PUBLISHED ON : செப் 17, 2023

லட்சியத்தை அடைய
அனுபவங்கள் அவசியமில்லை
தன்னம்பிக்கை உணர்வோடு
தொடரும் விடாமுயற்சியும்
தடைப்படாத பயிற்சியும்
இலக்கை எளிதாக
தொட வைக்கும்!
உச்சத்தில் கொடி கட்டி பறக்க
சிறகுகள் தேவையில்லை
நுணுக்கமான அறிவும்
நுாதன சிந்தனையும்
நினைப்பதை முழுமையாக
நிறைவேற்றி வைக்கும்!
வாழ்க்கையில் வசந்தம் வீச
தென்றல் காற்று தேவையில்லை
மன கசப்புகளை குழி தோண்டி
மண்ணுக்குள் புதைத்து
கள்ள கபடமில்லாத
உள்ளத்தோடு பேச
கவலைகள் யாவும்
தானாக கரைந்து
இனிமையான வாழ்க்கை உதயமாகும்!
சமூகத்தில் சுமூகமான
மாற்றத்தை கொண்டு வர
போராட்டங்கள் அவசியமில்லை
சிந்தனைக்கு உயிர் கொடுத்து
செயலில் வேகம் காட்ட
சாதிக்கும் வல்லமை அதிகரிக்கும்!
கொடியவனை வீழ்த்த
ஆயுதங்கள் தேவையில்லை
கோபத்தை கட்டுக்குள் வைத்து
பொறுமையோடு பயணித்தால்
எதிரி நம் காலடியில் வீழ்வான்!
நல்ல மனிதன் என்று பெயரெடுக்க
விளம்பரங்கள் அவசியமில்லை
கர்மத்தை விட்டொழித்து
தர்ம சிந்தனையை வளர்த்தால்
தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!
— எல். மூர்த்தி, கோவை.
