என, பெரிய வீட்டம்மா சொன்னதும், துாக்கி வாரிப்போட, அதிர்ந்தாள், அங்காளம்மை.

''அப்ப, அவ சாணி தட்ட வரலையா?'' என்றாள்.

''சாணி தட்டவா... லுாசாடி நீ? அவ சரஸ்வதிடி. சரஸ்வதியை போய் யாராவது சாணித் தட்ட சொல்லுவாங்களா? அவ அருமை உனக்குத்தாண்டி தெரியலை. பொட்டப் புள்ளைன்னு எளக்காரமா நினைக்கற.

''அவளை உட்கார வச்சு ஆரத்தி எடுக்கணும்டி. அவளை கூட்டிட்டு வராம, நீ மட்டும் வந்து நிக்கிறியே,'' என, பெரிய வீட்டம்மா சொல்ல சொல்ல, சின்ன பாப்பாவின் கை வண்ணத்தில் மெருகேறி ஜொலித்த பொம்மைகள், அவளைப் பார்த்து சிரித்தன.

குற்ற உணர்வோடு வீடு திரும்பிய போது, அந்த வீட்டு பால சரஸ்வதி, உடம்பு வலியில் சுருண்டு முனகிக் கொண்டிருந்தாள்.

சின்ன பாப்பாவை மடியில் போட்டு, தன்னையும் மீறி கதறினாள், அங்காளம்மை. இதை பார்த்த ராசுக் குட்டியும், குமரேசனும், 'அம்மா, அழாதம்மா... காசை நாங்க ரெண்டு பேரும் தான் எடுத்தோம். சத்தியமா, இனி திருட மாட்டோம்மா...' என, அங்காளம்மையின் தலையில் அடித்து, சத்தியம் செய்தனர்.

ஆர். சுமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us