தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 34 வயது பெண். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். கல்லுாரியில் படிக்கும்போது, ஒருவனை காதலித்தேன். இரு வீட்டினருக்கும் தெரியாமல், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டோம். இரு வீட்டினரும், எங்கள் மீது கொலை வெறியில் இருக்க, போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தோம்.

இருவரும் மேஜர் என்பதால், இரு தரப்பினரையும் வரவழைத்து, சமாதானம் பேசினர், போலீசார். ஒரு வழியாக இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். அவர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார், கணவர்.

இருவருக்கும் திருமணம் ஆன விஷயத்தை வெளியில் எங்கும் சொல்லக் கூடாது. அவன் படிப்பை முடித்து, வேலைக்கு சேர்ந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம்.

அதுவரை, கிராமத்தில் இருக்கும் அவரது பாட்டி வீட்டில் நான் தங்கியிருக்க ஏற்பாடு செய்தனர், கணவரது பெற்றோர். கூடவே, 'என் மகனுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக் கூடாது...' என்று, சத்தியம் வாங்கிக் கொண்டனர்.

கிராமத்து வாழ்க்கை போரடித்ததாலும், அங்குள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் தவித்து, கணவரை போனில் அழைத்து பேசினேன்.

'சரியான வேலை கிடைக்கட்டும், பிறகு அழைத்துச் செல்கிறேன். நானே பெற்றோர் சம்பாத்தியத்தில் வாழ்கிறேன். இதில், குழந்தை பெற்றுக் கொண்டால், அவர்களிடம் தான் பணத்திற்கு கையேந்த வேண்டும்...' என, கூறி விட்டார்.

ஒரே ஆறுதலான விஷயம், அவரது பாட்டி மிகவும் நல்லவர். வேளா வேளைக்கு சுவையாக சமைத்துக் கொடுப்பார். பழங்கதைகள் பேசி, என்னை கண்கலங்காமல் பார்த்துக் கொண்டார்.

ஒருமுறை, அவரது பெற்றோர், கிராமத்துக்கு வந்து, பாட்டியிடம் நீண்ட நேரம் ஏதோ பேசி சென்றனர். பிறகு, பாட்டியிடம் விசாரிக்க, முதலில் எதுவும் சொல்லாமல், 'இனி, நீ உஷாராக நடந்து கொள்ளணும்மா...' என்றார்.

எனக்கு லேசாக சந்தேகம் வர, கணவருக்கு போன் செய்தேன்.

'நான் மேற்படிப்பு படிக்க, வெளி மாநிலத்துக்கு செல்கிறேன். இரண்டு ஆண்டுக்கு பிறகு உன்னை அழைத்துச் செல்கிறேன்...' என்றார். அப்போதும் என் மர மண்டைக்கு புரியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அங்கேயே கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக வேலை கிடைத்து, வீடு எடுத்து தங்கியுள்ளார். உடன் பணிபுரியும் பெண் ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாக, அரசல் புரசலாக தகவல் கிடைத்தது. சென்னைக்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து நியாயம் கேட்டேன்.

என்னை, அவதுாறாக பேசி, வீட்டிலிருந்து வெளியேற்றினர். வேறு வழியில்லாமல், அம்மா வீட்டுக்கு வந்தேன்.

என் வாழ்வு இப்படியாகி விட்டதே என்ற கவலையில், அப்பாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு, சிறிது நாளிலேயே இறந்து விட்டார். அம்மாவும், நானும் பரிதவித்துப் போனோம்.

'உன்னால், என் குழந்தைகள் பாதிப்பர். எனவே, வேறு எங்காவது சென்று விடுங்கள்...' என்றனர், அண்ணனும், அண்ணியும்.

நானும், அம்மாவும் வேறு வாடகை வீட்டுக்கு சென்று விட்டோம். நல்லவேளையாக, அப்பாவின் பென்ஷன் பணம் வர, சமாளித்து வருகிறோம்.

பாதியில் விட்ட படிப்பை அஞ்சல் வழி கல்வி மூலமாக தொடர்கிறேன். வீட்டிலிருந்தபடியே, பள்ளி குழந்தைகளுக்கு, 'ப்ராஜெக்ட் ஒர்க்' செய்து கொடுப்பது, அக்கம்பக்கம் வீட்டினருக்கு அவ்வப்போது சென்று சமைத்துக் கொடுத்து, சொற்ப வருமானம் ஈட்டி வருகிறேன்.

இதற்கிடையில், எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார், கணவர். சம்மதம் தெரிவிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். மிரட்டல் விடுகின்றனர், அவரது பெற்றோர்.

என் அம்மா, மிகவும் பயந்து போயுள்ளார். இந்த பிரச்னையிலிருந்து எப்படி மீண்டு வருவது. நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

'திருமணம் ஆன விஷயத்தை வெளியில் எங்கும் சொல்லக் கூடாது; என் மகனுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது...' என, 'டிவி' தொடர் வில்லிகள் போல, உன்னிடம் சத்தியம் வாங்கி இருக்கின்றனர், புகுந்த வீட்டார். படித்த நீ என்ன செய்திருக்க வேண்டும்?

செய்த சத்தியத்தை துாக்கி எறிந்து விட்டு, உனக்கும், அவனுக்கும் திருமணம் ஆனதை அனைவரிடமும் கூறி இருக்க வேண்டும்.

தாம்பத்யத்தின் ருசியை கணவனுக்கு காட்டி, அவனை மடக்கி போட்டிருக்க வேண்டும். நீ கர்ப்பம் தரித்து, குழந்தையும் பெற்றுக் கொண்டிருந்தால், அவர்களின் சதி நிறைவேறாமல் போயிருக்கும். கணவன் வீட்டார் சொன்னதை எல்லாம் தலையாட்டி பொம்மை போல் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாய்.

தலையை விட்டு வாலை பிடித்த கதையாய் கணவனையும், அவனது குடும்பத்தாரையும் உனக்கெதிராய் குயுக்தியாய் திட்டமிட, இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுத்துள்ளாய்.

மொத்தத்தில், நீ ஒரு கன்னி கழியா தீர்க்க சுமங்கலி.

புகுந்த வீட்டாரை விட, உன் காதல் கணவன், விஷமானவன். இரண்டே கால் ஆண்டுகள், உன்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டான்.

திருமண முயற்சியை கைவிட்டு, அவன் மீண்டும் உன்னுடன் வாழ்வான் என்பது, குதிரை முட்டை. விவாகரத்துக்கு தானே சம்மதம் கேட்கிறான். ஒரு நிபந்தனையோடு கொடுத்து விடலாம். 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேள். பேரம் பேசுவான், கணவன்.

ஐந்து லட்சத்திலிருந்து பேரத்தை ஆரம்பிப்பான். நீ, 20 லட்சத்திலேயே நில்.

'நஷ்டஈடு கொடுக்க மறுத்தால், உனக்கும், எனக்கும் திருமணமான விஷயத்தை வீடியோ பண்ணி, முகநுாலிலும், 'வாட்ஸ் ஆப்'பிலும் போடுவேன். கட்டிய மனைவி நானிருக்க இன்னொரு திருமணம் செய்ய முயற்சிக்கிறான், கணவன் என, போலீசில் புகார் செய்வேன்.

'நீ வேலை செய்யும் வெளிமாநில கல்லுாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு, உன் தகிடுதத்த வேலையை போட்டுக் கொடுப்பேன்.

'நீ திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிடம், உன் உண்மை சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக்குவேன்...' என, மிரட்டு.

உன் பித்தலாட்ட கணவன், பணத்தை எப்படியாவது தயார் பண்ணி கொடுத்து விடுவான். பணத்தை வாங்கியதும், நம்மை பிடித்த பீடை போனது என, நிம்மதி பெறு.

இவனிடமிருந்து நீ பெறும் விவாகரத்து, உனக்கான ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஆயிரம் கதவுகளை திறக்கும். மேலும் படித்து நல்ல வேலைக்கு போ.

அடுத்து காதல் என்ற பெயரில், எந்த சுயநல பேயிடமும் சிக்காதே.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து, 'செட்டில்' ஆகு.

— என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us