PUBLISHED ON : ஜூன் 25, 2023

வசதி படைத்தோர்
விருந்துண்ணவும்
வறுமையில் உழல்வோர்
பட்டினி கிடக்கவுமான
இழிநிலை மாறட்டும்
சத்தான சரிவிகித உணவு
எல்லாருக்கும் கிடைக்கட்டும்!
வஞ்சகம் கொண்டோர்
வெற்றி பெறவும்
நேர்மையாய் உழைப்போர்
தோல்வி அடையவுமான
தாழ் நிலை மாறட்டும்
நியாயமான நல்ல தீர்ப்பு
எல்லாருக்கும் கிடைக்கட்டும்!
குறுமதி உடையோர்
பதவியில் அமரவும்
நற்சிந்தனை நிறைந்தோர்
வீட்டில் முடங்கவுமான
பாழ்நிலை மாறட்டும்
திறமைக்கான உரிய அங்கீகாரம்
எல்லாருக்கும் கிடைக்கட்டும்!
சுயநலம் நிரம்பியோர்
மகிழ்ச்சியுறவும்
பொது நலம் தேடுவோர்
புலம்பித் திரியவுமான
துன்ப நிலை மாறட்டும்
மனிதநேயம் தரும் இன்பம்
எல்லாருக்கும் கிடைக்கட்டும்!
ஜாதியை பூஜிப்போர்
வாழ்த்தப்படவும்
சமத்துவம் கற்பிப்போர்
துாற்றப்படவும்
மோச நிலை மாறட்டும்
மேலான சகோதரத்துவ உணர்வு
எல்லாருக்கும் கிடைக்கட்டும்!
பணத்தால் விலை பேசுவோர்
வாய்ப்புகளை பெற்றிடவும்
முறையாக காத்திருப்போர்
புறக்கணிக்கப்படவுமான
அற்பநிலை மாறட்டும்
மெய்யான சமூகநீதி
எல்லாருக்கும் கிடைக்கட்டும்!
— வெ. பாலமுருகன், திருச்சி.
