PUBLISHED ON : ஜூன் 25, 2023

ஜூன் 29 - தேசிய கை குலுக்கும் தினம்
உலகெங்கிலும், கை குலுக்குதல், பரஸ்பரம் இருவரிடையே நட்பை வெளிப்படுத்தும் சைகையாக பார்க்கப்படுகிறது. தற்போது வாழ்த்துகள் மற்றும் நன்றி தெரிவித்து மகிழவும் கை குலுக்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை, நாடு முழுவதும், தேசிய கை குலுக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கி.பி., 6ம் நுாற்றாண்டில், கிரேக்க நாட்டில், போர் வீரர்கள், தங்களது கைகளில் எந்தவிதமான ஆயுதமும் இல்லை. சமாதானமாக போகவே விரும்புகிறோம் என்பதை, ஒருவர், மற்றொருவர் கையை பற்றிக் கொள்ளும் சமாதானத்தின் சைகையாக ஆரம்பமானது, கை குலுக்கும் பழக்கம்.
பின்னர், இது எகிப்து நாட்டவரிடமிருந்து, ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, கை குலுக்கிக் கொள்ளும் வழக்கமாக, உலகம் முழுவதும் பரவியது.
எகிப்தியர்கள் யாரை சந்தித்தாலும், தம் வலது உள்ளங்கையை, மற்றவரின் வலது உள்ளங்கையுடன் பொருத்தி வணக்கம் தெரிவித்தனர்.
இப்போது, ஏறத்தாழ எல்லா இடங்களிலும், எகிப்து முறைப்படியே கை குலுக்கி வரவேற்கும் பழக்கம் உள்ளது. பின்னர், இதில் பல்வேறு வகையான கை குலுக்கும் முறைகள் தோன்றின. குறிப்பாக, ஏழு வகைகள் தற்போதும் வழக்கில் உள்ளது.
எத்தனை வகை கை குலுக்கும் முறைகள் இருந்தாலும், இதற்கு பொதுவாக நான்கு விதிகள் தான். அவை, வலது கையை மட்டுமே கை குலுக்க பயன்படுத்த வேண்டும்; இடது கையை பாக்கெட்களில் வைத்து கை குலுக்க கூடாது; ஆணோ, பெண்ணோ நின்று கொண்டு தான் கை குலுக்க வேண்டும்; கண்ணோடு கண் நோக்கி, முகத்தில் புன்முறுவலுடன் கை குலுக்க வேண்டும்.
கை குலுக்கும் பழக்கம், நம் ஆரோக்கியம் காக்கவும் உதவும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது, மரியாதை நிமித்தமாக கை குலுக்கும்போது, அதில் உள்ள உறுதி தன்மையை வைத்தே, குலுக்கிறவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கலாம் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
ஒருவர், மற்றொருவர் கையை உறுதியாக பற்றி கை குலுக்கினால், அவரின் இதயம் மற்றும் ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதாகவும், அதேவேளையில், ஏனோ தானோ என்று ஒருவர், தளர்வாக பற்றி கை குலுக்கினால், அவருக்கு இதயநோய் பிரச்னைகள் இருக்கலாம் என்பதை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம் என, லண்டன், 'பிளஸ் ஒன்' பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
அதேபோல், ஒருவர் கை குலுக்குவதை வைத்தே, அவரின் குணாதிசயங்களை கண்டறியலாம். மற்றவர்களை உறுதியாக பற்றி ஒருவர் கை குலுக்கினால், அவர் உறுதியானவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அதிக அழுத்தம் கொடுத்து கை குலுக்கும் நபர்கள், நீண்ட காலம் வாழ்வதும், அதேவேளையில், 5 கிலோ அழுத்தம் குறைந்து கை குலுக்கும் நபர்களுக்கு, 16 சதவீதம் ஏதாவது ஒரு காரணத்தால் பின் நாளில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிப்பதாக கூறுகின்றனர்.
கை குலுக்கும்போது அவர்களின் இறுக்கம், 38 கிலோ அளவில் இருந்தால், அவர்கள் பிசினசில் வெற்றிகரமாக வலம் வருவதுடன், நன்றாகவும் சம்பாதிக்கவும் செய்வர் என, லண்டன் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஞான தேவராஜன்
